சமீபகாலமாக, தஞ்சையைத் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்த ராஜராஜ சோழன் குறித்து ஏதாவது ஒரு சர்ச்சை அவ்வப்போது எழுந்துவருகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் பேசினார். அப்போது, ``ராஜராஜ சோழன் தன்னுடைய சாதிக்காரர் என்று எட்டு சாதிகளைச் சேர்ந்தவர்கள் உரிமை கோருகிறார்கள். ராஜராஜன் காலம் பொற்காலம் என்று சொல்கிறார்கள்.

ஆனால், அவரின் ஆட்சிக்காலம் ஓர் இருண்ட காலம் என்று நான் சொல்கிறேன். தஞ்சை பகுதியில் ஒடுக்கப்பட்ட சமூகத்தினரின் நிலங்கள் அவருடைய காலத்தில்தான் பறிக்கப்பட்டன. அவருடைய ஆட்சிக்காலத்தில் மிகப்பெரிய சாதி ஒடுக்குமுறை இருந்தது. அவரது ஆட்சிக்காலத்தில் தேவதாசி ஆட்சிமுறை அதிகரித்தது” என்று பா.ரஞ்சித் பேசினார். அதற்காக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
‘பொன்னியின் செல்வன்’ படம் வெளியாகியிருக்கும் சூழலில், ராஜராஜ சோழன் இந்து மன்னனா... தமிழ் மன்னனா என்கிற விவாதம் நடைபெற்றுவருகிறது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனின் எம்.பி-யின் 60-வது பிறந்தநாளை முன்னிட்டு குறும்பட, ஆவணப்பட கலை விழா சென்னையில் கடந்த வாரம் நடைபெற்றது.
அந்த நிகழ்ச்சியில் பேசிய திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன், “சினிமாவை அரசியல்மயப்படுத்துவது மிகவும் முக்கியம். திராவிட இயக்கம் சினிமாவைக் கையிலெடுத்தபோது, ‘கலை கலைக்காக’ என்று பேசிக்கொண்டிருந்தார்கள். சினிமாவுக்கு அழகியல் முக்கியம்தான். ஆனால், மக்களிடைமிருந்து விலகி எந்தக் கலையும் முழுமை பெறாது. மக்களுக்காகத்தான் கலை. மக்களைப் பிரதிபலிப்பதுதான் கலை.

இன்றைக்கு திரைப்படக் கலையை நாம் சிறப்பாகக் கையாள வேண்டும் . காரணம், நம்முடைய அடையாளங்களைத் நம்மிடமிருந்து தொடர்ந்து எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். திருவள்ளுவருக்கு காவி உடை கொடுக்கிறார்கள். ராஜராஜ சோழன் ஒரு இந்து அரசன் என்கிறார்கள். சினிமாவிலும் இது நடந்துவிடும். எனவே, நம் அடையாளங்கள் நாம் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்” என்று வெற்றிமாறன் பேசினார்.
வெற்றிமாறன் பேசிய கருத்து சர்ச்சையாக மாறியது. ராஜராஜ சோழன் இந்து மன்னன் தான் என்று ஒரு தரப்பினரும், அவர் தமிழ் மன்னன் என்று மற்றொரு தரப்பினரும் சொல்ல ஆரம்பித்தார்கள். பா.ஜ.க-வின் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், “தமிழர்கள் இந்துக்கள் இல்லை என்றால், யாருமே இந்து இல்லை. ஆயிரம் ஆண்டுகளாக நிலைத்து நிற்கும் சிவாலயத்தை கட்டிய ராஜராஜ சோழனை இந்து இல்லை என்பதா?

