கட்டுரைகள்
Published:Updated:

நேசத்தால் நீளும் கரங்கள்!

உணவு வழங்கிவருகிறார்
பிரீமியம் ஸ்டோரி
News
உணவு வழங்கிவருகிறார்

ஊரடங்கு முடிந்தாலும் மருத்துவமனை வளாகத்தில் உள்ளவர்களுக்கு உணவு வழங்க முடிவு செய்திருக்கிறோம்.

கொரோனாவுக்கு எதிரான போரில் பெரிய பாதிப்பை எதிர்கொண்டிருப்பவர்கள் ஒவ்வொரு நாளும் உழைத்தால்தான் பசியாற முடியும் என்கிற நிலையில் இருக்கிற வறியவர்களும் தெருவோரவாசிகளும் கைவிடப்பட்டவர்களும்தான்.

மூன்றுவாரங்களாக வேலை இல்லை, கையில் பணமில்லை என்று அவர்களுடைய வேதனைச்சுவடுகள்தான் தமிழகமெங்கும். இதுபோன்ற இயற்கைப் பேரிடர்களில் எப்போதும் உதவிக்கரங்களும் ஏராளமாய் எழும். கொரோனாவால் வேலையிழந்து உணவு கிடைக்காமல் பாதிக்கப்பட்டோரைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களுக்குத் தினமும் உணவு வழங்கிப் பசியாற்றி வருகிறார்கள் பலர். அப்படித் தமிழகத்தில் ஆதரவற்றோருக்குக் கைகொடுத்துவரும் சிலர் குறித்து இங்கே...

தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியில் ஆதரவற்றோர் மற்றும் வறியோருக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய உதவிகள் செய்யும் பணியில், கும்பகோணம் அனைத்துத் தொழில் வணிகர் சங்கக் கூட்டமைப்பு, கும்பகோணம் மகாமக அறக்கட்டளை, சுவாமிமலை கோணக்கரை விவேகானந்த சேவா சமிதி பரமசாந்தி குழு, வாசவி கிளப், உதவிக்கரம் ஆகிய அமைப்புகள் ஈடுபட்டுவருகின்றன. கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர், சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவமனைப் பணியாளர்கள் ஆகியோரின் தாகம் தீர்க்கத் தினமும் 700 நன்னாரி சர்பத் பாட்டில்கள் வழங்கப்பட்டுவருகின்றன.

நேசத்தால் நீளும் கரங்கள்!

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு மருத்துவமனை வளாகங்களில் நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்களுக்குத் தினமும் உணவு வழங்கிவருகிறார்கள், தன்னார்வ இளைஞர்கள் சிலர். இது குறித்துப் பேசிய ஷேக் அப்துல்லா, “ஊரடங்கு காரணத்தால், மருத்துவமனையில் சிகிச்சைக்காகத் தங்கியிருக்கும் நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் உணவு இல்லாமல் தவித்து வருகிறார்கள் என்ற தகவல் எங்களுக்குக் கிடைத்தது. உடனே நாங்கள் எட்டுப் பேர் இணைந்து தினமும் எங்கள் வீடுகளில் உணவு சமைத்து அவர்களிடம் வழங்கிவருகிறோம். தினம் ஒரு கலவை சாதம், ஒரு காய் என வைத்துப் பொட்டலம் கட்டி, தேவைப்படுபவர்களுக்குக் கொடுத்து வருகிறோம். எங்கள் பணியைப் பார்த்துப் பலர் எங்களுக்குப் பொருளுதவி செய்து வருகிறார்கள். ஊரடங்கு முடிந்தாலும் மருத்துவமனை வளாகத்தில் உள்ளவர்களுக்கு உணவு வழங்க முடிவு செய்திருக்கிறோம்.

