Published:Updated:

`உழவர் குழு, இ-மார்க்கெட்டிங், கிசான் கார்டு லோன்'- விவசாயிகளுக்கான பா.ஜ.க-வின் பக்கா பிளான்!

"விவசாயிகளுக்கு நேரடி சந்தை விற்பனை வாய்ப்பை உருவாக்குவோம்'' என்கிறது மத்திய பா.ஜ.க அரசு. ஆனால், ''விவசாயி, சந்தைக்குச் சென்றால், வியாபாரிகள் மொட்டையடித்துவிடுவார்கள்'' என்று விமர்சிக்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்.

''விளைபொருள்களை விரும்பிய இடத்தில், விற்பனை செய்யும் உரிமையை வழங்கி, விவசாயிகளை சுரண்டலிலிருந்து காப்பாற்றப்போகிறோம்'' என்று அறிக்கை வெளியிட்டு 'இன்ப அதிர்ச்சி' கொடுத்திருக்கிறார் இந்திய துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு.

'விவசாயிகளுக்கு கடனுதவி வேண்டும், விவசாய இடுபொருள்களை மானிய விலையில் அரசே வழங்க வேண்டும்' என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ச்சியாக நாடெங்கிலும் விவசாயிகள் போராடி வருகின்றனர். கடந்த வருடங்களில் டெல்லியில் நடைபெற்ற விவசாய சங்கங்களின் போராட்டங்கள் ஒட்டுமொத்த உலகத்தின் கவனத்தையும் ஈர்த்தன. ஆனாலும் மத்திய பா.ஜ.க அரசு, இவ்விஷயத்தில் உறுதியான நிலைப்பாடு எதையும் எடுக்காமல் இருந்து வந்ததையடுத்து, பா.ஜ.க அரசு மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டன.

வெங்கைய நாயுடு
வெங்கைய நாயுடு

இந்த நிலையில், கொரோனா நிவாரண அறிவிப்பில், விவசாயிகளுக்கான கடன் உதவிகள் உள்ளிட்ட பல்வேறு நிவாரண உதவிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக, விவசாயிகளின் மீதான சுரண்டலைத் தடுத்து நிறுத்தி, வணிக ரீதியாக விவசாயிகளைத் தன்னிறைவு அடையச் செய்யும் வழிமுறைகளை பா.ஜ.க அரசு மேற்கொண்டுவருவதாக அக்கட்சியினர் கூறிவருகின்றனர்.

ஆனால், '2020 புதிய மின்சார சீர்திருத்த வரைவு மசோதா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரத்தையே ஒழிக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது' என்று எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், 'விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடரும் வகையில், மத்திய அரசு தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும்' என்று பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார். இந்தச் சூழ்நிலையில்தான், 'விவசாயிகள் விரும்பிய இடத்தில் தங்கள் விளைபொருள்களை விற்பனை செய்யும் உரிமையைப் பெற்றுத்தர மத்திய அரசு முயற்சி செய்துவருவதாக' அறிக்கை வெளியிட்டுள்ளார் துணை ஜனாதிபதி.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் முன்னாள் மாநில தலைவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தற்போதைய மாநிலச் செயலாளருமான கே.பாலகிருஷ்ணன், துணை ஜனாதிபதியின் அறிக்கை குறித்துப் பேசும்போது, ''நேரடியாக விவசாயியே சந்தையில் விற்பனை செய்து லாபம் சம்பாதிக்கலாம் என்ற அர்த்தத்தில்தான் 'விவசாயிகளை சுரண்டல்களிலிருந்து காப்பாற்றப்போகிறோம்' என்று அறிக்கையாக வெளியிட்டிருக்கிறார் துணை ஜனாதிபதி.

விவசாயி, சந்தைக்குச் சென்றால் அங்கே வியாபாரிகள் அவனை மொட்டையடித்துவிடுவார்கள் என்பதுதான் வரலாறு. அதனால்தான், விவசாயிகளின் விளைபொருள்களுக்கு நியாயமான அடிப்படை விலை நிர்ணயம் செய்து ஓர் ஒழுங்குமுறையை ஏற்கெனவே இருந்த அரசுகள், ஏற்படுத்தித் தந்திருக்கின்றன. அதாவது, 'அத்தியாவசிய பொருள்கள் பாதுகாப்புச் சட்டம்', 'ஒழுங்குமுறை விற்பனைக்கூடம்' போன்ற அமைப்புகளெல்லாம் விவசாய சந்தையில், ஓர் அடிப்படை விலை நிர்ணயம் செய்து விவசாயிகளைப் பாதுகாப்பதுக்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்புகளே.