உலகமே வியக்கும் அளவுக்கு தஞ்சையில் சிவபெருமானுக்கு மிகப்பெரிய ஆலயம் அமைத்தவர் ராஜராஜ சோழன். அவருக்கு சிவபாத சேகரன், சோழ நாராயணன், திருமுறை கண்ட சோழன், உலகளந்தான் என்ற பெயர்கள் உண்டு. தஞ்சை பெருவுடையார் கோயிலில் ராஜராஜ சோழன் கட்டிய விநாயகர் கோயில் உள்ளது. சோழர் கால கல்வெட்டுகளில் நாராயணன் என்ற பெயர் அதிகமாக உள்ளது” என்று ட்வீட் வெளியிட்டார். வானதி சீனிவாசனின் கருத்துக்குப் பலரும் எதிர்வினையாற்றினர்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான், ராஜராஜ சோழன் சைவ மதத்தைத்தைச் சேர்ந்த மன்னன் என்கிறார். “எங்களுடைய பெரும்பாட்டன் அருள்மொழிச்சோழனை இந்து மன்னன் என்று பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. வள்ளுவருக்குக் காவி சாயம் பூசி, அவரை ஆரியம் தன்வயப்படுத்திக்கொள்ள முயல்கிறது. அதேபோல, ராஜராஜ சோழனையும் தன்வயப்படுத்த முயல்கிறார்கள். அந்தக் காலத்தில் இந்திய நாடும் இல்லை, இந்து மதமும் இல்லை என்பது உலகத்திற்கே தெரியும். ராஜராஜ சோழன் என்ற மன்னன் சிவனை வழிபட்ட சைவ மரபினன். அதுதான் உண்மை. பன்னிரு திருமறைகளைக் கறையான் அரிக்காமல் காப்பாற்றிக் கொடுத்தவர். அதனால்தான், ‘ஏடு தந்தானடி தில்லையிலே’ என்ற பாட்டுகூட பாடப்பட்டது” என்கிறார்.

மேலும், “தமிழர் அடையாளங்களில் புகழ்பெற்ற அனைத்தையும் ஆரியம் தனதாக்கிக்கொள்ள முனையும். அப்படித்தான் எங்கள் சிவனை, முருகனை தனதாக்கிக்கொண்டது. ராஜராஜ சோழனையும் இந்து என்று தன்வயப்படுத்திக்கொள்ள ஆரியம் முயல்வதை அனுமதிக்கக் கூடாது என்று வெற்றிமாறன் சொல்கிறார். அதை நான் ஏற்கிறேன்” என்கிறார் சீமான்.
இது குறித்து எழுத்தாளர் இரா.முருகவேளிடம் பேசினோம்.
``சோழர் ஆட்சிக்காலத்தில் எல்லாம் இந்து என்கிற மதமே இல்லை. ஆனால், சைவமும் வைணவமும் ஒரு மதத்தின் இரு கிளைகளாகப் பார்க்கப்பட்டன. சைவர்களும் வைணவர்களும் சமணத்தையும் பௌத்தத்தையும் வேறு மதங்களாகத்தான் பார்த்தார்கள். ராஜராஜ சோழன் சைவத்தைப் பின்பற்றிய மன்னன். அந்த வகையில், இன்றைய காலத்தில் அவரை இந்து என்று சொல்வதில் தவறொன்றும் கிடையாது. அதே நேரத்தில், இன்றைய அரசியல் சூழலிலிருந்து ஒரு விஷயத்தை முக்கியமாகப் பார்க்க வேண்டும்.
‘மன்னர் கதை, மன்னர் வரலாறு என்று முகலாயர் வரலாற்றைத்தான் திரைப்படமாக எடுக்கும் நிலை இருக்கிறது’ என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஒரு முறை பேசினார். அப்போது, ‘நாம் மௌரியர் பற்றியும் சோழர்கள் பற்றியும் நாம் படமாக எடுக்க வேண்டும்’ என்று அவர் பேசினார். அந்த வேலையை இன்றைக்கு செய்துகொண்டிருக்கிறார்கள்.

முகலாய மன்னனுக்குப் பதிலாக வேறு இந்து மன்னர்களை முன்னிறுத்த வேண்டும் என்ற பார்வை இந்துத்துவவாதிகளிடம் வந்திருக்கிறது. அதனால், ராஜராஜ சோழனை இந்து மன்னன் என்று சொல்லி நிலைநாட்ட அவர்கள் ஆசைப்படுகிறார்கள். இந்துத்துவா அரசியல் இருக்கும்போது இந்துத்துவா சினிமா, இந்துத்துவா இலக்கியம் , இந்துத்துவா உணவு என எல்லாவற்றையும் இந்துத்துவாவாகக் கொண்டுவர வேண்டுமென்று நினைக்கிறார்கள்.
ஆனால், ராஜராஜ சோழனை ஒரு இந்து அரசனாக ஒருபோதும் தமிழ்நாடு பார்த்தில்லை. பொன்னியின் செல்வன் நாவலின் ஆசிரியரான கல்கி முதற்கொண்டு, யாருமே ராஜராஜ சோழனை இந்து பார்வையிலிருந்து பார்க்கவில்லை. தமிழர் பெருமை, தமிழர் வளர்ச்சி, தமிழர் பாரம்பர்யம் என்ற பார்வையிலிருந்துதான் ராஜராஜ சோழனை தமிழர்கள் பார்த்துவருகிறார்கள்” என்கிறார் இரா.முருகவேள்.