Published:Updated:

Rakesh Tikait: வேளாண் சட்டங்களை மோடி வாபஸ் பெறுவதற்குக் காரணம் இவர்தான்!

 Rakesh Tikait
News
Rakesh Tikait

'இடைத்தேர்தலில் பா.ஜ.க-வுக்கு வாக்களிக்காதீர்கள்' என்று அங்கு போய் பிரசாரம் செய்தார் ராகேஷ் திகைத். அந்தத் தேர்தலில் பா.ஜ.க தோற்றுவிட்டது.

Published:Updated:

Rakesh Tikait: வேளாண் சட்டங்களை மோடி வாபஸ் பெறுவதற்குக் காரணம் இவர்தான்!

'இடைத்தேர்தலில் பா.ஜ.க-வுக்கு வாக்களிக்காதீர்கள்' என்று அங்கு போய் பிரசாரம் செய்தார் ராகேஷ் திகைத். அந்தத் தேர்தலில் பா.ஜ.க தோற்றுவிட்டது.

 Rakesh Tikait
News
Rakesh Tikait

காங்கிரஸ் உள்ளிட்ட அத்தனை எதிர்க்கட்சிகளையும் இடது கையால் புறந்தள்ளிவிட்டு ஆட்சி செய்யும் பாரதிய ஜனதா கட்சிக்கு முள்ளாக உறுத்திய ஒற்றை விஷயம், விவசாயிகள் போராட்டம். மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து நடைபெறும் விவசாயிகள் போராட்டம் ஓராண்டை நெருங்கும் நேரத்தில், இந்த சட்டங்களை வாபஸ் பெறுவதாக நவம்பர் 19-ம் தேதி பிரதமர் மோடி அறிவித்துள்ளார். பஞ்சாப் மற்றும் உத்தரப் பிரதேச தேர்தல்களை மனதில்கொண்டு இந்த அறிவிப்பு வெளியானது என்று எதிர்க்கடசிகள் விமர்சனம் செய்கின்றன. என்றாலும், இதை இந்த நேரத்தில் மோடி செய்வதற்குக் காரணம் என்று வட இந்திய மீடியாக்கள் சுட்டிக் காட்டுவது ஒருவரை! அவர் ராகேஷ் திகைத்.

 ராகேஷ் திகைத்.
ராகேஷ் திகைத்.

சம்யுக்த கிசான் மோர்ச்சா என்ற பெயரில் பல விவசாய சங்கங்கள் இணைந்து இந்தப் போராட்டத்தை நடத்துகின்றன. போராட்டக் களத்தில் இருக்கும் மற்ற தலைவர்கள் எல்லோரும் மத்திய அரசுக்கு எதிரான விமர்சனங்களை மட்டுமே செய்துகொண்டிருக்க, 'பா.ஜ.க-வை தேர்தலில் வீழ்த்துவோம்' என்று கிளம்பிய ஒற்றை நபர் ராகேஷ் திகைத்.
பஞ்சாப் தேர்தலில் பா.ஜ.க-வுக்குப் பெரிய எதிர்பார்ப்பு இல்லை. ஹரியானாவில் பா.ஜ.க கூட்டணி அரசு ஆள்கிறது. கடந்த மாதம் அங்கு எல்லனாபாத் தொகுதியில் இடைத்தேர்தல் வந்தது. 'இடைத்தேர்தலில் பா.ஜ.க-வுக்கு வாக்களிக்காதீர்கள்' என்று அங்கு சென்று பிரசாரம் செய்தார் ராகேஷ் திகைத். அந்தத் தேர்தலில் பா.ஜ.க தோற்றுவிட்டது.
மேற்கு உத்தரப் பிரதேசத்தில் ஒரு சாதாரண விவசாய சங்கப் பிரமுகராக இருந்த ராகேஷ் திகைத் இன்று விவசாயிகள் மத்தியில் வெகு பிரபலம். உத்தரப் பிரதேசம், ஹரியானா, பஞ்சாப் என்று பல வட மாநிலங்களில் விவசாயிகளைத் திரட்டி கிசான் மகாபஞ்சாயத்துகள் நடத்துகிறார். ஆயிரக்கணக்கான விவசாயிகள் இந்தக் கூட்டங்களுக்கு வருகின்றனர்.