கே.பாலகிருஷ்ணன்
கே.பாலகிருஷ்ணன்
`அமோக விளைச்சல்.. விலைதான் கிடைக்கலை!’ - சாமந்திப்பூ சாகுபடியில் சாதனை விவசாயியின் வேதனை

ஆனால், 'இந்தச் சட்டங்களெல்லாம் விவசாயிகளைக் காப்பாற்றவில்லை. எனவே, நேரடியாக விவசாயியே விரும்பிய சந்தையில் விற்பனை செய்யும் உரிமையைப் பெற்றுத்தரப் போகிறோம்' என்று மத்திய பா.ஜ.க அரசு இப்போது சொல்லிவருகிறது. 'சிறு, குறு விவசாயிகள் தங்களது விளைபொருள்களை பெரும் முதலாளிகளோடு போட்டி போட்டுக்கொண்டு எப்படி விற்பனை செய்ய முடியும்..?' எனவே இது முழுக்க முழுக்க சிறு, குறு மற்றும் மத்தியதர விவசாயிகளை அந்தத் துறையிலிருந்தே ஒழித்துவிட்டு, கார்ப்பரேட் மயமாக்குகிற வேலையைத்தான் செய்துமுடிக்கும்.

ஏற்கெனவே, வியாபாரிகள் களத்துமேட்டிலேயே விவசாயியின் விளைபொருள்களுக்கு விலை நிர்ணயம் செய்துவிடுகிறார்கள் என்பதுதானே நடைமுறை எதார்த்தமாக இருக்கிறது. அடிப்படை விவசாயக் கடன்கள் மற்றும் இடுபொருள்கள் வசதிகளை அரசே செய்துதந்தால், விவசாயி ஏன் வியாபாரிகளிடம் கைநீட்டி கடன் வாங்கப்போகிறார்கள்; தங்களது விளைபொருள்களை அடிமாட்டு விலைக்கு விற்கப்போகிறார்கள்?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விவசாயமே செய்ய முடியாத அளவுக்கு நெருக்கடிகளுக்குள் சிக்கித் தவிக்கிற சூழல்தான் நாடு முழுக்க நிலவுகிறது. அதனால்தான், விவசாயத்தைக் கைவிட்டு, வேலை தேடி வெளிமாநிலங்களுக்குப் புலம்பெயர் தொழிலாளர்களாகச் சென்றுகொண்டிருக்கின்றனர் மக்கள். விவசாயம் நல்ல நிலையில் இருந்தால், விவசாயி ஏன் வேலை தேடி நகர்ப்புறங்களுக்குச் செல்லப்போகிறான்.

நம்நாட்டில் 55 சதவிகித விவசாய நிலங்கள் வானம் பார்த்த பூமியாகத்தான் இருக்கின்றன. 'இந்த நிலங்களுக்குத் தேவையான பாசன வசதிகளைப் பெருக்குவதற்காக மத்திய அரசு, இதுவரையில் என்ன செய்திருக்கிறது?' பெரும் தொழிலதிபர்களுக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் லட்சம் கோடிகளை மானியமாக அளித்துவரும் அரசு, விவசாயம் சார்ந்த நலத் திட்டங்களுக்காக என்ன மானியம் அளித்திருக்கிறது. இருக்கிற இலவச மின்சாரத்தையும்கூட பிடுங்கத்தானே திட்டம் தீட்டுகிறார்கள். இந்தச் சூழ்நிலையில் எப்படி விவசாயி உற்பத்தி செய்ய முடியும்? உற்பத்தி செய்த பிறகுதானே அந்தப் பொருளை விற்பது குறித்து யோசிக்கவே முடியும்.

வயலுக்குச் செல்லும் விவசாயி.
வயலுக்குச் செல்லும் விவசாயி.