கும்பகோணம் அருகே உள்ள ஒழுகச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தாயி. இவரின் கணவர் ரமேஷ் விவசாயக் கூலித் தொழிலாளி. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். மாற்றுத்திறனாளியான ஆனந்தாயி, அதே பகுதியில் உள்ள அங்கன்வாடியில் பணிபுரிந்து வருகிறார். வறுமை நிலையில் குடும்பத்தை ஓட்டுவதற்கே கஷ்டப்பட்டாலும், முகக்கவசம் தைத்துப் பல ஏழை மக்களுக்குத் தினமும் வழங்கி வருகிறார், ஆனந்தாயி. “விழிப்புணர்வுப் பணிக்காகச் செல்லும்போது மாஸ்க் வாங்கச் சென்றேன். ஒரு மாஸ்க் 200 ரூபாய் என்று சொன்னார்கள். அவ்வளவு பணம் கொடுத்து என்னால் மாஸ்க் வாங்க முடியவில்லை. அப்போதுதான் என்னைப்போலப் பலர் இருப்பார்கள் என்று எனக்குத் தோன்றியது. அதனால், தினமும் என்னால் முடிந்த அளவுக்கு மாஸ்க் தைத்து ஏழை மக்களுக்கு இலவசமாகக் கொடுத்து வருகிறேன். என்னால் முடிந்த சிறிய உதவி இது” என்கிறார் ஆனந்தாயி.

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வட மாநிலத் தொழிலாளர்கள் பலர் தங்கியிருந்து பணியாற்றி வந்தனர். ரயில்கள், பேருந்துகள் என அனைத்துப் போக்குவரத்தும் முழுமையாக நிறுத்தப்பட்டதால் அவர்கள் சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் இங்கேயே தங்கிவிட்டனர். ஊரடங்கு காரணத்தால் உணவு கிடைக்காமல் தவித்துவந்த அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் பல உதவிகளைச் செய்து வருகிறது. அன்னை தெரசா அறக்கட்டளை, செஞ்சிலுவைச் சங்கம், லயன்ஸ் கிளப் உள்ளிட்ட அமைப்புகள் தினமும் உணவு வழங்கி வருகின்றனர். பணகுடி காவல்நிலைய ஆய்வாளர் சாகுல்ஹமீது, வெளிமாநிலத் தொழிலாளர்கள் பலருக்கு அரிசி மற்றும் பலசரக்குப் பொருள்கள் கிடைக்க ஏற்பாடு செய்திருக்கிறார். இரட்டை ரயில் பாதைப் பணிகளில் ஈடுபட்டிருந்த வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு ரயில்வே போலீஸார் பலசரக்குப் பொருள்களைக் கொடுத்து உதவிவருகிறார்கள்.

நேசத்தால் நீளும் கரங்கள்!

கன்னியாகுமரி

சிவகங்கை மாவட்டத்தில் காவல்துறையினர், முன்னாள் எம்.பி செந்தில்நாதன், சிங்கம்புணரி ஒன்றியக்குழு தலைவி திவ்யா பிரபு, ஒக்கூரைச் சேர்ந்த சேக்கப்பன், தொழிலதிபர் சுந்தர்ராஜன் எனப்பலரும் ஆதரவற்றோருக்கும் வறியோருக்கும் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்துவருகிறார்கள். கல்லல் பகுதியில் உள்ள பிச்சம்மை கேன்டீன், நரிக்குறவர் இன மக்களுக்குத் தொடர்ந்து உணவு வழங்கிவருகிறது. காரைக்குடியைச் சேர்ந்த ஊற்றுகள் அமைப்பு, சமூக ஆர்வலர்களோடு இணைந்து தினமும் 500 நபர்களுக்கு உணவு வழங்கிவருகிறது.

நேசத்தால் நீளும் கரங்கள்!

மதுரை

மதுரையில் தொழில் செய்து வரும் ஜெயின் சமூகத்தினர், சுகாதாரமான முறையில் தினமும் 600-700 உணவுப் பொட்டலங்கள் தயாரித்து ஆதரவற்றோர் மற்றும் வறியோருக்கு வழங்கிவருகிறார்கள். ஜெயின் சமூக அமைப்பின் நிர்வாகி சுரேஷிடம் பேசினோம். “விளிம்பு நிலை மக்களை மனதில் வைத்துத்தான் உணவு வழங்க முடிவு செய்தோம். இலவசமாகக் கொடுப்பதுதானே என்று இல்லாமல் மிகத்தரமாக உணவு தயாரிக்கிறோம். ஒரு நாளைக்கு 600 முதல் 700 பார்சல்கள் தயார் செய்து சாலையோரத்தில் வசிப்பவர்கள், வீடுகளில் உணவு இல்லாமல் இருப்பவர்கள் என்று எளிய மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குச் சென்று வழங்கிவருகிறோம். மேலும், பலருக்கு அரிசி, காய்கறிகள், பேரீச்சம்பழம் என வழங்கிவருகிறோம்.

