Published:Updated:

`புரொமோஷன் இல்லை’ - தற்கொலை செய்துகொண்ட உதவி ஆய்வாளர் - மன அழுத்தம், குடும்பப் பிரச்னை காரணமா?

தற்கொலை செய்துகொண்ட எஸ்.ஐ முருகன்
News
தற்கொலை செய்துகொண்ட எஸ்.ஐ முருகன்

மன அழுத்தம், குடும்பப் பிரச்னை உள்ளிட்ட காரணங்களால் விரக்தியில் இருந்ததாகக் கூறப்படும் காவல்துறை அதிகாரி, தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் திண்டிவனம் பகுதியில் பதற்றத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:

`புரொமோஷன் இல்லை’ - தற்கொலை செய்துகொண்ட உதவி ஆய்வாளர் - மன அழுத்தம், குடும்பப் பிரச்னை காரணமா?

மன அழுத்தம், குடும்பப் பிரச்னை உள்ளிட்ட காரணங்களால் விரக்தியில் இருந்ததாகக் கூறப்படும் காவல்துறை அதிகாரி, தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் திண்டிவனம் பகுதியில் பதற்றத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

தற்கொலை செய்துகொண்ட எஸ்.ஐ முருகன்
News
தற்கொலை செய்துகொண்ட எஸ்.ஐ முருகன்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகேயுள்ள ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். இவர், 1996-ம் ஆண்டு காவல் உதவி ஆய்வாளராகப் பணியில் சேர்ந்தாராம். முதலில், ராணி என்பவரை திருமணம் செய்திருக்கிறார். இவர்களுக்கு 30 வயதில் ஒரு மகளும், 26 வயதில் ஒரு மகனும் இருக்கின்றனர். அதன்பின்னர், திண்டிவனத்தைச் சேர்ந்த மேகலா என்பவரை திருமணம் செய்துகொண்டவர், அவருடனே வசித்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. இவர்களுக்கு 11-ம் வகுப்பு பயிலும் மகன் ஒருவன் இருக்கிறான். தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்த இவர், நேற்று (24.01.2022) அதிகாலை 12:30 மணியளவில் திண்டிவனத்திலுள்ள அவரின் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

முண்டியம்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை
முண்டியம்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை

ஒரு காவல்துறை அதிகாரியே தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம், திண்டிவனம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. தகவலின் பேரில் முருகனின் உடலை மீட்ட காவல்துறை அதிகாரிகள், திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர். எனவே, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு முருகனின் உடலை உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைத்த போலீஸார், முதல் மனைவி ராணி அளித்த புகாரின் அடிப்படையில் 174-வது பிரிவின்கீழ் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இந்த நிலையில், முருகனின் மரணம் குறித்து அவரது இரண்டாவது மனைவி மேகலாவிடம் பேசினோம். "அவர் கூட வேலையில சேர்ந்தவங்க எல்லாம் இப்போது, டி.எஸ்.பி., கேடர்ல இருக்காங்க. ஆனா, 'தனக்கு புரொமோஷன் கிடைக்கலியே' என்ற ஸ்டிரஸ் (மன அழுத்தம்) தான் அவருக்கு" என்று கூறி கதறிய அவரால், அதற்கு மேல் பேச முடியவில்லை.

அதைத் தொடர்ந்து பேசிய முருகனின் உறவினர்கள், "கிட்டத்தட்ட 30 வருடத்துக்கு முன், உதவி ஆய்வாராகத்தான் இவர் பணியில் சேர்ந்தார். ஆனால், இன்றுவரை அவருக்கு புரொமோஷன் என்பதே இல்லை. யாருக்கும் இசைந்து கொடுக்காமல் பணியில் நேர்மையாக இருந்ததால் அடிக்கடி இவருக்கு சார்ஜ் கொடுப்பதும், இடமாறுதல் செய்வதும்தான் பரிசாகக் கிடைக்கும். இதனாலேயே அவருக்கு புரொமோஷன் இல்லாமல் இருந்ததுவந்தது.

