தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

ஊரடங்கு நேரம்... ஒரு குடும்பத்தின் முயற்சியில் உருவானது ஒரு கிணறு! - பீனா

கிணறு
பிரீமியம் ஸ்டோரி
News
கிணறு

ஆச்சர்யம் ஆனால் உண்மை

கொரோனாவுக்காக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காலம் மக்கள் மனத்தில் என்னென்ன மாற்றங்களையெல்லாம் ஏற்படுத்தும்? சேவை செய்ய வைக்கும்...

குழந்தைகளுடன் பெற்றோரை விளையாட வைக்கும்... கணவரைச் சமைக்க வைக்கும்... குழந்தைகளை வீட்டு வேலைகளில் ஈடுபட வைக்கும்... தூர்ந்துபோன கிணற்றையும் சரிப்படுத்தி தண்ணீரை வரவழைக்கும்!

கிணறு
கிணறு

`என்னது தூர்ந்துபோன கிணற்றில் தண்ணீரா...' என்று நீங்கள் ஆச்சர்யப்பட்டால்... `ஆமாம் ஆமாம்' என்று ஆச்சர்யப்படுத்துகிறார் கேரள மாநிலம் கண்ணூர் அருகேயுள்ள பினராயி மாவட்டத்தைச் சேர்ந்த பீனா. முதல்வர் பினராயி விஜயனின் ஊரைச் சேர்ந்த பீனாவைத் தொலைபேசியில் தொடர்புகொண்டோம்.

கிணற்றின் உள்ளே இருந்து மண்ணைக் கூடையில் போட்டு மேலே அனுப்புவதும், 12 மீட்டர் ஆழத்தில் இறங்கி வேலை பார்ப்பதும் மிகவும் கடினம். கயிற்றில் தொங்கியபடிதான் உள்ளே இறங்கவோ, மேலே ஏறி வரவோ முடியும்.

`தமிழ்நாடு பத்தரமோ…’ என நலம் விசாரித்த பிறகே பேசத் தொடங்குகிறார். ``கேரளாவில் வீட்டுக்கு ஒரு கிணறு இருக்கும். நாங்கள் நிலம் வாங்கி வீடு கட்டும் முன்னர் நீரோட்டம் பார்த்து கிணறு வெட்டினோம். பணப்பிரச்னை காரணமாக, கிணறு வெட்டும் பணியை முடிக்க முடியாமல் போனது. மனதே இல்லாமல் வெட்டிய இடத்தில் மண்ணைப் போட்டு மூடிவிட்டோம். ஆறு வருடங்களுக்குப் பின்னர், அந்தக் கிணற்றை இப்போது தோண்டியெடுத்துத் தூர்வாரி தண்ணீர் கொண்டுவந்திருப்பது ரொம்பவே மகிழ்ச்சியாக இருக்கிறது” என்கிறவர், கிணறு தோண்ட ஆரம்பித்த கதையை விவரிக்க ஆரம்பித்தார்.

கிணறு
கிணறு

“கணவர் சாஜி ஆட்டோ டிரைவராக இருக்கிறார். மகள் பின்ஷா கல்லூரியிலும், மகன் அபிஜெய் 11-ம் வகுப்பும் படிக்கிறார்கள். எங்களுடன் கணவரின் தம்பி ஷனீஸ் இருக்கிறார். வீட்டில் கிணறு இல்லாததால், குடிநீர்த் தேவைக்குப் பக்கத்து வீட்டில் இருக்கும் என் அம்மாவின் வீட்டிலிருந்து பைப் மூலம் எங்களுக்குத் தண்ணீர் வரும். இதுவரை தண்ணீர் பிரச்னை ஏதும் இருந்ததில்லை. இந்த ஊரடங்கு காலத்தில் அதிக நேரம் வீணாகவே கழிவதாகத் தோன்றியது. எங்கள் வீட்டில் இருப்பவர்களும் டி.வி பார்ப்பது, கதை பேசுவது, சண்டைபோட்டுக்கொள்வது என இருந்தார்கள். அப்போதுதான், தூர்ந்துபோன நம் வீட்டுக் கிணற்றைத் தோண்டினால் என்ன என்கிற எண்ணம் தோன்றியது. வீட்டில் உள்ளவர்களிடம் சொன்னேன். `இந்த ஊரடங்கு நேரத்தில் வேலைக்கு யார் வருவார்கள்’ என்று கேள்வி எழுப்பியவர்களிடம், `யாரும் வேலைக்கு வர வேண்டாம். நாமே வேலை செய்யலாம்’ என்றேன். அவ்வளவுதான்... வீட்டில் இருப்பவர்கள் எல்லாம் முதலில் அதிர்ச்சியாகி விட்டார்கள்’’ என்று சிரிக்கிறார் பீனா.

 பீனா குடும்பத்தினர்...
பீனா குடும்பத்தினர்...

