தீர்ப்புகள் திருத்தப்படலாம்!
##~## |
'' 'சட்டப் பேரவையில் சோனியா காந்தி, மன்மோகன் சிங், ராகுல் காந்தி ஆகியோரை விமர்சனம் செய்தது சரியில்லை’ என்று தங்கபாலு கொதித்து இருக்கிறாரே?''
''அதுசரி, 'தமிழ்நாட்டில் இருக்கும் எங்களை எல்லாம் விட்டுவிட்டு, டெல்லியில் இருப்பவர்களை விமர்சனம் செய்யலாமா? அப்படி விமர்சனம் செய்யக் கூடாத அளவுக்கு நாங்கள் என்ன சாதனை பண்ணாமலா இருக்கிறோம்? சமீபத்தில்கூட சட்டை கிழியும் அளவுக்குச் சண்டை போட்டுக்கொண்டோமே’ என்பது தங்கபாலுவின் உள்மன எண்ணமாக இருக்கும்.''
- தீ.அசோகன், சென்னை-19.

'' 'தமிழர்கள் என்பதாலேயே மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும்’ என்று திடீர் எனக் குரல் எழுப்புவது சரிதானா?''
''உங்கள் கேள்வியின் அடிப்படையே தவறு. 'திடீர்’ என்று தமிழர்கள் தவறாக விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்ப்பவர்கள் அல்லர். செய்யாத குற்றத்துக்காக கோவலனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதையும் அதைச் சுட்டிக்காட்டி கண்ணகி ஆவேசமாக வாதாடியதையும் 'யானோ அரசன் யானே கள்வன்’ என்று பாண்டிய அரசன் குற்ற உணர்வில் மாண்டதையும் காப்பியமாகப் பல நூற்றாண்டுகளுக்கு முன் படைத்துக் காட்டிய வர்கள் தமிழர்கள். மரண தண்டனைக்கான நிகழ்தகவில் எப்போதும் தவறான தீர்ப்பு எழுதும் சாத்தியமும் உண்டு. மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட பிறகு, தவறான தீர்ப்பைத் 'திருத்த’ முடியாது என்பதற்கு மகத்தான உதாரணம், கோவலனின் கொலை!''
- தமிழ் ஜிப்ரான், காரைக்கால்.
''சொல் முக்கியமா, செயல் முக்கியமா?''
''இரண்டும்தான். சமயங்களில் ஒரு சொல், செயலைவிட வீரியமானதாகிவிடுகிறது- சாதகமாகவோ, பாதகமாகவோ! அதனால்தான் 'ஒவ்வொரு சொல்லுக்கும் பின்னால் ஓர் அரசியல் இருக்கிறது’ என்றார் கார்ல் மார்க்ஸ். சமீபத்திய உதாரணம் ஒன்று, ராஜீவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பேரறிவாளன் உள்ளிட்டவர்களைத் தூக்கில் போட வேண்டும் என்று தங்கபாலு பேட்டி அளித்தார். அப்போது'ராஜீவ் கொலையாளிகளைத் தூக்கில் போட வேண்டும் என்கிறீர்கள். ஆனால், இலங்கைத் தமிழர்களைக் கொடூர மாகக் கொலை செய்த ராஜபக்ஷே வுக்கு இந்தியாவில் காங்கிரஸ் வரவேற்பு கொடுக்கிறதே?’ என்று பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு தங்கபாலு அளித்த பதில், 'இலங்கை வன்முறையை காங்கிரஸும் கண்டித்து உள்ளது. எங்கு படுகொலை நடந்தாலும் அவர்களுக்கு எதிராக காங்கிரஸ் குரல் கொடுக்கும்’. நன்றாகக் கவனியுங்கள், இலங்கையில் நடந்தது வெறும் 'வன்முறை’ மட்டும்தானாம். ஆனால், ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதோ 'படுகொலை’யாம். லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டதை 'வன்முறை’ என்று சுருக்கும் சொல்லும் வன்முறையானதுதானே?''
- ஆதிரை, காயல்பட்டினம்.