எனவே, விவசாயிகளைக் காப்பாற்றுகிற எண்ணம் மத்திய பா.ஜ.க அரசுக்கு இருக்குமேயானால், நீர்ப்பாசனம் குறித்த அடிப்படைக் கட்டமைப்புகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து பலப்படுத்துங்கள். விவசாயிகளுக்கான கடனுதவி உள்ளிட்ட விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். விளைபொருள்களை நியாயமான விலையில் விற்பதற்காக ஏற்கெனவே ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் போன்றவற்றில் உள்ள குறைகளைக் களைய நடவடிக்கை எடுங்கள்.

ஒரு கிலோ மக்காச்சோளம் 12 ரூபாயிலிருந்து 15 ரூபாய் விலையில்தான் விவசாயிகளிடமிருந்து பெறப்படுகிறது. ஆனால், அதே மக்காச்சோளம் 'கார்ன் ஃப்ளேக்ஸ்' ஆக கடைகளுக்கு வரும்போது கிலோ 400 ரூபாய்வரை விற்கப்படுகிறது. அப்படியென்றால், ஆங்காங்கே கூட்டுறவு அமைப்புகளை உருவாக்கி, விவசாயிகள் தங்கள் விளைபொருள்களை மதிப்புகூட்டி விற்பனை செய்வதற்கான ஆக்கபூர்வ நடவடிக்கைகளை அல்லவா அரசாங்கம் செய்ய வேண்டும். அதை விட்டுவிட்டு, எந்தப் பாதுகாப்பும் இல்லாத சந்தைக்குள் விவசாயியை நேரடியாகத் தள்ளிவிட்டால், அங்கே வியாபாரிகளின் ஆதிக்கம்தானே தொடரும். எனவே, விவசாயிகளுக்கு விற்பனை செய்யும் உரிமையை வழங்கவிருக்கிறோம் என்று பா.ஜ.க அரசு சொல்லிவருவது, ஒட்டுமொத்தமாக விவசாயிகளை ஒழித்துக்கட்டி, கார்ப்பரேட் மயமாக்குகிற மறைமுக முயற்சிதான்'' என்றார் தீர்க்கமாக.

'தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர்' அறச்சலூர் செல்வம் பேசும்போது, ''உற்பத்தி செலவைக் குறைத்து, உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டும் என்பதுதான் இன்றைய சூழ்நிலையில் விவசாயிகளின் முதல்கட்டத் தேவையாக இருக்கிறது. விளைபொருள் விற்பனை என்ற சந்தையின் தேவை 3 வது கட்டமாகவே இருக்கிறது என்பதை அரசு முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.

அடுத்ததாக, விவசாயிகள் தங்கள் விளைபொருகளை சொந்த ஊரிலேயே நல்ல விலைக்கு விற்க முடியவில்லை என்பதால்தான், அரசே 'ஒழுங்கு முறை விற்பனைக் கூடம்' என்ற கட்டமைப்பை உருவாக்கி நடைமுறைப்படுத்தி வருகிறது. இதன்மூலம், விவசாயினுடைய விளைபொருளுக்கு கூடுதல் விலை தரும் வியாபாரிகளைத் தேர்ந்தெடுத்து, இரு தரப்புக்கும் பாலமாக அரசு நிர்வாகம் செயல்பட்டுவருகிறது.

