சினிமா
ஆன்மிகம்
பேட்டி - கட்டுரைகள்
இலக்கியம்
Published:Updated:

தமிழ்ச் சமூகத்தின் தாய்மடி!

கொடுமணல் தொல்லியல் தலம்
News
கொடுமணல் தொல்லியல் தலம்

தொல்லியல்

சிந்துசமவெளி நாகரிகத்தின் பெருமைகள் பாடப்புத்தகங்கள் மூலமாக நம் மாணவர்களுக்குக் கற்றுத்தரப்படுகின்றன. சிந்துசமவெளி நாகரிகத்துக்கு இணையான மற்றும் அதற்கு முந்தைய நாகரிகங்கள் தமிழ் மண்ணிலும் தோன்றியிருக்கின்றன. அவற்றுக்கான தடயங்கள் கடந்த சில ஆண்டுகளாகக் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. கல்வி, பண்பாடு, நாகரிகம், தொழில்நுட்பம், விவசாயம் போன்றவற்றில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் சிறந்து விளங்கியிருக்கிறார்கள் என்பதற்கான ஆதாரங்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன.

பொருந்தல், கீழடி, அழகன்குளம், கொடுமணல்
பொருந்தல், கீழடி, அழகன்குளம், கொடுமணல்

தாமிரபரணி ஆற்றங்கரையில் ஆதிச்சநல்லூர், வைகை ஆற்றங்கரையில் கீழடி மற்றும் அழகன்குளம், நொய்யல் ஆற்றங்கரையில் கொடுமணல், கொசஸ்தலை ஆற்றங்கரையில் பட்டரைப்பெரும்புதூர் மற்றும் அத்திரம்பாக்கம், பழநி அருகே பொருந்தல் ஆகியவை தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் குறிப்பிடத்தக்கவை. மத்திய அரசின் தொல்லியல் துறையும், தமிழக அரசின் தொல்லியல் துறையும் இந்த அகழாய்வுகளை மேற்கொண்டிருக்கின்றன.

கீழடி - சங்ககால நகரம்

கீழடிமதுரைக்கருகே சிவகங்கை மாவட்டத்திலுள்ள கீழடியில், சங்ககால நகரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. `மதுரைக் காஞ்சி’, `சிலப்பதிகாரம்’ உள்ளிட்ட இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள குறிப்புகளைவைத்துப் பார்க்கும்போது, `கீழடிதான் பழைய மதுரை’ என்கிறார்கள் தொல்லியலாளர்கள். முதற்கட்ட, இரண்டாம்கட்ட, மூன்றாம்கட்ட அகழாய்வை மத்திய அரசின் தொல்லியல் துறை மேற்கொண்டது. அதற்கு அடுத்தகட்ட அகழாய்வுப் பணிகளைத் தமிழக அரசின் தொல்லியல் துறை மேற்கொண்டுவருகிறது.

கீழடி - சங்ககால நகரம்
கீழடி - சங்ககால நகரம்

காவிரிப்பூம்பட்டினத்தில் நடைபெற்ற அகழாய்வுக்குப் பிறகு, பரந்த அளவில் அகழாய்வு நடைபெறுவது கீழடியில்தான். இங்கு நடைபெறும் அகழாய்வு குறித்து ஆரம்பத்தில் சர்ச்சை நிலவியது. `தமிழர்களின் தொன்மையையும், பெருமைமிகு நாகரிகத்தையும் மத்திய அரசு மறைக்கச் சதிசெய்கிறது’ என்று பலரும் குற்றம்சாட்டினர். இந்தப் பின்னணியில், கீழடி அகழாய்வின் கண்காணிப்பு அதிகாரியாக இருந்த அமர்நாத் ராமகிருஷ்ணன் அஸ்ஸாம் மாநிலத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டது சர்ச்சையானது.

அதன் பிறகு 4-வதுகட்ட அகழாய்வைத் தமிழக அரசின் தொல்லியல் துறை மேற்கொண்டு 5,820 தொல்பொருள்களை வெளிக்கொணர்ந்தது. தொல்லியல் துறை துணை இயக்குநர் இரா.சிவானந்தம் இதன் இயக்குநராக இருக்க, தொல்லியல் ஆய்வுகள் நடந்துவருகின்றன.

