திருச்சி, பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக திருச்சி விமான நிலையத்துக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்றுமுன்தினம் (நவம்பர் 28) காலை வந்தார். அப்போது 64-வது வார்டைச் சேர்ந்த ஹர்ஷத் பேகம் மற்றும் ஓலையூர் சிப்பி நகர் குடியிருப்போர் பகுதியைச் சேர்ந்த மக்கள், ‘எங்கள் பகுதியில் போதுமான பேருந்து வசதி இல்லை. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவர்கள், பெண்கள் என பலரும் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே எங்களது பகுதிக்கு கூடுதல் பேருந்து சேவை வழங்க வேண்டும்’ என்ற கோரிக்கை மனுவினை முதல்வரிடம் அளித்தனர்.
அந்த மனுவை பெற்றுக்கொண்டு பரிசீலனை செய்த முதல்வர், ‘உடனடியாக அந்த வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுங்கள்’ என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார்.

அதனையடுத்து பெரம்பலூர், அரியலூரில் நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு முதல்வர் மறுநாள் திருச்சிக்கு வருவதற்குள்ளாக, முதல்வர் சொன்ன விஷயத்தை உடனே செய்தாக வேண்டுமென அதிகாரிகள் களத்தில் இறங்கினர். அதையடுத்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக திருச்சி மண்டலம் சார்பில் கே.கே.நகர் முதல் ஓலையூர் வரை மகளிருக்கான கட்டணமில்லா கூடுதல் பேருந்து சேவையை கலெக்டர் பிரதீப்குமார் தலைமையில் ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ பழனியாண்டி நேற்று தொடங்கி வைத்தார்.
இந்தநிலையில், எம்.எல்.ஏ பழனியாண்டி பேசுகையில், “பெரம்பலூர், அரியலூரில் நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு முதல்வர் சென்னை செல்வதற்குள் ஒரு கோரிக்கை நிறைவேற்றப்படுகிறது என்று சொன்னால் அது தமிழக முதலமைச்சரால் மட்டும் தான் முடியும். எந்தக் கோரிக்கையாக இருந்தாலும் என்னிடம் சொல்லுங்கள். அதை நிறைவேற்றித் தருகிறேன்” என்றார்.
நிகழ்ச்சிக்குப் பிறகு பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளை பேருந்தில் ஏற்றிய ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ பழனியாண்டி, புதிதாக தொடங்கி வைத்த பேருந்தில் டிரைவர் சீட்டில் உட்கார்ந்து ஸ்டியரிங்கைப் பிடித்து சிறிது தூரம் ஓட்டிச் சென்றார். எம்.எல்.ஏ பேருந்து ஓட்டியதையடுத்து பொதுமக்களும், கட்சி நிர்வாகிகளும் கைதட்டி உற்சாகப்படுத்தினர்.
இது தொடர்பாக இன்று முதல்வர் ஸ்டாலின் எழுதி இருக்கும் கடிதத்தில், ``நவம்பர் 28-ஆம் நாளன்று திருச்சி சென்றவுடன் விமான நிலைய வளாகத்தில் ஏர்போர்ட், கே.கே.நகர் பகுதி மக்களின் குறைகளை கேட்டேன். அப்போது தாய்மார்கள், கே.கே.நகர்- ஒலையூருக்கு கூடுதல் பேருந்து சேவை கேட்டார்கள். உடனே போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரிடம் கூறி, அன்றே பேருந்து சேவை, அதுவும் கட்டணமில்லா பேருந்து சேவை துவக்கி வைக்கப்பட்டது. விமான நிலையத்திலிருந்து இறங்கியவுடன் முதலில் நிறைவேற்றி வைத்த மக்கள் கோரிக்கை!” என்றார்.