என் விகடன் - திருச்சி
என் விகடன் - கோவை
ஸ்பெஷல் -1
Published:Updated:

டீன் கொஸ்டீன்

நடத்துநர் நடந்துவரத் தேவை இல்லையா?

##~##

ராஜு, சென்னை-24.

''நகரப் பேருந்துகளில் கூட்ட நெரிசலில் சிக்கித் திணறும்போது டிக்கெட் எடுக்க மிகவும் சிரமமாக இருக்கிறது. நடத்துநர் அவர் இருக்கையை விட்டு எழுவதே இல்லை. நடந்துநர்கள் எழுந்து வந்து டிக்கெட் கொடுக்கத் தேவையில்லை என்று ஏதேனும் சட்டம் இருக்கிறதா என்ன?''

எஸ்.பூபதி, மேலாண்மை இயக்குநர்,
சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம்.

டீன் கொஸ்டீன்

''சமீபத்தில்தான் ஒரு சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறோம். அதில் பயணிகளின் நலன் கருதி நடத்துநர்கள் இனி இருக்கையில் அமர்ந்துகொண்டே டிக்கெட் தரக் கூடாது. எந்தச் சூழ்நிலையிலும் எழுந்து சென்றுதான் டிக்கெட் தர வேண்டும் என்று அதில் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. ஆகையால், இனி உங்களுக்கு அந்தச் சிரமங்கள் இருக்காது. அதோடு, இந்தப் பிரச்னை குறித்த உங்கள் குறைகளையும் ஆலோசனைகளையும் 9445030516, 9383337639 என்ற செல்பேசி எண்களிலோ, edp@mtcbus.org என்ற தளத்திலோ தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். உங்கள் பயணம் இனிதாகுக!''

கோ.செல்வ ரமேஷ், பெங்களூரு.

''எனக்கு நல்ல அடர்த்தியான கேசம். பல இடங்களுக்கு பைக்கில் அலைந்து திரிய வேண்டிய வேலை. சமீப நாட்களாக என் முடி மிகவும் கடினமாகிவிட்டது. சீப்புக்கு அடங்காமல் தன் இஷ்டத்துக்கு நிற்கிறது. 'ஹேர் ஸ்பா சிகிச்சை எடு’ என்கிறார்கள் நண்பர்கள். வீட்டிலேயே செய்துகொள்ளக்கூடிய சிகிச்சைகள் ஏதேனும் இருக்கின்றனவா?''

வசுந்தரா, அழகுக் கலை நிபுணர்.

''கேசம் கடினமாவதற்குச் சரியான தூக்கம் இன்மை, ஊட்டச்சத்துக் குறைவு, மன அழுத்தம் ஆகியவைதான் பெரும்பாலும் காரணமாக இருக்கும். சிலருக்கு அரிதாக  உப்புத் தண்ணீர், ஷாம்பு ஆகியவை பாதிப்பை உண்டாக்கும். மனசை எப்பவும் சந்தோஷமா வெச்சுக்கப் பழகுங்க. உடம்புக்கு நல்ல சாப்பாடும் தூக்கமும் முக்கியம். அதை சரியாக் கடைப்பிடிச்சாலே உங்க பிரச்னைக்குத் தீர்வு நிச்சயம். வாரம் ஒரு முறை கேசத்துக்கு சூடான ஆலிவ் எண்ணெய் மசாஜ் கொடுத்துட்டு பிளாஸ்டிக் ஹேர் மாஸ்க் அணியுங்கள். 10 நிமிஷத்துக்குப் பின் மென்மையான ஷாம்புவால் அலசிய பிறகு கண்டிஷனர் போட்டுக் கழுவுங்கள்!''

டீன் கொஸ்டீன்

பிரியதர்ஷினி, கரூர்.

''19 வயது கல்லூரி மாணவி நான்.  வெள்ளை நிற ஆடைகளின் மேல் அலாதி பிரியம் எனக்கு. ஆனால், அந்நிற உடைகளை உடுத்தும்போது அதற்குத் தகுந்த உள்ளாடைகளைத் தேர்வு செய்வதில் சொதப்பிவிடுகிறேன். டிப்ஸ் கொடுங்களேன்?''

வாசுகி பாஸ்கர்
  ஆடை அலங்கார நிபுணர்.

