75-வது சுதந்திர தினம் நாளை நாடு முழுவதும் கொண்டாடப்படவிருக்கிறது. அதை முன்னிட்டு `ஹர்கர் திரங்கா' என்ற பெயரில் அனைவரது வீடுகளிலும் தேசியக்கொடியை ஏற்றுவோம் என மத்திய அரசு அறிவித்திருக்கிறது. ஆகஸ்டு 13-ம் தேதி முதல் வரும் 15-ம் தேதி வரை நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய வீட்டில் தேசியக்கொடியை ஏற்றுமாறு அரசு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று பொதுமக்கள் தொடங்கி அரசியல்வாதிகள், திரை பிரபலங்கள் என அனைவரும் தங்களின் வீடுகளில் தேசியக்கொடியை ஏற்றி வருகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடியின் ‘ஹர் கர் திரங்கா’ அழைப்பை ஏற்று நாட்டின் மூலை முடுக்கெல்லாம் மூவர்ணக்கொடியை ஏற்றி 75-வது சுதந்திர தினத்தை இந்தியா பெருமையுடன் கொண்டாடும் தருணத்தில், உத்தரப்பிரதேச மாநிலம், குஷிநகரில் சல்மான் (வயது 21) என்பவர் பாகிஸ்தான் கொடியை தனது வீட்டு மொட்டை மாடியில் ஏற்றி வைத்திருக்கிறார். தாரியா சுஜான் போலீஸ் எல்லைக்குட்பட்ட வேடுபர் முஸ்தகில் என்ற கிராமத்தில் பாகிஸ்தான் கொடி ஏற்றப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
இதையறிந்த அக்கம் பக்கத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பாகிஸ்தான் தேசியக்கொடியை அகற்றி சல்மானை கைதுசெய்தனர். பாகிஸ்தான் கொடியை ஏற்றி தேச விரோத செயலில் ஈடுபட்ட சல்மான் மற்றும் அவரது குடும்பத்தினர் தண்டிக்கப்பட வேண்டும் என்று உள்ளூர்வாசிகள் வலியுறுத்தி வருகின்றனர். மேலும், இவரது வீட்டில் ஏற்றப்பட்ட பாகிஸ்தான் கொடி தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது. இன்று பாகிஸ்தானின் சுதந்திர தினம் என்பதால் அந்த இளைஞர் அப்படி செய்திருக்கக் கூடும் என்கிறார்கள் போலீஸார்.