சுடுமன்ணால் ஆன உறைகிணறு, அகழாய்வுக் குழிகள், செங்கல் கட்டுமானம்
சுடுமன்ணால் ஆன உறைகிணறு, அகழாய்வுக் குழிகள், செங்கல் கட்டுமானம்

கி.மு 6-ம் நூற்றாண்டிலேயே பல வசதிகள் கொண்ட நகர அமைப்புடன் தமிழர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய குளியல் தொட்டி 5-ம்கட்ட அகழாய்வில் கண்டறியப்பட்டுள்ளது. `இன்னும் ஐம்பது ஆண்டுகளுக்கு அங்கு தொல்லியல் ஆய்வுகள் நடைபெற வேண்டும்’ என்று தொல்லியல் ஆர்வலர்கள் கூறிவருகிறார்கள்.

அழகன்குளம் - பண்டைக்காலத் துறைமுகம்

கி.மு 2-ம் நூற்றாண்டு - கி.பி 2-ம் நூற்றாண்டு காலத்தில் முக்கியத் துறைமுகமாக விளங்கியிருக்கிறது, வைகை ஆற்றின் முகத்துவாரத்துக்கு அருகில் அமைந்துள்ள அழகன்குளம்.

அழகன்குளம் - பண்டைக்காலத் துறைமுகம்
அழகன்குளம் - பண்டைக்காலத் துறைமுகம்

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே இது அமைந்திருக்கிறது. அங்கு, 1986-87, 1990-91, 1993-94, 1995-96, 1996-97, 1997-98, 2014-15, 2016-17ஆகிய ஆண்டுகளில் அகழாய்வுகள் நடத்தப்பட்டன.

இந்த அகழாய்வுகளில், கி.மு 357-ம் ஆண்டைச் சேர்ந்த அரும்பொருள்கள் பல கண்டெடுக்கப் பட்டிருக்கின்றன. பண்டைய காலத்தில் பயன்படுத்தப்பட்ட சங்கு வளையல்கள், கல்மணிகள், சுடுமண் மணிகள், கண்ணாடி மணிகள், விளையாட்டுப் பொருள்கள், இரும்பினாலான கருவிகள், யானைத் தந்தங்களால் ஆன அணிகலன்கள் போன்றவை கிடைத்திருக்கின்றன. மத்திய தரைக்கடல் பகுதி நாடுகளுடன் தமிழர்கள்கொண்டிருந்த வணிகத் தொடர்பை உறுதிசெய்யும் அரிய வகை மட்பாண்டங்கள், நாணயங்கள், தமிழ் பிராமி எழுத்துப் பொறித்த மட்பாண்டங்கள் ஆகியவையும் இவற்றில் அடக்கம். ரோம் நகருக்கும் தமிழகத்துக்கும் இடையே வர்த்தகத் தொடர்புகள் இருந்ததற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளன.

அழகன்குளத்தில் அகழாய்வுப் பணி, பானை ஓடுகள்,
அழகன்குளத்தில் அகழாய்வுப் பணி, பானை ஓடுகள்,

இங்கு கண்டெடுக்கப்பட்ட தமிழ் பிராமி எழுத்துகள் கி.மு 308-ஐச் சேர்ந்தவை. தமிழ் பிராமி எழுத்துகள் அசோகர் காலத்துக்கு முற்பட்டவை; இந்தப் பொருள்களை அமெரிக்காவுக்கு அனுப்பி கார்பன் பரிசோதனை செய்ததில், ஒரு பொருள் கி.மு.308-ஐச் சேர்ந்தது என்றும், மற்றொன்று கி.மு.357-ஐச் சேர்ந்தது என்றும் தெரியவந்திருக்கிறது.

அகநானூற்றில் இடம்பெற்றிருக்கும் ஊனூர், மருங்கூர்பட்டினம் ஆகியவை அழகன்குளத்துக்கு அருகே அமைந்திருக்கின்றன. மதுரைக்காஞ்சியில் குறிப்பிடப்பட்டிருக்கும் `நெல்லினூர்’ என்ற ஊரும் அழகன்குளத்துக்கு அருகேதான் அமைந்திருக்கிறது.

கொடுமணல் - வணிகப் பெருநகர்

நொய்யல் ஆற்றின் வடகரையில் அமைந்திருக்கும் கொடுமணல், சங்ககாலத்தில் சிறப்புற்று விளங்கிய வணிகப் பெருநகரம்.