நேசத்தால் நீளும் கரங்கள்!

எங்களை வாழ வைக்கும் மதுரை மக்களுக்கு எங்களால் முடிந்த உதவி இது” என்றார். உணவு வழங்கும் பணியில் அ.தி.மு.க, தி.மு.க, கம்யூனிசக் கட்சிகளும் ஈடுபட்டுவருகின்றன. மதுரையைச் சேர்ந்த ‘வா நண்பா வா’ என்ற தன்னார்வ அமைப்பு, மதுரை எம்.பி சு.வெங்கடேசனுடன் இணைந்து, மாவட்டத்தில் உள்ள இலங்கைத் தமிழர் முகாம்களில் வசிப்பவர்களுக்கு உணவுப் பொருள்களை வழங்கிவருகிறது.

நேசத்தால் நீளும் கரங்கள்!

தேனி

தேனி மாவட்டத்தில் கரும்பு வெட்டும் பணிக்காகக் கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களிலிருந்து வந்திருந்த தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வந்தனர். அவர்கள், ஊரடங்கு காரணமாகச் சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல், உணவு தண்ணீரின்றித் தவித்து வந்தனர். அவர்களுக்கு போடி அருகே உள்ள பத்திரகாளிபுரத்தைச் சேர்ந்த தமிழரசி என்பவர் தினமும் இரண்டு வேளை உணவு வழங்கிவந்தார். தமிழரசியிடம் பேசியபோது, “குழந்தை குட்டிகளோடு 15 குடும்பத்தினர் கரும்புத்தோட்டத்தில் டென்ட் போட்டுத் தங்கியிருந்தனர்.யதேச்சையாக அவர்களைப் பார்த்த நான் அவர்களிடம் விசாரித்தபோது, வைத்திருந்த அரிசி தீர்ந்துபோய், குழந்தைகள் உட்பட அனைவரும் இரண்டு நாள்களாகச் சாப்பிடாமல் பட்டினி கிடந்தது தெரியவந்தது. அதைக் கேட்டவுடன் எனக்கு அழுகை வந்துவிட்டது. உடனே வீட்டுக்குச் சென்று அவர்களுக்கு உணவு சமைத்துக் கொண்டுபோய்க் கொடுத்தேன். என் நண்பர்களுக்கு இந்த விஷயத்தைத் தெரியப்படுத்தியதும் அவர்களும் உதவ ஆரம்பித்தனர். இவர்கள் இங்கு இருக்கும் தகவல் கலெக்டருக்குச் சென்றவுடன் அவர்களை அழைத்துப் பாதுகாப்பான இடத்தில் தங்கவைத்து மூன்று வேளைகளும் உணவு கொடுத்துவருகிறார்கள். ஒருவேளை கலெக்டர் அழைத்துச் செல்லாமல் இருந்தால் அவர்களுக்கு ஆதரவு கொடுக்க நாங்கள் தயாராக இருந்தோம். அவர்கள் பாதுகாப்பாக இருப்பதில் எங்களுக்கு நிம்மதி” என்றார்.

நேசத்தால் நீளும் கரங்கள்!

திருச்சி

திருச்சி காஜா மியான் மேல்நிலைப்பள்ளியில் கணித ஆசிரியராகப் பணியாற்றும் மொய்தீன் அப்துல்காதர், தினமும் ஆதரவற்றோருக்கு மூன்று வேளைகளும் உணவு வழங்கி வருகிறார். “எங்களுக்குச் சொந்த ஊர் திண்டுக்கல். இருபது ஆண்டுகளுக்கு முன் பிழைப்பு தேடி திருச்சி வந்தோம். அப்பா சாலையோரத்தில் ஜூஸ் கடை நடத்தி வருகிறார். நான், என் மாணவர்களோடு இணைந்து ‘நல்லது செய்வோம்; உயர்ந்து நிற்போம்’ எனும் அமைப்பை உருவாக்கி, கடந்த இரண்டு ஆண்டுகளாக எளிய மக்களுக்கு உதவிகள் செய்துவருகிறோம். தற்போது தினமும் 300 பேருக்கு மூன்று வேளைகள் உணவு வழங்கிவருகிறோம். மேலும் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் போலீஸார் ஆகியோருக்கு தினமும் டீ, ஜூஸ், பிஸ்கட் வழங்கிவருகிறோம்” என்றார்.