அறச்சலூர் செல்வம்
அறச்சலூர் செல்வம்

இந்த முறையில் இருந்துவரும் நடைமுறைச் சிக்கல்களை உரிய கவனத்தோடு களைந்தாலே, விவசாயிக்கு லாபம் கிடைக்காவிட்டாலும்கூட, நல்ல விற்பனை வாய்ப்பாவது கிடைக்கும். எந்தவொரு விவசாயியும் வியாபாரியாக மாறுவதென்பது நடைமுறை சாத்தியமற்றது. தங்கள் விளைபொருளுக்கு நியாயமான விலை கிடைத்தால் விற்றுவிட்டு, அடுத்த உற்பத்திக்கான விவசாய வேலைகளைக் கவனிக்க ஆரம்பித்துவிடுவதுதான் விவசாயிகளின் நிலைமை. இந்த உண்மை நிலையைப் புரிந்துகொண்டதால்தான், விவசாயப் பொருள்களுக்கு உரிய நியாயமான விலை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் 'ஒழுங்கு முறை விற்பனைக் கூடம்' திட்டமே செயல்படுத்தப்பட்டது. ஆனால், 'விவசாயிகளுக்கு விரும்பிய இடத்தில் விற்பனை செய்யும் உரிமையைப் பெற்றுத்தருகிறோம்' என்று மத்திய பா.ஜ.க அரசு இப்போது சொல்லிவருவது உள்நோக்கம் கொண்டது. இதனால், பெருவியாபாரிகள் மற்றும் நிறுவனங்கள்தான் பலனடையுமே தவிர, விவசாயிகளுக்கு எந்தப் பலனும் இருக்காது.

அதாவது, தமிழ்நாட்டில் உள்ள ஒரு கிராமத்து விவசாயி, தன்னுடைய விளைபொருளை 1,000 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள ஒரு வியாபாரியிடம் ஆன்லைன் வர்த்தக அடிப்படையில்தான் விற்க முடியும். அப்படி இணையம் வழியேயான வியாபாரம் என்றால், தொலைதூரத்திலிருந்து கொள்முதல் செய்யவிருக்கும் வியாபாரி நிச்சயம் பெரு முதலாளியாகத்தான் இருக்க முடியும். சிறு வியாபாரிகள் இதுபோன்ற வியாபாரங்களில் ஈடுபட சாத்தியம் இல்லை. சந்தையில், விளைபொருள்களை வாங்குவதற்கு சிறு வியாபாரிகள் போட்டியிடும்போதுதான் பொருளுக்கான விலை அதிகரிக்கும். மாறாக ஓரிரு பெரு நிறுவனங்கள் மட்டுமே கொள்முதல் செய்ய நேர்ந்தால், அது அந்தப் பெரு நிறுவனங்களுக்குத்தான் லாபமாக முடியும்.

உதாரணமாக ஈரோட்டு சந்தையில், தக்காளிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டால், தக்காளி விவசாயத்தில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகளின் விளைபொருளுக்கு நல்ல விலை கிடைக்கும். இதுவே, 'விரும்பிய இடத்தில் விளைபொருளை விற்கலாம்' என்ற அம்சம் நடைமுறைக்கு வருமேயானால், விலை குறைவான பகுதியிலிருந்து ஆன்லைன் மூலமாக பொருள்களை வாங்கி, தட்டுப்பாடு அதிகமுள்ள பகுதிக்குக் கொண்டுசென்று அதிக விலைக்கு விற்று பெருமுதலாளிகள்தான் லாபம் சம்பாதிக்க முடியும். அதாவது, 'ஒரே தேசம், ஒரே தேர்தல்' என்றெல்லாம் இதுவரை சொல்லிவந்தவர்கள் இப்போது, கார்ப்பரேட் நிறுவனங்களை வாழவைப்பதற்காக 'ஒரே சந்தை' என்றும் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்... அவ்வளவுதான்.

நரேந்திர மோடி
நரேந்திர மோடி
`சீனாவின் மிகவும் மோசமான பரிசு!’ - கொரோனா விவகாரத்தில் மீண்டும் விமர்சித்த ட்ரம்ப்

எனவே, உண்மையிலேயே விவசாயிகளுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்தால், வருடத்துக்கு 6,000 ரூபாயாக இருக்கிற உதவித்தொகையை, மாதத்துக்கு 18,000 ரூபாய் என்ற அளவில் உயர்த்திக்கொடுக்க வேண்டும். இதன்மூலம் விளைபொருள்களின் விலையில் ஏற்றத்தாழ்வு நிகழ்ந்தாலும்கூட, தொடர்ந்து விவசாயிகள் அந்தத் தொழிலிலேயே தாக்குப்பிடித்துத் தொடர வழிசெய்யும்'' என்கிறார் அவர்.