முருகன் எஸ்.ஐ
முருகன் எஸ்.ஐ

இவருடன் பணியில் சேர்ந்தவர்கள் எல்லாம் இன்று ஏ.டி.எஸ்.பி., டி.எஸ்.பி கேடரில் இருக்கிறார்கள். ஆனால், தனக்கு 58 வயது ஆகப்போகின்ற வரையிலும் புரொமோஷன் என்பதே இல்லையே என்ற மன அழுத்தம் இவருக்கு மிகவும் அதிகம். கூடுதலாகப் பணிச்சுமையும் இருந்துவந்திருக்கிறது. புரொமோஷன் தொடர்பாக சுமார் நான்கு தடவை தலைமைச் செயலகத்தில் மனுவும் கொடுத்திருக்கிறார். ஆனால், நடவடிக்கை ஏதுமில்லை. இதைக்கொண்டே வீட்டில் அவ்வப்போது பிரச்னையும் ஏற்படும். கடந்த வருடம் அக்டோபர் மாதத்தில், தியாகதுருகம் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டார். கொஞ்ச நாளிலேயே அவருடைய அம்மா கீழே விழுந்ததில் அடிபட்டுவிட்டார். ஒரே மகன் என்பதால், மேல்மருவத்தூரிலுள்ள மருத்துவமனையில் அம்மாவை அனுமதித்து இவர்தான் பார்த்துக்கொண்டார்.

அதற்காகதான் 50 நாள்கள் மருத்துவ விடுப்பும் எடுத்திருந்தார். அதன் பின்னர், மீண்டும் பணியைத் தொடர்வதாக டிசம்பர் மாதம் காவல் நிலையத்துக்குச் சென்று ரிப்போர்ட் செய்துவிட்டு வந்தார். ஆனால், அவருடைய அம்மாவின் உடல்நிலை மேலும் கவலைக்கிடமாகிப் போனது. இந்த வரும் ஜனவரி மாத துவக்கத்தில், 6-ம் தேதி போலதான் அவருடைய அம்மா இறந்துவிட்டார். இதுவும் அவரது மனதைப் பெரிதும் பாதித்திருந்தது. இதனால், 'பணியைத் தொடர்கிறேன்' என காவல் நிலையத்தில் ரிப்போர்ட் செய்தவர், பணிக்குச் செல்லவில்லை. இந்த நிலையில்தான், தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்" என்றனர்.

திண்டிவனம் காவல் நிலையம்
திண்டிவனம் காவல் நிலையம்

மேலும், இதுகுறித்து திண்டிவனம் காவல்நிலைய வட்டாரத்தில் விசாரித்தோம். "இவருக்கு இரண்டு மனைவிகள். அதனால் குடும்பப் பிரச்னைகள் இருந்திருக்கிறது. மேலும், பணியிலிருந்து அவ்வப்போது இவரே தனிச்சை விடுப்பில் சென்றுவிடுவாராம். இதனாலேயே இவருக்கு புரொமோஷன் பாதிக்கப்பட்டு வந்திருக்கிறது. கடைசியாக, கடந்த வருடம் இறுதியில் தியாகதுருகம் காவல் நிலையத்தில் 50 நாட்கள் மருத்துவ விடுப்பு எடுத்தவர், 21-12-2022 அன்று பணியில் ஈடுபடுவதாக ரிப்போர்ட் செய்திருக்கிறார். ஆனால், அதன் பின்னர் தன்னிச்சையாக வேலைக்குச் செல்லாமல் இருந்துவந்திருக்கிறார். மேலும், குடிப்பழக்கமும் இருந்திருக்கிறது. 23-ம் தேதி அவரின் வீட்டில் பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில்தான், 24-ம் தேதி அதிகாலை 12:30 மணியளவில் அனைவரும் தூங்கிய பிறகு கதவை உட்புறமாக பூட்டிவிட்டு ஃபேனில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். உடற்கூறாய்வுக்குப் பின்னர், அவரது உடல் சொந்த ஊரான ஆலம்பூண்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சம்பவம் குறித்து வழக்கு பதிந்து விசாரித்துவருகிறோம்" என்றனர்.