Published:Updated:

புதுச்சேரி: `எம்.ஜி.ஆர் சிலைக்குக் காவித் துண்டு!’ - கொதிக்கும் அ.தி.மு.க; புதிய சர்ச்சை

புதுச்சேரி எம்.ஜி.ஆர் சிலை
புதுச்சேரி எம்.ஜி.ஆர் சிலை

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் காவி நிறத் துண்டு அணிவித்திருப்பது அ.தி.மு.க தொண்டர்களைக் கொதிப்படையச் செய்திருக்கிறது.

புதுச்சேரி, வில்லியனூர் பகுதியில் உள்ள புதுச்சேரி - விழுப்புரம் புறவழிச்சாலை சந்திப்பில் முன்னாள் தமிழக முதல்வரும் அ.தி.மு.க நிறுவனத் தலைவருமான எம்.ஜி.ஆரின் சிலை அமைந்திருக்கிறது. அந்தச் சிலைக்கு நேற்று மதியம் யாரோ சில மர்ம நபர்கள் காவி நிறச் சால்வையை அணிவித்திருந்தனர். அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி அ.தி.மு.க தொண்டர்கள் புதுச்சேரியில் உள்ள தலைமை அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

சட்டப்பேரவையில் வெளிநடப்பு செய்த அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள்
சட்டப்பேரவையில் வெளிநடப்பு செய்த அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள்

அதையடுத்து அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் அன்பழகன் மற்றும் வையாபுரி மணிகண்டன் ஆகியோர் சம்பவம் நடைபெற்ற பகுதிக்குச் சென்றனர். அங்கே சிலையின் முன்பு தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்த அவர்கள், எம்.ஜி.ஆர் சிலைக்கு காவித்துண்டு அணிவித்து அவமதித்தவர்களை கைது செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதையடுத்து அங்கு சென்ற காவல்துறையினர் சம்பந்தப்பட்டவர்களைக் கன்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து எம்.எல்.ஏ-க்களும் தொண்டர்களும் அங்கிருந்து கிளம்பினர். இதற்கிடையில் எம்.ஜி.ஆர் சிலைக்கு காவி நிற சால்வி அணிவித்த விவகாரம் சமூக வலைதளங்களில் தீவிரமாகப் பரவியதுடன், `காவி நிற சால்வையால் எம்.ஜி.ஆர் சிலையை அவமதித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’ என்று கொதித்தனர் அ.தி.மு.க-வினர்.

காவித்துண்டு அணிவிக்கப்பட்ட எம்.ஜி.ஆர் சிலை
காவித்துண்டு அணிவிக்கப்பட்ட எம்.ஜி.ஆர் சிலை

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்,`தமிழக மக்களின் நெஞ்சங்களில் நீக்கமற நிறைந்திருக்கும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு புதுச்சேரியில் மர்ம நபர்கள் காவித்துண்டு அணிவித்த சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன்’ என்று ட்வீட் செய்திருந்தார். அதேபோல `திராவிடக் கொள்கையில் தீவிரமாக வாழ்ந்து மறைந்த எம்.ஜி.ஆரின் சிலைக்கு காவித்துண்டு அணிவிப்பது கண்டிக்கத்தக்கது’ என அ.தி.மு.க-வின் செய்தித் தொடர்பாளர் வைகைச் செல்வன் கூறியிருக்கிறார்.

அதையடுத்து மனநிலை பாதிக்கப்பட்ட பெண் ஒருவர்தான் சிலைக்கு காவித்துண்டு அணிவித்தார் என்று கூறியது காவல்துறை. ஆனால், அதை ஏற்க மறுத்த அ.தி.மு.க-வினர், `சிலை நிறுவப்பட்டிருக்கும் பீடத்தின் மீது, ஏணி இல்லாமல் ஏற முடியாது. ஆனால், அப்படி எதுவுமே இல்லாமல் அந்த மனநிலை பாதிக்கப்பட்ட பெண் ஏறி துண்டைப் போட்டார் என்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? அதுவும் துண்டு போர்த்தி அதனை முடிச்சு போட்டிருக்கிறார்கள். திட்டமிட்டு யாரோ செய்த சதியை காவல்துறையினர் மறைக்க முயல்கிறார்கள்’ என்று கூறினர். மேலும், இன்றைய பட்ஜெட் கூட்டத் தொடரில் உரையாற்ற வந்த துணைநிலை ஆளுநர் கிரண் பேடியின் வாகனத்தின் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள்
அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள்

தொடர்ந்து எம்.ஜி.ஆர் சிலையைக் களங்கப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் அன்பழகன், வையாபுரி மணிகண்டன், அசானா ஆகியோர் காவல்துறை டி.ஜி.பி பாலாஜி ஸ்ரீவத்சவாவிடம் புகார் மனுவை அளித்தனர். அதேசமயம், ``தேர்தல் நேரங்களில் வாக்குகள் சேகரிக்கச் செல்லும்போது கூட்டணிக் கட்சிகளின் கொடிகள் மற்றும் துண்டுகளைப் பயன்படுத்துவது வழக்கமான நடைமுறை. அப்படி இருக்கும்போது பி.ஜே.பியுடன் கூட்டணி வைத்திருக்கும் அ.தி.மு.க இந்த விவகாரத்தில் இப்படிக் கொந்தளிப்பது ஏன்? காவி நிறம் அவமானம் என்று அ.தி.மு.கவே ஒப்புக்கொள்கிறதா?” என்று சமூக வலைதளங்களில் சரமாரியாகக் கேள்வி எழுப்பி வருகின்றனர் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர்.

``யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் இஸ்லாம் மற்றும் கிறிஸ்துவ சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் கனிசமான அளவில் இருக்கிறார்கள். குறிப்பாக, அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களின் சட்டமன்றக் குழுவின் தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ-வின் உப்பளம் தொகுதியில் இந்த இரு சமுதாயத்தினர் அதிகளவில் இருக்கிறார்கள்.

`எம்.ஜி.ஆர் சிலை பராமரிப்பு; திடீரென உருவான ஜெயலலிதா சிலை!' -கொதிக்கும் மதுரை தி.மு.க

அதனால், 2016 புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்கச் சென்ற அ.தி.மு.க-வினர் பி.ஜே.பியை லாவகமாகக் கழற்றிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அளவுக்கு பி.ஜே.பி-யின் நிழல், தங்கள் மேலே விழுந்துவிடாமல் கவனமாகப் பார்த்துக்கொள்கிறது புதுச்சேரி அ.தி.மு.க. தற்போது காவித்துண்டு விவகாரத்தில் கொந்தளிக்கும் பின்னணியும் அதுதான்” என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

அடுத்த கட்டுரைக்கு