விவசாயிகள் தரப்பு கோரிக்கைகள் மற்றும் ஆலோசனைகளை தமிழக பா.ஜ.க விவசாய அணியின் பொதுச்செயலாளர் கணேஷ் குமார் ஆதித்தனிடம் கூறி விளக்கம் கேட்டோம், ''கொரோனா முழு ஊரடங்கு காலகட்டத்திலும்கூட நாடு முழுக்க விவசாயிகள் உழைத்துக்கொண்டேதான் இருந்தனர். ஆனாலும்கூட, அவர்களது வாழ்க்கைத் தரம் என்பது பெரிதாக இதுவரை உயரவில்லை. காரணம்... விவசாயிகளுக்கான நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வுகூட விவசாயிகளிடம் இல்லை. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டுதான், மத்திய பா.ஜ.க அரசு பல்வேறு ஆக்கபூர்வ நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

இதில் முக்கிய அம்சமாக, விவசாயிகளின் நலன்காக்கும் சட்ட திட்டங்களை மாநில அரசுகள் சரிவர நடைமுறைப்படுத்துகின்றனவா என்பதைக் கண்காணிக்கும் பணி உள்ளது. ஒழுங்குமுறை விற்பனைக்கூடம், வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் போன்ற அமைப்புகளை முதற்கட்டமாக ஒருங்கிணைக்கவிருக்கிறோம். அடுத்ததாகத் தேசிய அளவில் வேளாண்மை சந்தையை உருவாக்கி, அனைத்து விலை விவரங்களையும் தெரிந்துகொள்ளும்விதமாக இ-மார்க்கெட்டிங்' இணையதள வசதியை உருவாக்கவிருக்கிறோம்.

கணேஷ் குமார் ஆதித்தன்
கணேஷ் குமார் ஆதித்தன்

மேலும் கிராமம்தோறும் விவசாயிகளை ஒருங்கிணைத்து, 'உழவர் உற்பத்தியாளர் குழு'க்களை உருவாக்குவதோடு ஒவ்வொரு குழுவிலிருந்தும் ஒரு வழிகாட்டு நபரைத் தேர்ந்தெடுக்கப்போகிறோம். இந்த வழிகாட்டு நபர், இணையம் வழியேயான சந்தை நிலவரங்களைத் தெரிந்துகொண்டு விவசாயிகளின் விளைபொருள்களை விற்கத் துணை புரிவார். மற்ற விவசாயிகள் வழக்கம்போல், தங்கள் விவசாயப் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கலாம். ஏற்கெனவே இதற்கான பரிசோதனை முயற்சியாக ஈரோடு, தூத்துக்குடியில் மஞ்சள் மற்றும் மிளகாய் வற்றல் வியாபாரம் வெற்றிகரமாக செய்துமுடிக்கப்பட்டிருக்கிறது.

இந்த மாற்றங்களை எல்லாம் செய்வதற்கு வசதியாக, வேளாண் உற்பத்திச் சந்தை குழுக்கள் சட்டத்தில் திருத்தங்களையும் மத்திய அரசு செய்யவிருக்கிறது. விவசாய விளைபொருள்களை சேமித்து வைக்கும்பொருட்டு, புதிதாக குளிர்பதனக் கிடங்குகள் அமைக்க மாநில அளவில் கடனுதவி வழங்குவதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. கிசான் கார்டு வைத்திருக்கும் விவசாயிகளுக்கு 1,60,000 ரூபாய் வரை கடனுதவியும் அளிக்கப்படுகிறது.

`இலவச மின்சாரமல்ல.. விவசாய மானியம்!’ -மின்சார திருத்த சட்டத்திற்கு எதிராகக் கொந்தளிக்கும் விவசாயிகள்

வேளாண்மைத்துறையில் இதுவரையில் ஆதிக்கம் செலுத்திவரக்கூடிய கார்ப்பரேட் நிறுவனங்களை அப்புறப்படுத்தி, தனிப்பட்ட விவசாயிகள் பலன் பெறுவதற்கான திட்டங்களாக மாற்றியமைக்கும் முயற்சியை மத்திய அரசு செய்துவருகிறது. நடைமுறைக்கு வரும்போது இதன் பலன் தெரியவரும். அதுவரையில் எதிர்க்கட்சியினர் ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளைக் கூறிவருவது சரியல்ல'' என்கிறார் கணேஷ் குமார் ஆதித்தன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு