விகடன் வரவேற்பறை
ஆமென் : சிஸ்டர் ஜெஸ்மி வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, நாகர்கோவில்-1 பக்கங்கள்: 224 விலை:

150

நவநாகரிக உடைகளுடன் வலம் வந்த ஓர் இளம் பெண் துறவறம் பூண்டு வாழ முடிவு செய்தது, அவர் வாழ்க்கையில் சந்தித்த இன்னல்கள் என்று அத்தனை விஷயங்களையும் சிஸ்டர் ஜெஸ்மி தன் சுயசரிதையில் எந்த ஒளிவு மறைவும் இன்றிக் கூறி இருக்கிறார். மடங்களில் நடக்கும் பாலியல் அத்துமீறல்கள், ஊழல்கள் என அனைத்தின் மீதும் வெளிச்சம் பாய்ச்சுகிறார். 'கட்டாயக் கீழ்ப்படிதல்கள் தொலைந்துபோகட்டும்’ என்று ஜெஸ்மி தனது ஆசிரியப் பணியின் துவக்கம் குறித்துச் சொல்கிறார். ஆனால், இந்த கட்டாயக் கீழ்ப்படிதல்கள் இவருடைய துறவற வாழ்க்கை முழுதும் தொடர்ந்துகொண்டே இருந்தது சோகம்தான்!
தீவிரவாதம் இயக்கம்: அமல்ராஜ் வெளியீடு: ஏ.ஜே. ஃபிலிம்ஸ்

'ஆயுதம் வேண்டாம்... அமைதி போதும்!’ என்று வலியுறுத்தும் குறும்படம். ஐந்து தீவிர வாதிகள், ஒரு பணக்காரரின் மகளைக் கடத்துகிறார்கள். கடத்தல்காரர்களுள் ஒருவர் அந்தப் பெண்ணைக் கற்பழிக்க முயற்சிக்க, அதை இருவர் தடுக்க... கும்பலுக்குள் மோதல். என்ன நடக்கிறது என்பது கிளைமேக்ஸ். 'கடவுளோட கஸ்டமர் கேர் நம்பர் என்ன? யாரு பாவி, யாரு புண்ணியவான்னு கேட்போம்!’ இப்படிச் சில இடங்களில் கடந்துபோகும் வசனங்கள் கவனிக்கவைக்கின்றன. 'அஹிம்சையே ஆயுதம்’ என்கிற இயக்குநரின் நோக்கம் ஓ.கே. ஆனால் தீவிரவாதிகள், பொதுமக்கள் பற்றிய எந்தப் புரிதலும் இல்லாமல் படம் எடுத்து இருப்பதுதான் காமெடி!
நலம்... நலமறிய ஆவல்!
http://thamilmaruththuvam.blogspot.com

உடல்நலம் குறித்து நல்ல தமிழில் தகவல் தரும் வலைப்பூ. அப்பன்டிசைட்டிஸ், டெங்கு காய்ச்சல், நீர்க்குடம் உடைதல், தொப்புள்கொடி வெளியேற்றம் போன்ற சிக்கல்கள்பற்றி எளிமையான விளக்கங்கள் சொல்கிறார்கள்!
வரலாறு மிக முக்கியம்! http://www.varalaaru.com

இணையம் வழி வளரும் வரலாற்றுப் பயணம் என்ற அறிமுகத்தோடு நம்மை வரவேற்கும் தளம். இளைஞர்கள் ஆறு பேர் சேர்ந்து நடத்தும் இந்தத் தளத்தில் வரலாற்றுத் தகவல்களை இணைய இதழாகப் படைக்கிறார்கள். கோயில், சிற்பங்கள், இசை, இலக்கியம், மொழி என வரலாற்றின் வழித்தடங்கள் அனைத்தையும்பற்றி ஆய்வு செய்து எழுதுகிறார்கள் படைப்பாளிகள்!
மங்காத்தா இசை: யுவன்ஷங்கர் ராஜா வெளியீடு: சோனி மியூஸிக் விலை:

149

அஜீத் - வெங்கட் பிரபு - யுவன்ஷங்கர் ராஜா... பெரும் எதிர்பார்ப்பைத் தூண்டும் கூட்டணி. கோட் சூட், கூலிங் கிளாஸ் சகிதம் மைல் கணக்கில் அஜீத் நடக்கும் உற்சாகத்தை அளிக்கிறது 'மங்காத்தா’ தீம் மியூஸிக். ஏற்கெனவே 'சிங்கிளாக’ வெளியான 'விளையாடு மங்காத்தா’ பாடலின் ஃபாஸ்ட் பீட் வெர்ஷனில் டிஸ்கோ ஹால் அதிரடிகளுக்கு ஈடு கொடுக்கும் துடிப்பு. நிரஞ்சன் பாரதியின் கிரீட்டிங் கார்டு காதல் வரிகளால் வசீகரிக்கிறது 'கண்ணாடி நீ - கண் ஜாடை நான்’ பாடல். 'நூலாடை நிக்காத இடுப்பு - நீ வந்து சோறாக்கும் அடுப்பு!’ என்று 'வாடா பின் லேடா’ பாடலில் இறங்கி அடித்திருக்கிறார் வாலி. டமுக்கு டப்பா, டிமுக்கு டிப்பா இசைதான் 'மச்சி ஓப்பன் தி பாட்டில்’ பாடலின் ஹைலைட். உறுத்தாமல் மென்மையாகக் கடக்கிறது 'என் நண்பனே’ பாடல். 'இது எங்க பல்லேலக்கா... நீ கேளு ங்கொக்காமக்கா...’ பாடல் முழுக்க சேட்டு வீட்டுக் கல்யாண ஊர்வல உற்சாக இசை. பாடலில் ஒலிக்கும் குரல்... அட, அழகிரி வீட்டு மருமகள் அனுஷா தயாநிதி!
'தல’ தப்பாத ஆட்டம்!