சென்னை: பஸ் ஓட்டையில் விழுந்து சிறுமி ஸ்ருதி (7) உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட சென்னை சேலையூர் சீயோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியை ஏன் மூடக் கூடாது? என்று கேட்டு மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சேலையூரில் செயல்படும் இப்பள்ளியில் 2-ம் வகுப்பு படித்த ஸ்ருதி,நேற்று முன்தினம் பள்ளி பஸ்ஸில் வீடு திரும்பும்போது இருக்கைக்கு கீழிருந்த ஓட்டையில் தவறி விழுந்து உயிரிழந்தாள். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.சிறுமியின் குடும்பத்துக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

இந்நிலையில்,இந்தச் சம்பவம் தொடர்பாக பத்திரிகைகளில் வெளியான செய்திகளை அடிப்படையாகக் கொண்டு தாமாகவே முன்வந்து சென்னை உயர் நீதிமன்றம் வழக்கு தாக்கல் செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால், நீதிபதி டி.எஸ். சிவஞானம் ஆகியோர்,
"பள்ளி பஸ்ஸினுள் இருந்த ஓட்டை வழியே சிறுமி ஸ்ருதி கீழே விழுந்து உயிரிழந்தார் என்ற துயரமான செய்தி எல்லா நாளிதழ்களிலும் வந்துள்ளது. மண்டலப் போக்குவரத்து அலுவலக அதிகாரிகளால் 15 நாள்களுக்கு முன்பு தகுதிச் சான்றிதழ் (எஃப்.சி.) வழங்கப்பட்ட பஸ்ஸில் இந்த சம்பவம் நடந்திருப்பது மிகவும் வருத்தமளிக்கிறது.
பள்ளியின் நிர்வாகிகள்,பஸ்ஸை இயக்குவதற்கு தகுதிச் சான்றிதழ் அளித்த மண்டலப் போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ( இன்று ) காலை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும்" என்று உத்தரவிட்டிருந்தனர்.
இதனிடையே, இச் சம்பவத்தில் தொடர்புடையதாகக் கருதப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள பள்ளியின் தாளாளர் என். விஜயன் (60), பஸ் டிரைவர் பி. சீமான் (58), பஸ் உரிமையாளர் யோகேஸ்வரன் (30), கிளீனர் சண்முகம் (18) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆர்.டி.ஓ. சஸ்பெண்ட்
மேலும் விபத்துக்கு காரணமான பள்ளி பஸ்ஸுக்கு தகுதிச் சான்று வழங்கிய தாம்பரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் (ஆர்.டி.ஓ.) பட்டப்பாசாமி மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜசேகர் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.அவர்களில், ராஜசேகர் நேற்றிரவு இரவு கைது செய்யப்பட்டார்.