 ராகேஷ் திகைத்.
ராகேஷ் திகைத்.

நவம்பர் 22-ம் தேதி இப்படி ஒரு மகாபஞ்சாயத்து, உத்தரப் பிரதேசத் தலைநகர் லக்னோவில் நடக்கிறது. ஆனால், இதை நடத்தவிடாமல் மாநில அரசு தொந்தரவுகள் கொடுத்தது. ''இப்படி தொல்லை கொடுத்தால் பிரதமர் மோடியும் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் உத்தரப் பிரதேசத்தில் எங்கும் கால் வைக்க முடியாது'' என்று எச்சரிக்கை விடுத்தார் ராகேஷ் திகைத். ''மத்திய அரசின் கறுப்புச்சட்டங்களையும் விவசாயிகள் விரோத அரசையும் அடக்கம் செய்யவேண்டிய சவப்பெட்டியின் கடைசி ஆணி, லக்னோ மகாபஞ்சாயத்து'' என்றார்.
நவம்பர் 29-ம் தேதி நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்குகிறது. அந்த நாளில் நாடாளுமன்றத்தை நோக்கி டிராக்டர் பேரணி நடத்த விவசாய சங்கங்கள் திட்டமிட்டு வந்தன. இந்த சூழலில்தான் வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்பட்டுள்ளன.

ராகேஷ் திகைத் இவ்வளவு பெரிய தலைவராக மாறுவதற்குக் காரணமே மோடி என்று சொல்லலாம். கடந்த தலைமுறை விவசாயிகள், மகேந்திர சிங் திகைத் என்ற பெயரை மறக்க மாட்டார்கள். பாரதிய கிசான் யூனியன் என்ற புகழ்பெற்ற விவசாயிகள் சங்கத்தின் தலைவராக இருந்தவர். இந்த சங்கத்தை உருவாக்கிய சரண்சிங், பிற்காலத்தில் இந்தியாவின் பிரதமராகவே ஆகியிருக்கிறார். ராஜீவ் காந்தி ஆட்சிக்காலத்தில் ஐந்து லட்சம் விவசாயிகளுடன் டெல்லிக்குப் பேரணி சென்று தலைநகரை ஸ்தம்பிக்க வைத்தவர் மகேந்திர சிங் திகைத். அவரின் இரண்டாவது மகன்தான் ராகேஷ் திகைத்.
மகேந்திர சிங் திகைத் மரணத்துக்குப் பிறகு அவரது சங்கம் உடைந்து சுமார் 50 துண்டுகளாக ஆகிவிட்டது. அதனால் ராகேஷ் அப்பாவின் வழியில் வரவில்லை. படித்து முடித்துவிட்டு டெல்லி போலீஸில் கான்ஸ்டபிளாக வேலைக்குச் சேர்ந்தார். அப்படியே சப் இன்ஸ்பெக்டராக உயர்ந்தார்.

 ராகேஷ் திகைத்.
ராகேஷ் திகைத்.


