கடந்த 2020-ம் ஆண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணி லீக், ஆங் சான் சூகி தலைமையில் போட்டியிட்டு வெற்றிபெற்றது. ஆனால், 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அவரின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு ராணுவம் மீண்டும் நாட்டைக் கைப்பற்றியது. அப்போது அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். இவ்வாறு இவரின் சிறை வாழ்க்கைத் தொடங்கியது தற்போது முதல்முறை அல்ல. அவருக்கு 2020 ஆண்டுக்கு முன்பே, ராணுவத்தால் பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

`நோபல் பரிசு வென்றவர்’
1988-ம் ஆண்டு, `மக்களாட்சிக்கான தேசிய அமைப்பின்’ பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டார். பின்பு, மியான்மரில் நடந்த ராணுவ ஆட்சிக்கு எதிராகக் குரல் கொடுத்தார். அதனால் அடுத்த ஆண்டே ராணுவத்தால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். 1990-ம் ஆண்டு நடந்த தேர்தலில் 81% பெரும்பான்மைப் பெற்ற போதிலும், சூகி வெளிநாட்டவரை மணந்த காரணத்தினால் அவருக்குப் பதவி மறுக்கப்பட்டது. அதிகாரம் மறுக்கப்பட்டபோதும் ராணுவ ஆட்சிக்கு எதிராகப் போராடிய அவருக்கு 1990-ம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது.
ஆனால், அதன் பிறகு இவரின் தீவிர முயற்சியால் பல ஆண்டுகளில் ஜனநாயக ரீதியில் தேர்தல் நடத்தப்பட்டபோதிலும் இவருக்கு ஆட்சி அதிகாரத்தை வழங்க ராணுவம் மறுத்துவிட்டது. மக்களுக்காகப் போராடியவருக்கு சுதந்திரத்தைத் தர முடியவில்லை. அதற்குப் பதிலாக அவர்மீது வழக்குகள் மட்டுமே பாய்ந்தது. அப்படி தொடக்கக் காலம் தொட்டு தற்போது வரை இவர்மீது தொடுக்கப்பட்ட வழக்குகள் விசாரிக்கப்பட்டு மொத்தம் 33 ஆண்டுக்காலம் சிறையில் இவர் வாழக்கையைக் கழிக்க வேண்டும் என்னும் அதிர்ச்சியான தகவல் வெளியாகியிருக்கிறது.

ராணுவத்திற்கு எதிராகக் கிளர்ச்சி!
கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பரில் இவருக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது இவர் மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள், ராணுவத்துக்கு எதிராகக் கிளர்ச்சியைத் தூண்டியது, கொரோனா விதிமுறைகளை மீறியது என குற்றங்கள் முன்வைக்கப்பட்டு இவர் மீது வழக்கு நடந்தது. இதை விசாரித்த நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
மேலும் ஒரு வழக்கில் தண்டனை!
ராணுவ ஆட்சி அமைந்த பிறகு, ஆங் சான் சூகி வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. இதில் சட்டவிரோதமாக வாக்கி டாக்கிகள் வாங்கி இறக்குமதி செய்யப்பட்டு வீட்டில் பதுக்கிவைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவை கடத்தல் கருவிகள் எனக் கூறப்பட்டு அவர்மீது வழக்கு பதியப்பட்டது. இந்த விசாரணையில்தான் அவருக்கு மீண்டும் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மொத்தமாக 8 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனக் கூறப்பட்டது. ஆனால், அது ஆறு ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை அவர் வீட்டுக் காவலில் கழிக்க முடியும் என ராணுவம் கூறியது.

33 ஆண்டுகள் தண்டனை!
இவ்வாறு 2020-ம் ஆண்டுக்குப்பிறகு 19 குற்றச்சாட்டுகளை அவர் மீது ராணுவ அரசு சுமத்தியது. இது குறித்த விசாரணை 18 மாதகாலமாக நடந்துவந்தது. இந்நிலையில், ஐந்து குற்றச்சாட்டுகள் மீது மியான்மர் ராணுவம் தீர்ப்பளித்திருக்கிறது. அமைச்சர் என்ற முறையில் ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்ததில் விதிமுறைகளைப் பின்பற்றாததால் அவர் ஊழல் செய்ததாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதற்காக இவர் மேலும் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். இதுவரையிலும் விதிக்கப்பட்டிருக்கும் சிறை தண்டனையோடு இதுவும் சேர்ந்து மொத்தம் 33 ஆண்டுகள் அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

77 வயதாகும் சூகி, தற்போது விதிக்கப்பட்டிருக்கும் இந்த சிறை தண்டனை காரணமாக அவர் தன் நூறு வயது வரை வீட்டுச் சிறையில் இருக்க நேரிடலாம் எனக் கூறப்படுகிறது. ஆனால், தொடர்ந்து தன்மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை அவர் மறுத்துவருகிறார். மேலும், கடந்த வாரம் ஐநா பாதுகாப்பு அமைப்பு அவரை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரியிருந்தது. தற்போது, மீண்டும் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனத் தீர்ப்பு வெளியாகி அவரின் ஆதரவாளர்களை அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது.

இந்தத் தீர்ப்பு வெளியான பிறகு, சூகியின் வழக்கறிஞர்கள் செய்தியாளர்களைச் சந்திப்பது தடுக்கப்பட்டது. இதனால், இதன் பின்னணியில் இருக்கும் முக்கியமான தகவல்கள் வெளியாகவில்லை. ஆனால், இவரின் சிறை தண்டனை ஒரு செய்தியை உறுதி செய்திருக்கிறது. மியான்மரில் மக்களாட்சி என்பது மிகப் பெரிய கேள்விக்குறிதான்!