விகடன் வரவேற்பறை
செவக்காட்டுச் சித்திரங்கள் வே.ராமசாமி
வெளியீடு: கலப்பை, 9/10, இரண்டாம் தளம், இரண்டாம் தெரு, திருநகர், சென்னை - 26.
பக்கங்கள்: 208 விலை:

130

செவக்காட்டு மனிதர்களின் வெவ்வேறு வாழ்நிலைகளை, பண்பாட்டுக்கூறுகளை, அவர்களின் மொழியிலேயே பதிவு செய்யும் கதைகள்! கூமுட்டை, டக்கர் போன்ற கதைகளும் இந்தக் கதைகளில் உலா வரும் மிட்டாயி நாயக்கர் போன்ற பாத்திரங்களும் செவக்காட்டு மண்ணுக்கே உரியவை. செம்மறி, வெள்ளாடு என்று கதை முழுக்க, செம்மறியாட்டுக்கும் வெள்ளாட்டுக்கும் இடையிலான வித்தியாசங்களையும் மேய்ச்சலின் நுட்பங்களையுமே பேசுகிறது. மக்கள் வெளியில் புழங்கும் கதைகளைச் சொல்லும் கதைசொல்லி, தன் எழுத்துத் திறத்தால் 'படைப்பாளி’யை விஞ்ச முடியும் என்பதை நிரூபிக்கிறது 'வர்ணப்புள்ளிச் சேவல்’ கதை. பிற பகுதி வாசகர்களின் புரிதலுக்கேனும் செவக்காடு பகுதி குறித்த அறிமுகத்துக்குச் சில பக்கங்களை ஒதுக்கியிருக்கலாம் வே.ராமசாமி!
எங்கெங்கு காணினும்
இயக்கம்: ஷக்தி பாரதி வெளியீடு: பாரதப் புதல்வர்கள்

காதல்தான் களம். ஆரம்பமும் முடிவும் இல்லாமல் இரு வேறு கேரக்டர்கள், அவர்களின் வாழ்க்கைச் சூழல் ஆகியவற்றை நான்-லீனியராகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர். 'நான் பூமிக்கு பொழைக்குறதுக்காக வரலை. வாழ்றதுக்காக வந்தேன்’, 'எல்லாரும் வீட்டு வாசல் வரைக்கும்தான் யோசிக்குறாங்க... ரோட்ல மேடு, பள்ளம் இருக்குறது யாருக்கும் தெரியலை’ என்பது போன்ற கூர்மையான வசனங்கள் கவனிக்கவைக்கிறது.படைப்பின் வித்தியாசம் ஈர்க்கிறது!
கேன்சரா...பயம் வேண்டாம்!
www.caring4cancer.com/

கேன்சர் நோய் பற்றிய பயம் போக்கும் தளம். நோயின் வகைகள், அதன் அறிகுறி, உண்ண வேண்டிய உணவுகள், சிகிச்சை முறைகள், பாதிக்கப்பட்டவர்கள் மீண்ட பாசிட்டிவ் கதைகள் எனத் தகவல்கள் நிரம்பி வழிகின்றன!
19. டி.எம்.சாரோனில் இருந்து...
www.bavachelladurai.blogspot.com

எழுத்தாளர் பவா செல்லத்துரையின் வலைப்பூ. தான் சந்தித்த மனிதர்களை, தனக்கு நேர்ந்த அனுபவங்களை எந்த ஓர் அலங்காரமும் இன்றி மிக எளிமையாகப் பகிர்ந்து கொள்கிறார் பவா. பாலுமகேந்திரா வுக்கும் தனக்குமான நட்பின் அடர்த்தியைச் சிலாகித்து விவரிக்கும் இடங்களில் நாமும் அவர்களுடன் நண்பர்கள் ஆக மாட்டோமா என்ற ஏக்கத்தை உண்டாக்கத் தவறவில்லை!
உச்சிதனை முகர்ந்தால்...
இசை: டி.இமான் வெளியீடு: ஜங்லி மியூஸிக் விலை:

75

பல்ராம், மாதங்கி, பேபி பிரியங்கா குரல்களில், காசி ஆனந்தனின் மென்மையான வரிகளில் 'உச்சிதனை முகர்ந்தால்’ என்று தொடங்கும் முதல் பாடல் சுகமான தாலாட்டு. 'இருப்பாய் தமிழா நெருப்பாய் நீ; இழிவாய்க் கிடக்க செருப்பா நீ’ காசி ஆனந்தனின் நெருப்பு வரிகளுக்கு வளம் சேர்த்திருக்கிறார் இமான். 'சுட்டிப் பெண்ணே’ பாடல்... எங்கேயோ கேட்ட மெட்டு. கதிர்மொழியின் கருத்தாழம் மிக்க வரிகளில் நீண்ட நாட்களுக்குப் பிறகு சீர்காழி சிவசிதம்பரத்தின் குரல் கேட்கிறது. நன்றி இமான்!