
எம்பொண்ணு தற்கொலை பண்ணிகிட்டான்னு அநியாயமா கேஸை முடிக்கப் பார்க்குறாங்க.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான பாச்சலூரில் விவசாயக் கூலித் தொழிலாளர்களான சத்தியராஜ் - ப்ரியா தம்பதியரின் 9 வயது மகள் ப்ரித்திகாவின் விடை தெரியாத மர்ம மரணம், அந்த மலைக் கிராமத்தை திகிலில் ஆழ்த்தியுள்ளது.
டிசம்பர் 15-ம் தேதி காலை... பாச்சலூர் சந்திப்பிலுள்ள கடைகளைச் சேர்ந்தவர்கள் சீட்டுக் குலுக்கல் நடத்தியிருக்கிறார்கள். அவர்கள் ப்ரித்திகாவை ராசியானவள் என்று அழைத்து சீட்டு எடுக்கச் சொல்லியிருக்கிறார்கள். பிறகு, வழக்கம்போல அக்கா, தம்பி இருவருடன் ப்ரித்திகா, அவள் படிக்கும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்குச் சென்றிருக்கிறாள். 11 மணிக்கு இன்டர்வெல் நேரத்தில் வெளியே வந்தவள், அக்கா, தம்பியுடன் சேர்ந்து ஸ்நாக்ஸ் சாப்பிட்டிருக்கிறாள். பிறகு வகுப்பறைக்குத் திரும்பவில்லை. மதியம் 12:45-க்கு லஞ்ச் பிரேக் விட்டபோதுதான், பள்ளிக்குப் பின்புறம் ப்ரித்திகா உடல் கருகிய நிலையில் கிடந்ததைப் பார்த்து மாணவிகள் அலறித் துடித்திருக்கிறார்கள். குற்றுயிரும் குலையுயிருமாக இருந்த அந்தப் பிஞ்சுக் குழந்தை மருத்துவமனைக்குத் தூக்கிச் செல்லும் வழியில் பரிதாபமாக இறந்துபோனாள்.

பாச்சலூருக்கு நாம் சென்றபோது அப்பகுதியைச் சேர்ந்த லட்சுமி என்பவர், சிறுமியின் இறப்பு குறித்து பல்வேறு சந்தேகங்களை எழுப்பினார்... ‘‘எரிஞ்சு கிடந்த குழந்தை பக்கத்துல தீப்பெட்டியும் சின்ன பாட்டிலும் கிடந்துச்சு. ஒரு சின்ன தீப்பொறி கையில பட்டாலே அலறுவோம். ஆனா, சிறுமியோட தொடைப்பகுதிக்கு மேல தலை வரைக்கும் தீயில கருகியிருக்குது. அப்ப அந்தக் குழந்தை கதறியிருக்க மாட்டாளா... அந்தச் சத்தம் பத்தடி தூரத்துல இருக்குற யாருக்கும் எப்படிக் கேக்காம போனது?’’ என்றார் ஆவேசமாக.
சிறுமியின் பெற்றோர் பேசும் நிலையிலேயே இல்லை... ஆறுதல் சொல்லி மெல்லப் பேச்சுக் கொடுத்தோம். ‘‘எம்பொண்ணு தற்கொலை பண்ணிகிட்டான்னு அநியாயமா கேஸை முடிக்கப் பார்க்குறாங்க. ஒம்பது வயசுப் புள்ளை எங்காச்சும்... அதுவும் தீக்குளிச்சு தற்கொலை பண்ணிக்குமா சார்? எங்க குடும்பத்துல சொத்துப் பிரச்னை இருக்குறதா போலீஸ்காரங்க கதை கட்டுறாங்க. வீட்டுல ஏன் மண்ணெண்ணெய், தீப்பெட்டி வெச்சுருக்கீங்கன்னு கேக்குறாங்க. அவங்களால குற்றவாளிகளைப் பிடிக்க முடியலைன்னா கேஸை சி.பி.ஐ-க்கு மாத்தட்டும். குழந்தை காணாம போனப்ப ஸ்கூல்ல ஒரு டீச்சர் மட்டும் காணலைன்னு மாணவிகள் சொல்றாங்க. அவர் எங்கே போனார்னு விசாரிக்கணும். பெண் ஆசிரியர் ஒருத்தர் குழந்தைகள்கிட்ட கடுமையா நடந்துக்கிட்டதாவும் சொல்றாங்க. `பயமா இருக்குது’ன்னு போன வாரம் ப்ரித்திகா எங்ககிட்ட சொன்னா. எல்லாத்தையும் போலீஸ்காரங்ககிட்ட சொல்லிட்டோம். அவங்கதான் உண்மையைக் கண்டுபிடிக்கணும்’’ என்றார்கள். பாச்சலூர் அருகே பல எஸ்டேட்கள் இருக்கின்றன. அங்கு வடமாநிலங்களைச் சேர்ந்த 500 பேர் தங்கி வேலை செய்துவருகின்றனர். அவர்களும் போலீஸாரின் சந்தேக வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டிருக்கிறார்கள்.

இது பற்றி விசாரித்துவரும் திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி விஜயகுமாரியிடம் பேசினோம். ‘‘பாச்சலூரிலுள்ள அனைவரிடமும் விசாரித்துவிட்டோம். பள்ளி ஆசிரியர்கள் மீது தவறு இல்லை என்றே தெரிகிறது. குழந்தைக்குப் பாலியல்ரீதியான தொந்தரவு கொடுக்கப்பட்டதற்கான ஆதாரங்களும் பிரேத பரிசோதனையில் கிடைக்கவில்லை. தீக்காயங்களால் மட்டுமே குழந்தை இறந்திருக்கிறார். எவ்வாறு குழந்தைக்குத் தீப்பற்றியது, யார் வைத்தார்கள் என்பதை விரைவில் கண்டறிந்துவிடுவோம்’’ என்றார்.
கொஞ்சமும் மனிதத்தன்மையே இல்லாத கொடூரர்கள்தான் இதைச் செய்திருக்க வேண்டும். எப்போது அவர்களைக் கண்டுபிடிக்கப்போகிறது போலீஸ்?