வரதட்சணை கொடுமையால் ஒன்பது மாத கர்ப்பிணி எரித்துக்கொல்லப்பட்ட சம்பவத்தில், வயிற்றிற்குள் இருந்த குழந்தையும் இறந்துவிட்டது. இச்சம்பவம் ஆண்டிமடத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பெண்ணின் கணவன், மாமியார் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கக்கோரி மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் ஒன்றியம் கொடுக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வெங்கடேசன்- நீலாவதி தம்பதியினர். இவர்களின் மகள் நிர்மலா. கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு சிலம்பூர் கிராமத்தைச் சேர்ந்த புகழேந்திக்கும் நிர்மலாவிற்கும் இரு குடும்பத்தாரின் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது பேசியப்படி வரதட்சணையாக தரவேண்டிய நகையில் 7 பவுன் பாக்கி இருந்ததாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், நிர்மலா ஒன்பது மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். நிர்மலாவிற்கு வளைகாப்பு விழா நடத்துவதற்காக வெங்கடேசன் மற்றும் உறவினர்கள் அதற்கான ஏற்பாட்டினை செய்து வந்தனர். கடந்த, வருடம் சிங்கப்பூரில் இருந்து வந்த வெங்கடேசனிடம் வளைகாப்பு விழா நடத்தி மகளை அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளனர்.

மேலும், வரதட்சணையாக கொடுக்க வேண்டிய 7 பவுன் நகையை கொடுத்துவிட்டு நீங்கள் உங்களது மகளை அழைத்து செல்லலாம் என்றும் மருமகன் புகழேந்தி சொல்லியிருக்கிறாராம். வெங்கடேசனும் வேறு வழியில்லாமல் நகைக்கான பணத்தை வேறு ஒருவரிடம் இருந்து கடனாக வாங்கி நகை எடுப்பதற்காக தயாராக இருந்த நிலையில்,

கடந்த வாரம் அதே ஊரைச் சேர்ந்த சிலர் வெங்கடேசனுக்கு போன் செய்து, உங்கள் மகள் எரிந்த நிலையில் சடலமாக கிடக்கிறாள் என்று தகவல் சொல்லியிருக்கிறார்கள்.
பதறி அடித்துக்கொண்டு ஊர் மக்களோடு சென்று பார்த்தபோது, மகள் சடலமாக கிடந்ததை கண்டு கதறி துடித்தார் வெங்கடேசன். இது குறித்து ஆண்டிமடம் போலீஸாருக்கு தகவல் கொடுத்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் தீக்காயத்துடன் எரிந்த நிலையில்,

கிடந்த நிர்மலாவின் உடலை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று பிரேத பரிசோதனை செய்தனர். அப்போது, வயிற்றிற்குள் இருந்த சிசுவும் தீக்காயங்களுடன் இறந்த நிலையில் எடுக்கப்பட்டது. போலீஸார் விசாரணை செய்ததில் வரதட்சணை கொடுமை செய்தது உறுதியானதையடுத்து புகழேந்தியையும் அவரது தாயாரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதனிடையே, நிர்மலாவை அடித்து கொன்று தீ வைத்து கொளுத்தியதாகவும், அதற்கு உடந்தையாக இருந்த கணவர் மற்றும் உறவினர்களை கைது செய்ய கோரியும் நிர்மலா குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க கோரியும் மாதர் சங்கத்தினர் ஆண்டிமடம் நான்கு ரோட்டில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதுகுறித்து நிர்மலாவின் தந்தை வெங்கடேசனிடம் பேசினோம். ”திருமணத்தின் போது நகை, பணம் வாங்கிக்கொண்டு வரவில்லை என்பதால் எனது மகளை ஊசியால் குத்திக்கு குத்தியே பலமுறை கொடுமைப் படுத்தியிருக்கிறார்கள். வலி தாங்கமுடியாமல் என் மகள், `கொஞ்சம் கொஞ்சமாக வேதனைப்படுத்தி கொடுமை செய்வதற்கு பதில் என்னை முழுமையாக கொன்றுவிடுங்கள். உங்களது டார்ச்சர் என்னால் தாங்க முடியவில்லை’ என கதறி துடித்திருக்கிறாள். நாங்கள் வசதியாக இல்லை என்பதனை அடிக்கடி குத்திக்காட்டிக் கொண்டே இருந்திருக்கிறார்கள் புகழேந்தியின் குடும்பத்தினர். இதனை எங்களிடம் பலமுறை சொல்லியிருக்கிறாள்.

எனது மகளை வரதட்சணை கொடுமையால் அடித்துக்கொன்ற புகழேந்தி, அவரின் தாயார் உள்ளிட்ட இருவரை மட்டுமே கைது செய்துள்ளனர். மேலும், அவர்களது உறவினர்கள் சிலரை கைது செய்து உரிய தண்டனை வழங்க வேண்டும். எனது பெண்ணை துடிக்துடிக்க கொலை செய்த புகழேந்திக்கு தூக்குத் தண்டனை வழங்க வேண்டும். அவரின் தாயாருக்கு ஆயுள் தண்டனை வழங்க வேண்டும். அப்போதுதான் என் மகளின் ஆன்மா சாந்தி அடையும். இனி ஒரு வரதட்சணை கொடுமை நடக்கக் கூடாது" என்று கதறினார்.