கொடுமணல் - வணிகப் பெருநகர்
கொடுமணல் - வணிகப் பெருநகர்

ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டத்திலுள்ள இந்த ஊர், பண்டைய காலத்தில் கைவினைத் தொழிலுக்குப் பெயர்பெற்று விளங்கியது. சேரரின் தலைநகரமாக விளங்கிய கருவூரையும், அவர்களின் சிறந்த மேலைக் கடற்கரைத் துறைமுகமான முசிறிபட்டினத்தையும் இணைக்கும் பெருவழியில் அமைந்திருக்கிறது. இந்த ஊரைப் பற்றி சங்ககாலப் புலவரான கபிலர் பாடியிருக்கிறார்.

இங்கு மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள் மூலம், விலையுயர்ந்த கற்களைக்கொண்டு உருவாக்கப்பட்ட கல்மணிகள் செய்யும் தொழிற்கூடமும் செம்பு, இரும்பு மற்றும் எஃகு உருக்கப்பட்டதற்கான தொழிற்கூடங்களும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. இங்கு, சங்கு அறுப்புத் தொழில் சிறப்புற்று விளங்கியிருக்கிறது. அதற்கு ஆதாரமாக, சங்கு வளையல்கள், கழுத்தணிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. யானைத் தந்தத்தாலான அணிகலன்களும் கிடைத்துள்ளன.

கொடுமணல் தொல்லியல் தலம்
கொடுமணல் தொல்லியல் தலம்

கொடுமணலில் உருவாக்கப்பட்ட அணிகலன்களைப் பெறுவதற்காக இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து வணிகர்கள் வந்திருக்கிறார்கள். மத்திய கங்கைச் சமவெளிப் பகுதியிலிருந்து வணிகர்களும் கைவினைஞர்களும் இங்கு வந்து சென்றதைத் தமிழ்மயப்படுத்தப்பட்ட பிராகிருத மொழி கலந்த ஆட்பெயர்களும், வணிகர்கள் பெயர்களும் உறுதிப்படுத்துகின்றன.

இங்கு கண்டெடுக்கப்பட்ட மட்கலன்கள் நேர்த்தியாகவும் பளபளப்பாகவும் உள்ளன. கல்மணிகள், பளிங்குக்கற்களால் ஆன மணிகள், சூது பவளம் போன்றவற்றால் ஆன கல்மணிகளும் கிடைத்திருக்கின்றன. இங்கு கண்டெடுக்கப்பட்ட ரோமானிய நாட்டு மட்கலன்கள் வெளிநாட்டுடன் வாணிபத் தொடர்பு இருந்தது என்பதை உறுதிப்படுத்துகின்றன.

பட்டரைப்பெரும்புதூர் - பழங்காலத் தொழிற்பட்டறை

சென்னையை அடுத்து திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பட்டரைப்பெரும்புதூரில், கற்காலத்திலிருந்தே (கி.மு. 30,000 – கி.மு. 10,000) மனிதர்கள் வாழ்ந்ததற்கான மண் அடுக்குச் சான்றுகளும், இரும்புக் காலம், வரலாற்றுத் தொடக்கக்காலம் ஆகியவற்றின் எச்சங்களும் கிடைத்துள்ளன.

பட்டரைப்பெரும்புதூர் - பழங்காலத் தொழிற்பட்டறை
பட்டரைப்பெரும்புதூர் - பழங்காலத் தொழிற்பட்டறை

கொசஸ்தலை ஆற்றுப்படுகையிலிருந்து சற்றுத் தொலைவில் பட்டரைப்பெரும்புதூர் அமைந்திருக்கிறது. குடியம் குகைகள், அத்திரம்பாக்கம் போன்ற வரலாற்றுக்கு முந்தையகால தலங்களால் இது சூழப்பட்டிருக்கிறது. ஆனைமேடு, நத்தமேடு, இருளந்தோப்பு ஆகிய இடங்களில் ஆய்வுக்குழிகள் தோண்டப்பட்டு, தமிழ்நாட்டுத் தொல்லியல் துறையினர் 2014-15 ஆண்டு முதன்மை ஆய்வு நடத்தினர். 2016-ம் ஆண்டு முழுமையான அகழாய்வை நடத்தினர்.

1.5 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தில் இந்தப் பகுதியில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் கிடைத்திருக்கின்றன. கற்கால மனிதர்கள் பயன்படுத்திய கற்கருவிகளும் கிடைத்துள்ளன.

வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் கற்காலத் தொழிற்பட்டறைகள் இங்கு இருந்திருக்கின்றன என்பதும், கற்கால மக்கள் பயன்படுத்திய கற்கோடரிகள் இந்தப் பட்டறைகளில் உருவாக்கப்பட்டிருக்கின்றன என்பதும் கண்டறியப்பட்டுள்ளன. இது, சங்ககாலத்தில் ரோமானியர்களுடன் வர்த்தகம் மேற்கொண்ட வணிக மையமாகவும் திகழ்ந்திருக்கக்கூடும் என்று தொல்லியலாளர்கள் கருதுகின்றனர்.

 குடியம் குகை, அத்திரம்பாக்கம்
குடியம் குகை, அத்திரம்பாக்கம்

கற்காலத்தைச் சேர்ந்த கைக்கோடரி, கத்தி, சுரண்டி போன்ற கற்கருவிகள், நுண்கற்காலத்தைச் சேர்ந்த சுரண்டி, துளைப்பான் போன்ற கற்கருவிகள், புதிய கற்காலத்தைச் சேர்ந்த கருங்கல் மற்றும் டாலிரைட் கற்களினாலான மூன்று கற்கோடரிக் கருவிகள் போன்றவையும் இவற்றுள் அடங்கும். பெருங்கற்காலக் குறியீடுகளுடன் மட்பாண்டச் சில்லுகள், கல்மணிகள், கண்ணாடி வளையல் துண்டுகள், எடைக்கற்கள், சக்கரம், மத்தியதரைக்கடல் பகுதியின் சாயல்கொண்ட மட்பாண்டங்கள், ரௌலட் வகை மட்பாண்டங்களின் ஓடுகள், வளைந்த கூரை ஓடுகள், 23 உறைகளைக்கொண்ட சுடுமண் உறை கிணறு போன்றவையும் இவற்றுள் அடங்கும்.

பட்டறைப்பெரும்புதூரை ஒட்டி முற்காலத்தில் காஞ்சிபுரத்தில் தொடங்கி வட இந்தியாவுக்கு ஒரு பெருவழி சென்றிருக்கலாம் என்றும், பெருவழியைப் பயன்படுத்திய ரோமானியர்களும் மற்ற வர்த்தகர்களும் இப்பகுதிகளில் தங்கிச் சென்றிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

ஆதிச்சநல்லூர் - 3,700 ஆண்டுகளுக்கு முற்பட்டது

கொற்கையைத் தலைநகராகக்கொண்டு பாண்டியர்கள் ஆட்சிபுரிந்தபோது, பண்பாட்டுச் சிறப்புமிக்க ஓர் இடமாக விளங்கியது ஆதிச்சநல்லூர். தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூரில் நடைபெற்ற அகழாய்வில், 3,700 ஆண்டுகளுக்கு முற்பட்ட நாகரிகம் இங்கு இருந்ததற்கான தடயங்கள் கிடைத்துள்ளன.

ஆதிச்சநல்லூர் - 3,700 ஆண்டுகளுக்கு முற்பட்டது
ஆதிச்சநல்லூர் - 3,700 ஆண்டுகளுக்கு முற்பட்டது

இங்கு கிடைத்துள்ள எலும்புக்கூடுகளும், மண்டையோடுகளும் சுமார் 3,700 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்று கண்டறியப்பட்டுள்ளது.

ஆனாலும், `அங்கு முழுமையான அகழாய்வு நடைபெறவில்லை, அது குறித்து இந்தியத் தொல்லியல் துறை ஆர்வம் காட்டவில்லை’ என்ற குற்றச்சாட்டுகள் உள்ளன. அங்கு மீண்டும் அகழாய்வு நடத்த இந்தியத் தொல்லியல் துறைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தூத்துக்குடியைச் சேர்ந்த காமராஜ் என்பவர் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவை, நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு விசாரித்தது.

புதைந்துகிடக்கும் முதுமக்கள் தாழி
புதைந்துகிடக்கும் முதுமக்கள் தாழி

அப்போது, “தமிழகத்தின் பாரம்பர்யத்தை வெளிப்படுத்தும் ஒவ்வோர் அகழாய்வுக்கும் நீதிமன்றத்தை அணுக வேண்டியிருக்கிறது. தமிழகத்தின் பாரம்பர்யங்களை வெளிப்படுத்துவதில் மத்திய அரசு ஆர்வம் காட்டாமல் இருப்பதுபோலத் தெரிகிறது.

