கிண்டி சின்னமலை மெட்ரோ ரயில் நிலையம் அருகேயிருக்கும் ஒரு லாட்ஜின் முகப்பில், ‘ஆயிரம் ரூபாய் கொடுத்தால், பெண்ணுடன் இருக்கலாம்’ என்ற டிஜிட்டல் போர்டு விளம்பரம் இருப்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் கடந்த டிசம்பர் 24-ம் தேதி சர்ச்சையைக் கிளப்பியது. சென்னையின் பிரதான சாலையில் இதுபோன்ற விளம்பரம் எவ்வாறு வெளியிடப்பட்டது என்ற கேள்வியுடன் களத்தில் இறங்கி விசாரித்தோம். நாம் நேரில் சென்றபோது, அந்த டிஜிட்டல் விளம்பர போர்டு அகற்றப்பட்டிருந்தது.

இந்த விவகாரம் குறித்து விசாரணை செய்த போலீஸார் சிலர் நம்மிடம் பேசுகையில், “தலைநகர் சென்னையில் இதுபோன்ற ஒரு ஆபாச விளம்பரம் இருந்ததாக செய்தி வெளியானது எங்களுக்கே அதிர்ச்சியாக இருந்தது. முதலில் இது போலியானது என்றுதான் நினைத்தோம். ஆனால், டிஜிட்டல் பலகையில் இருப்பது உண்மை என்று தெரிந்ததும், சம்பந்தப்பட்ட லாட்ஜூக்கு சென்று, பலகையை உடனே அகற்றினோம். ஆனால், பலகையில் அந்த வாசகம் எவ்வாறு வந்தது என்று ஊழியர்களுக்கும் தெரியவில்லை. அதன் பின்னர், டிஜிட்டல் போர்டு நெட்ஒர்க் குறித்து சோதித்த போதுதான், ‘வைஃபை’ மூலமாக அது ‘ஹேக்’ செய்யப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்தோம். ஏதோ ஒரு கும்பல் திட்டமிட்டு ஹேக் செய்து, விஷம கருத்தைப் பரப்பியிருக்கிறது.
இப்படி ‘ஹேக்’ செய்ய அந்த லாட்ஜ் அருகேயிருந்து ‘ஆபரேட்’ செய்தால் மட்டுமே முடியும். எனவேதான், லாட்ஜ் அருகே இருக்கும் சி.சி.டி.வி கேமராக்களைச் சோதனை செய்து வருகிறோம். எண்களின் முதற்கட்ட விசாரணையில், இந்த லாட்ஜை குறிவைத்து ஹேக்கிங் செய்யப்படவில்லை என்பது மட்டும் தெரியவந்திருக்கிறது. மேலதிக விசாரணையில் பல உண்மைகள் வெளிச்சமாகலாம்” என்றனர். டிஜிட்டல் போர்டு ஹேக் செய்யப்பட்ட தகவலை காவல்துறையும் அறிக்கையாக அளித்திருக்கிறது.

டிஜிட்டல் போர்ட்டிலிருந்த பாலியல் வாசகம் சமூக வலைதளத்தில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நேரத்தில், இந்த லாட்ஜ் பா.ஜ.க மாநிலச் செயலாளர் வினோஜ் பி.செல்வத்துக்கு சொந்தமானது என்றொரு தகவலும் சமூக வலைதளங்களில் பரவியது. ட்விட்டரில் சிலர் இதை விமர்சித்து கருத்துகளைப் பதிவிட்டிருந்தனர். ஆனால், குற்றச்சாட்டுகளை மறுத்திருக்கும் வினோஜ் பி.செல்வம், ‘அது என் ஹோட்டல் அல்ல. பா.ஜ.க-வுக்கும் சம்பந்தமானதல்ல. சிலர் திட்டமிட்டே அவதூறு பரப்புகிறார்கள். அவர்கள் கூட்டாக சதி செய்து என் பெயருக்கும் கட்சிப் பெயருக்கும் களங்கம் ஏற்படுத்துகிறார்கள்.
அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று காவல்துறையில் புகார் அளித்திருக்கிறார். “டிஜிட்டல் போர்டு ஹேக் செய்யப்பட்டதற்கும், வினோஜூக்கும் என்ன சம்பந்தம்?”, என கமலாலய வட்டாரத்தில் விசாரித்தோம். நம்மிடம் பேசியவர்கள், ``டிஜிட்டல் போர்டு வைக்கப்பட்ட லாட்ஜூக்கு அருகிலேயே, பா.ஜ.க மாநில செயலாளர் வினோஜ் தொடர்பிலிருந்த ஒரு ஹோட்டல் இருக்கிறது. அந்த ஹோட்டல் நிர்வாகப் பொறுப்பிலிருந்து வினோஜ் எப்போதோ வெளியேறிவிட்டார்.

அந்த ஹோட்டல்தான் ‘ஹேக்’ செய்யப்பட்டவர்களின் குறி. வினோஜுக்கும் தமிழக பா.ஜ.க தலைமைக்கும் சுமுகமான உறவு இல்லை. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திலேயே தலைமையின் எதேச்சதிகாரத்தை எதிர்த்து அவ்வப்போது வினோஜ் சில கருத்துகளை முன்வைக்கிறார்.
கட்சித் தலைமையை பிரபலப்படுத்த சென்னை அடையாறில் தனியாக ஒரு ஐ.டி விங் இயங்குகிறது. கட்சிக்கு எதிராகக் கருத்து தெரிவிப்பவர்கள் மீது சமூக வலைதளங்களில் விஷம கருத்துகளை வீசுவதற்கே சில ட்விட்டர், ஃபேஸ்புக் கணக்குகளை உருவாக்கி, அவர்கள் கருத்துகளைப் பதிவிடுகிறார்கள். பீகார், உத்தரப்பிரதேசத்திலிருந்து சில ஹேக்கர்களும் இந்த அடையாறு ஐ.டி விங் கும்பலால் வேலைக்கு அமர்த்தப்பட்டிருக்கின்றனர்.
அவர்கள்தான், வினோஜின் இமேஜை டேமேஜ் செய்ய அந்த லாட்ஜின் விளம்பர பலகையை ஹேக் செய்திருக்கிறார்கள். ஆனால், அவர்கள் எதிர்பார்த்தது நடக்கவில்லை. ‘வீடு மாறி திருடிய கதையாக’, வினோஜ் ஹோட்டலுக்குக் குறிவைத்து, அதன் அருகிலிருந்த லாட்ஜின் டிஜிட்டல் போர்ட்டை ஹேக் செய்திருக்கிறார்கள். இது குறித்து வினோஜ் தற்போது போலீஸில் புகார் அளித்திருக்கிறார்” என்றனர்.

ஏற்கெனவே ஆடியோ - வீடியோ பஞ்சாயத்துகளால், திக்கித் திணறும் தமிழக பா.ஜ.க-வில், இந்த ‘ஹேக்’ விவகாரம் அடுத்தப் பஞ்சாயத்தைக் கூட்டியிருக்கிறது. விஷயத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வரையில் கொண்டு சென்றிருக்கிறாராம் வினோஜ்.