கன்னியாகுமரி மாவட்டத்தின் எல்லையாக, ஆரல்வாய்மொழியில் தொடங்கி ஆறுகாணி வரை மேற்குத்தொடர்ச்சி மலை உள்ளது. மாவட்டத்தைச் செழிப்பாக்கும் ஆறுகள், இந்த மலையில்தான் உற்பத்தியாகின்றன. மேற்குத்தொடர்ச்சி மலையிலுள்ள பாறைகளை அளவுக்கு மீறி உடைத்து விற்பனைசெய்யும் போக்கு, கடந்த 10 ஆண்டுகளாக குமரியில் அதிகரித்துவருகிறது.

கன்னியாகுமரியில், சுமார் 40-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் இருக்கின்றன. அனுமதி பெறாமல் பல கல்குவாரிகள் செயல்படுகின்றன என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதிகமான கல்குவாரிகள் அகஸ்தீஸ்வரம், பொற்றையடி, கோழிக் கோட்டுப் பொத்தை, சுருளோடு, குரங்காடி, சித்திரங்கோடு, களியல் பகுதிகளில் செயல்படுகின்றன. இதில், பல கல்குவாரிகளை கேரள நிறுவனங்கள் பினாமி பெயர்களில் எடுத்து நடத்துகின்றன. கேரளாவில் அதிகமான கல், ஜல்லி, எம்சாண்ட் மணல் தேவைகள் இருந்தும், இயற்கை வளங்களைச் சுரண்ட கேரள அரசு அனுமதி கொடுப்பதில்லை.
எந்தவிதக் கட்டுப்பாடுகளும் இல்லாமல், குமரி மாவட்ட கனிம வளங்களை கேரளாவுக்கு மாஃபியா கும்பல்கள் கடத்திவருகின்றனர். இதைப் பயன்படுத்திக்கொண்டு மணல் மாஃபியா கும்பல்கள் எம்சாண்ட் (பாறைப் பொடி மண்) என்னும் பெயரில் ஆற்று மணலைக் கடத்துவதும் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. ஒரு லாரி லோடில் 4 யூனிட் ஆற்று மணலை நிரப்பி, அதன் மேல் ஒரு யூனிட் எம்சாண்ட் மணலைப் போட்டு மூடி, கேரளாவுக்குத் தினமும் பல லாரிகள் செல்கின்றன. கனிம வளத்துறையினர் ரெய்டுக்குச் செல்வதற்கு, துறைக்குச் சொந்தமாக வாகனங்கள் இல்லை. அதனால் கனிம வளத்துறை அதிகாரிகள் ரெய்டுக்குச் செல்வதில்லை என்கிற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
தற்போது, வர்த்தகத் துறைமுகம் கட்டுமானப் பணிக்கும், கடலரிப்பைத் தடுக்க அமைக்கப்படும் தூண்டில் வளைவுக்காகவும், மலைகள் பெருமளவில் உடைக்கப்படுகின்றன. குமரி மாவட்டத்தில் பல பொறியியல் கல்லூரிகள் மலையடிவாரத்தில் அமைந்துள்ளன. அவை, சத்தமில்லாமல் மலைகளை விழுங்கிவருகின்றன. இதனை அரசு கண்டுக் கொள்வதே இல்லை. இதில் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் மாவட்ட நிர்வாகத்துக்கும் பங்கு இருப்பதாக சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் சொல்கிறார்கள். கனிம வளங்கள் அளவுக்கு அதிகமாகச் சுரண்டப்படுவதோடு, கடத்தும் சூழலும் உருவாகிவிட்டது. இதை, வனத்துறையும் கண்டுகொள்வதில்லை. இதே நிலைமை நீடித்தால், மலைவளம் குறைந்து, குமரியில் தண்ணீருக்குத் திண்டாடும் சூழல் உருவாகும் அபாயம் உள்ளது.