வெளிநாடுகளில் அகழாய்வு நடத்தப்பட்டு, பழங்காலப் பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அவற்றை அந்த நாடு தூக்கிவைத்துக் கொண்டாடும். ஆனால், மத்திய தொல்லியல்துறை நடவடிக்கையைப் பார்க்கும்போது தமிழகம் இந்தியாவில்தான் இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது” என்றது உயர் நீதிமன்றம் காட்டமாக.

2019-20-ம் ஆண்டில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை இங்கு அகழாய்வு மேற்கொள்ள மத்திய தொல்லியல் ஆலோசனைக் குழுவிடம் அனுமதி கேட்டிருக்கிறது.

பொருந்தல் - கி.மு 500-ல் நெல் சாகுபடி

சங்ககாலக் குறுநில மன்னன் பேகனின் நிலப்பகுதியாகக் கருதப்படும் பழநிக்கு அருகே தென்மேற்கில் அமைந்துள்ளது பொருந்தல். இது, சங்ககாலக் கவிஞர் பொருந்தில் இளங்கீரனார் வாழ்ந்த ஊராகக் கருதப்படுகிறது. புதுச்சேரிப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறைத் தலைவரான பேராசிரியர் கே.ராஜன் தலைமையில் 2009-2010-ம் ஆண்டு அகழாய்வு நடைபெற்றது.

பொருந்தல் - கி.மு 500-ல் நெல் சாகுபடி
பொருந்தல் - கி.மு 500-ல் நெல் சாகுபடி

இந்த ஊரிலுள்ள ஈமக் காட்டில் நான்கு கால்களைக்கொண்ட ஜாடியில் நெல்மணிகள் வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. அவை கி.மு.490-ம் ஆண்டைச் சேர்ந்தவை. இதன்மூலம், தமிழர்களின் நெல் விவசாயப் பாரம்பர்யம் 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

அதே ஆய்வில் கண்டறியப்பட்ட சுடுமண்பாண்டம் ஒன்றில் ‘வயிர’ என்ற தமிழ் எழுத்துகள் இருந்துள்ளன. இதன் மூலம் தமிழ் வரி வடிவத்தின் தொன்மை, 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

ஏராளமான கண்ணாடி மணிகள் இன்றும் அங்கு கிடைக்கின்றன. அவை, மெருகேற்றப்பட்ட அழகிய கண்ணாடி மணிகளாக இருக்கின்றன. இந்த மணிகள் பல்வேறு நிறத்தில் காணப்படுகின்றன. சதுரங்க விளையாட்டில் பயன்படுத்தும் காய்கள், சுடுமண் பொம்மைகள், தந்தத்தினாலான தாயக் கட்டைகள், சுடுமண்ணில் செய்யப்பட்ட காதணிகள், செப்புக் காசு போன்ற அரும்பொருள்கள் இங்கு கிடைத்திருக்கின்றன.

பொருந்தல் தொல்லியல் தலம்
பொருந்தல் தொல்லியல் தலம்

தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த இடங்களில் போதுமான நிதி ஒதுக்கீடு செய்து, தொய்வின்றி முழுமையாக அகழாய்வுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். கண்டெடுக்கப்படும் அரும்பொருள்களை வரலாற்று நிகழ்வுகளுடன் தொடர்புபடுத்தி அரசியல் வரலாறு, சமூக வரலாறு, பண்பாட்டு வரலாறு, பொருளாதார வரலாறு, கலை வரலாறு எனப் பல வகையான வரலாறுகளுடன் இணைத்து ஆய்வுசெய்ய வேண்டும். இந்த ஆய்வுகள் பாரபட்சமின்றி மேற்கொள்ளப்பட வேண்டும். கண்டெடுக்கப்படும் அரும்பொருள்களைப் பொதுமக்களின் பார்வைக்குக் காட்சிப்படுத்த வேண்டும். அதற்கு, அருங்காட்சியகங்கள் அமைக்க வேண்டும். ஆய்வுமுடிவுகளைப் பாடப்புத்தகங்களில் இடம்பெறச் செய்ய வேண்டும். தமிழ்ச்சமூகத்தின் தொன்மையை உலகுக்குப் பறைசாற்ற வேண்டும்.