''வெள்ளை நிற ஆடைகள் எல்லாருக்கும் அழகாகத்தான் இருக்கும். அதற்கேத்த பாட்டம், உள்ளாடைகளை அமைத்தால்! சல்வாராக இருந்தால் அந்த நிறத்திலேயே லைனிங் கொடுக்கலாம். ஆனால், லைனிங் எதுவரை என்பது மெட்டீரியலைப் பொறுத்து அமைய வேண்டும். வெள்ளை நிற உள்ளாடை அணிந்து அதை அப்பட்டமாக வெளிக்காட்டுவதைவிட, சருமத்தின் நிறத்துக்கு ஏற்ப உள்ளாடைகள் அணிவதுதான் சிறந்தது. மற்றபடி, லோ நெக் ஷர்ட் வகைகளாக இருந்தால், வெள்ளை நிறத்திலோ அல்லது அதற்கு கான்ட்ராஸ்ட்டான கலரிலோ டியூப் டாப் அணிந்துகொண்டால், குனியும் போது ஏற்படும் அசௌகரியங்களைத் தவிர்க்கலாம்!''

ப்ரியா ஜெகதீஷ்குமார்,  நாகர்கோவில்.

''ஆறு மாசக் குழந்தைக்குத் தாய் நான். தாய்ப் பால் பற்றாக்குறையால் குழந்தைக்குப் பசும்பால் கொடுக்கச் சொல்கிறார்கள். இங்கே பாக்கெட் பால் மட்டும்தான் கிடைக்கிறது. பாக்கெட் பால் குழந்தைகளுக்கு ஜீரணம் ஆகாது என்று பயமுறுத்துகிறார்கள். அதோடு, குழந்தை சிறுநீர் கழிக்கும்போது அழுகிறாள். 'சூடு பிடித்துள்ளது’ என்கிறார்கள் பெரியவர்கள். ஏன் சூடு பிடிக்கிறது? அதை எப்படித் தவிர்ப்பது?''

கமலா செல்வராஜ்
குழந்தைப் பேறு சிறப்பு மருத்துவர்.

''குழந்தை பிறந்து ஆறு மாதங்களுக்குப் பிறகு பசும்பால் கொடுக்கலாம். ஆனால், பாக்கெட் பால் ஒரு பசுவின் பால் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. பல பசுக்களின் பால் கலந்திருக்கும். முடிந்த வரை அலைந்து திரிந்தேனும் கறந்த பசுவின் பாலைக் கேட்டு வாங்குங்கள். ஆரம்பத்தில் பசும்பாலில் பாதிக்குப் பாதி தண்ணீர் கலந்து கொடுங்கள். நாளடைவில் குழந்தை பசும்பால் குடிக்கப் பழகிய பிறகு, தண்ணீர் கலப்பதைக் குறைத்துக்கொள்ளலாம். வேறு வழியே இல்லை... பாக்கெட் பால்தான் கொடுக்கும்

டீன் கொஸ்டீன்

சூழ்நிலை என்றால், நீல நிறக் கவரில் விற்கப்படும் ஆவின் பால் மட்டும் கொடுங்கள். அதிலும், பாதி பால் பாதி தண்ணீர் என்கிற அளவில். ஆனால், ஒரு குழந்தைக்குக் குறைந்தது ஆறு மாதம் வரை தாய்ப் பால் அவசியம். அதற்குப் பிறகு ஒரு நாளில் நான்கு முறை பால் தந்துவிட்டு, மற்ற நேரங்களில் ஆரஞ்சு, கேரட் ஜுஸ், கேழ்வரகுக் கஞ்சி என்று குடிக்கப் பழக்கலாம்.

சிறுநீர் கழிக்கும்போது ஆண் குழந்தை அழுதால் உறுப்பு இறுக்கமாக வீங்கி இருக்கிறது என்று அர்த்தம். தைமோசிஸ் என்று இதற்குப் பெயர். அதைச் சுத்தம் செய்துவிடலாம். பெண் குழந்தை அழுதால் உறுப்பில் எரிச்சல் என்று அர்த்தம். இதையும் எளிதில் சரிசெய்துவிடலாம். தக்க குழந்தைகள் நல மருத்துவரை உடனே கலந்தாலோசியுங்கள்!''