‘‘என் கணவருக்கு கிணறு வெட்டும் அனுபவம் உள்ளதால், நான் சொன்னதைக் கேட்டு உற்சாகமானார். அடுத்த நிமிடமே வேலையை ஆரம்பித்துவிட்டோம். என் கணவர் மண்ணைத் தோண்டுவார். அந்த மண்ணை அள்ளி நான் கூடையில் நிரப்புவேன். அதைக் கயிறு மூலம் மேலே கொண்டு வருவது அபிஜெய் மற்றும் ஷனீஸுனுடைய வேலை. அந்த மண்ணை வீட்டின் மற்றோர் இடத்துக்குக் கொண்டு செல்லும் பணியை பின்ஷா கவனித்தார். இப்படி 14 நாள்கள் தொடர்ந்து தொய்வில்லாமல் வேலை பார்த்தோம். ஒவ்வொரு முறை மண்ணைத் தோண்டும் போதும், இப்ப தண்ணீர் வந்துவிடாதா என்கிற நினைப்போடுதான் தோண்டுவோம். எங்கள் உழைப்பு, வியர்வை, ஒற்றுமை எல்லாவற்றுக்கும் பலன் கிடைத்தது. ஆம், 15-வது நாள் தண்ணீர் வந்துவிட்டது...’’ என்கிற பீனாவின் குரலில் குழந்தையின் உற்சாகம்!

கிணறு
கிணறு

`` `தண்ணீர் வந்துவிட்டது' என்று அப்பா தான் முதலில் சத்தமிட்டு சொன்னார். நாங்கள் அப்போதுகூட நம்பவில்லை. ஏனென்றால், அப்பா கீழே தண்ணீர் பாட்டில் வைத்திருந்தார். அதில் உள்ள தண்ணீரைத்தான் மண்ணில் ஊற்றி எங்களைக் கிண்டல் செய்கிறார் என்று நினைத்தோம். எங்களுக்காக அப்பா இன்னும் சில அடிகள் தோண்டிக் காட்டினார். அப்போது நிறைய தண்ணீர் வந்தது. பிறகுதான் நம்பினோம்'' என்கிற பின்ஷாவுக்குத் தொடர்ச்சியாக வேலை செய்தது அலுப்பாகவே இல்லையாம்!

“கிணற்றுக்குள் இருந்து அம்மா ஏதாவது பாட்டு பாடுவார். நாங்கள் மேலே இருந்து அதைக் கேட்டுக்கொண்டு கிண்டல் செய்வோம். இப்படி விளையாடிக்கொண்டே வேலை செய்ததால் அலுப்போ, களைப்போ துளியும் தெரியவில்லை" என்கிறார் பின்ஷா.

பீனா
பீனா

“கிணறு தோண்டுவது சாதாரண விஷயம் இல்லை என்பதனால் வெற்றியோ, தோல்வியோ... செய்கிற வேலையை ஆரம்பம் முதல் இறுதி வரை பதிவு செய்ய வேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்தேன். முதல் நாள், இதுபோன்ற வேலை செய்ய ஆரம்பித்து இருக்கிறோம் என போட்டோவுடன் ஃபேஸ்புக்கில் பதிவிட்டேன். அதைப் பார்த்தவர்கள் எல்லோரும் வாழ்த்து தெரிவித்தார்கள். அடுத்தடுத்த நாள்களில் என்ன அப்டேட், எவ்வளவு அடி ஆழம் தோண்டியுள்ளீர்கள் என ஆர்வமாகக் கேட்க ஆரம்பித்தார்கள். புலி வாலைப் பிடித்த கதையாக... தண்ணீர் வரும் வரை விடக் கூடாது எனத் துணிந்து வேலை செய்துகொண்டே இருந்தோம். இதில், அண்ணிதான் ரொம்ப கஷ்டப்பட்டார். கிணற்றின் ஆழம் 12 மீட்டர். அதன் உள்ளே இருந்து மண்ணைக் கூடையில் போட்டு மேலே அனுப்புவதும், அவ்வளவு ஆழத்தில் இறங்கி வேலை பார்ப்பதும் மிகவும் கடினம். கயிற்றில் தொங்கியபடிதான் உள்ளே இறங்கவோ, மேலே ஏறி வரவோ முடியும். அவருடைய ஈடுபாட்டைப் பார்த்துத்தான் நாங்கள் உற்சாகமாகி வேலை செய்ய ஆரம்பித்தோம். காலையில் 7 மணிக்கு வேலை ஆரம்பித்தால், மாலை 7 மணி வரை வேலை நடக்கும். கயிற்றை இழுத்து இழுத்து எனக்கும் அபிஜெய்க்கும் கைகள் எல்லாம் புண்ணாகி ரத்தமே வந்துவிட்டது. இருந்தாலும், கிணற்றில் தண்ணீரைப் பார்க்கும்போது, வலிகள் எல்லாம் காணாமல் போய்விட்டது” என்கிறார் ஷனீஸ் மகிழ்ச்சியோடு.

வாழ்த்துகள் பீனா அண்டு பேமிலி!