ஆரோவில் அலறல் தடுக்கச் சென்றால் தாக்குகிறார்கள்!
புதுச்சேரி என்றாலே சுற்றுலா பயணிகளுக்கு நினைவுக்கு வரும் இடங்களில் ஆரோவில்லும் ஒன்று. 'உலகத்தில் எல்லா நாட்டு மக்களும் வசிக்க வேண்டும். பணம், பதவிக்கு ஆசைப்படாமல் அறிவு, ஞானத்தைப் பகிர்ந்துகொள்ள வேண்டும். மனித குலத்துக்கு முன்னுதாரணமாக இந்த இடம் இருக்க வேண்டும்’ என்ற நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டதுதான் ஆரோவில். இப்போது அது அந்த நோக்கத்தில் இருந்து விலகிச் செல்வதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுக்காவில் உள்ள கிராமங்களுக்கு இடையில் இடத்தைத் தேர்வுசெய்து ஆரோவில் என்ற இந்தக் கனவு நகரத்தை உருவாக்கியுள்ளனர். அந்தக் கிராமங்களில் உள்ள புறம்போக்கு நிலங்களும் ஆரோவில் வாசிகளால் ஆக்கிரமிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. 'கோயில் வழியை ஆக்கிரமித்து வேலி அமைத்த வெளிநாட்டினரைக் கேள்வி கேட்ட ஐந்து பெண்கள் பாலியல்ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளனர்’ என்று இப்போது எழுந்திருக்கும் விவகாரம், புதுச்சேரியில் திகுதிகுப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆரோவில் தமிழ் மக்களுக்குக்காகக் குரல் கொடுத்துவரும் திருநங்கை கல்கி நம்மிடம்

''குயிலாப்பாளையம், கோட்டக்கரை, ஆலங்குப்பம் இந்த மூன்று கிராமங்களுக்கு இடையேதான் ஆரோவில் நகரம் உருவாகியுள்ளது. இந்த நகரத்தை உருவாக்க 30 வருடங்களுக்கு முன் சொற்ப விலைக்கு மக்களிடம் இருந்து நிலங்களை வாங்கிக் குவித்தனர். கொஞ்ச நாட்களில் வாங்கிய இடம் போதவில்லை என்பதால், கிராமப் புறம்போக்கு நிலத்தையும் ஆக்கிரமித்து வேலி அமைத்து ஆரோவில் இடமாக மாற்றிக்கொண்டனர். ஆரோவில்வாசிகள் யாரும் ஆரோவில்லில் இடம் வாங்கக் கூடாது என்ற விதி உள்ளது. ஆனால், ஆரோவில்வாசிகள் பலரும் ரகசியமாக இடங்களை ஆக்கிரமித்துள்ளனர்.
தொழில் தொடங்குவதற்காக சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களின் 133 ஏக்கர் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்துள்ளனர். கிராமத்து வாய்க்கால், ஏரி, கோயில் நிலம், விளையாட்டு மைதானம் என ஒன்றையும் விட்டுவைப்பது இல்லை. அந்தக் கிராம மக்களுக்கு ஆடு மாடு மேய்ப்பதுதான் பிரதான தொழிலாக உள்ளது. பொது இடங்களை ஆரோவில்வாசிகள் வேலி அமைத்துள்ளதால், தங்கள் கால்நடைகளை மேய்க்க முடியாத நிலையில் உள்ளனர். போலீஸார் மற்றும் அரசு அதிகாரிகளால்கூட ஆரோவில்வாசிகளைக் கேள்வி கேட்க முடியவில்லை. ஆக்கிரமிப்புகளைத் தடுக்கச் சென்ற பெண்களையும் வெளிநாட்டினர் தாக்கும் அவலநிலை ஆரோவில்லில் உள்ளது'' என்றார்.