உ.பி, ஹரியானா என்று வடமாநிலங்களில் பெரும்பான்மையாக இருக்கும் ஜாட் சமூகத்தைச் சேர்ந்தது ராகேஷ் குடும்பம். மறைந்தபிறகும் தன் தந்தைக்கு செல்வாக்கு மாறாமல் இருப்பது கண்டு ராகேஷுக்கு ஆச்சர்யம் ஏற்பட்டது. அதனால் வேலையை ராஜினாமா செய்துவிட்டு அரசியலில் குதித்தார். ஆனால், 2007 உ.பி சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் ஆதரவுடன் போட்டியிட்ட அவருக்கு ஆறாவது இடம்தான் கிடைத்தது. 2014 நாடாளுமன்றத் தேர்தலில் டெபாசிட் பறிபோனது. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அவர் பா.ஜ.க-வுக்காக பிரசாரம் செய்தார்.
பாரதிய கிசான் யூனியனின் செய்தித் தொடர்பாளராக இருந்த அவரை, மேற்கு உத்தரப் பிரதேசம் தாண்டி எங்கும் யாருக்கும் தெரியாது. டெல்லி விவசாயிகள் போராட்டத்திலும் முக்கிய தலைவர்கள் வரிசையில் அவர் இல்லை. பஞ்சாப் விவசாயிகளே முன்னிலை வகித்தனர்.
இந்த ஆண்டு ஜனவரியில் குடியரசு தினத்தின்போது டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணி பெரும் வன்முறையில் முடிந்தது. செங்கோட்டையிலும் விரும்பத் தகாத சம்பவங்கள் நிகழ்ந்தன. அதைத் தொடர்ந்து விவசாய சங்கங்கள் மத்தியிலேயே குழப்பம் ஏற்பட்டது.

Rakesh Tikait
Rakesh Tikait

போராட்டக்களத்திலிருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் வெளியேறினர். பிடிவாதமாக அங்கேயே இருந்தவர்களை போலீஸ் வெளியேற்ற முயன்றது.
அந்த நேரத்தில் ராகேஷ் திகைத் கதறி அழுதபடி ஒரு வீடியோ வெளியிட்டார். 'வேளாண் சட்டங்களை வாபஸ் பெறாவிட்டால் நான் தூக்கில் தொங்கி செத்துப் போவேன். விவசாயிகளுக்காக உயிரைக் கொடுக்கவும் தயாராக இருக்கிறேன். எங்கள் போராட்டத்துக்கு ஆதரவு கொடுங்கள்' என்று கண்ணீருடன் ராகேஷ் பேசிய வீடியோ வைரலானது. தாங்கள் நேசிக்கும் ஒரு விவசாய சங்கத் தலைவரின் மகன் இப்படி அழுததைப் பார்த்து பலரும் நெகிழ்ந்தனர். அடுத்த நாள் காலையிலிருந்து ஆயிரக்கணக்கான உ.பி விவசாயிகள் போராட்டக் களத்துக்கு வந்து குவிந்தனர். கிட்டத்தட்ட முடிவுக்கு வர இருந்த போராட்டத்துக்கு இப்படித்தான் உயிர் கொடுத்தார் ராகேஷ் திகைத். அன்றுமுதல் விவசாயிகள் போராட்டத்தின் முகமாக மாறியிருக்கிறார் ராகேஷ். 'தாமரைக்கு வாக்களித்தது எங்கள் தவறு. இம்முறை அதைச் செய்ய மாட்டோம்' என உத்தரப் பிரதேசத்தில் அவர் செய்யும் பிரசாரம், அங்கு பா.ஜ.க-வுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது. இன்னும் சில மாதங்களில் தேர்தல் வரும் சூழலில், எரியும் போராட்ட நெருப்பை அணைக்க முயல்கிறார் மோடி. அதன் விளைவே இந்த வாபஸ் அறிவிப்பு.

இப்போதும்கூட, 'நாடாளுமன்றத்தில் முறைப்படி வேளாண் சட்டங்களை வாபஸ் வாங்கும்வரை நாங்கள் வெளியேற மாட்டோம்' என்று ராகேஷ் திகைத் முழங்குகிறார்.
டெல்லியில் ஒரு சாதாரண கான்ஸ்டபிளாக வாழ்க்கையைத் தொடங்கிய ராகேஷ் திகைத்தை தேசம் அறிந்த விவசாயிகள் தலைவராக மாற்றியிருக்கிறது மோடி அரசு.
- அகஸ்டஸ்