வெளிநாட்டினரால் தாக்கப்பட்ட கோட்டக்கரை கிராமத்துப் பெண்களில் ஒருவரான சுமதி நம்மிடம், ''கோட்டக்கரை கிராமத்துல இருக்கற இளங்காளியம்மன் கோயிலுக்குப் போறதுக்கு பொதுவழி இருக்கு. இந்த வழியாதான் காலங்காலமா நாங்க கோயிலுக்குப் போயிட்டு இருக்கோம். ஆனா, திடீரென்று ஃபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சத்பிரேம் என்கிறவர், அந்தப் பாதையில் வேலி போட்டு அடைச்சிட்டார். வேலை முடித்துவிட்டு அந்த வழியா வீட்டுக்குப் போன எங்களை, 'இது ஆரோவில்லுக்குச் சொந்தமான இடம். இனி யாரும் இந்த வழியா போகக் கூடாது’ன்னு சொல்லி பாதையில முள்ளைப் போட்டாரு. இதனால நாங்க எல்லாரும் அவரை எதிர்த்துக் கேட்டோம். ஆனா, அவரு எங்க மேல தப்பா கை வெச்சது மட்டுமில்லாம, சேலையைப் பிடிச்சு இழுத்து அடிச்சாரு. எங்களால ஒண்ணுமே பண்ண முடியலை. இதைப் பார்த்து ஊர் மக்கள் திரண்டு வந்தவுடனே, அங்க இருந்து தப்பிச்சு போயிட்டாரு.
எல்லாரும் ஆரோவில் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போயி புகார் கொடுத்தோம். எஃப்.ஐ.ஆர் புக் தீர்ந்து போச்சுன்னு சொல்லி போலீஸார் எங்க புகாரை ஏத்துக்கல. மறுநாள் காலையில போயி கேட்டதுக்கும் சரியான பதில் வரல. அதனால, நாங்க எல்லாரும் சேர்ந்து சாலைமறியல் பண்ணோம். அதுக்கப்புறம்தான் எஃப்.ஐ.ஆர் போட்டாங்க. ஆனா, இன்னும் அந்த சத்பிரேமை கைது பண்ணல. இதுவே ஒரு தமிழ் பையன் வெளிநாட்டு பொண்ணு மேல கை வெச்சிருந்தா போலீஸ்காரங்க சும்மா இருந்திருப்பாங்களா? எங்களுக்கு நியாயம் கிடைக்கணும்'' என்றார் ஆவேசமாக.
இதுகுறித்து ஆரோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாபுவிடம் கேட்டபோது, ''ஆரோவில்வாசிகளுக்கும் கிராம மக்களுக்கும் இடையே உள்ள சாதாரணப் பிரச்னையைப் பெரிதாக்குகின்றனர். சாலைமறியல் செய்து மாஸ் காட்டி எஃப்.ஐ.ஆர் போட வைத்துவிட்டனர். புகார் குறித்து விசாரித்து வருகிறோம்'' என்றார் சுருக்கமாக.
ஆரோவில் செயற்குழு உறுப்பினர் அருணிடம் பேசியபோது, ''வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு தனிநபர் உள்ளூர் பெண்களைத் தாக்கினார் என்பதை நம்ப முடியுமா? சத்பிரேம் அப்படிப்பட்ட ஆள் இல்லை. உள்ளூர் மக்களுக்கு நிறைய உதவிகளை செய்து வருகிறார். ஆரோவில்லுக்குச் சொந்தமான அனைத்து இடமும் பட்டா இடம். இடம் குறித்து உள்ளூர் மக்களுக்கு ஏதேனும் ஆட்சேபணை இருந்தால், ஆரோவில் நிர்வாகத்திடம் முறையிடலாம். அதை விடுத்து தேவையில்லாத பிரச்னையை உருவாக்குகின்றனர்'' என்றார்.
மக்களுக்கு நியாயம் கிடைக்குமா?
- ஆ.நந்தகுமார்
படங்கள்: ஜெ.முருகன், தே.சிலம்பரசன்