
துறையை நேசிச்சவர். எந்நேரமும் மருத்துவ சிந்தனையிலேயே இருந்தவர். தீர்க்கதரிசி. மருத்துவ அறத்தை அறிந்தவர்.
`நடமாடும் மருத்துவக் கலைக்களஞ்சியம்’ என மருத்துவர்களால் போற்றப்பட்டவரும், மருத்துவ சேவைக்காக பத்மஸ்ரீ விருது பெற்றவருமான டாக்டர் கே.வி.திருவேங்கடம் தனது 94வது வயதில் காலமானார். தன் மனைவி இறந்த அடுத்த சில தினங்களில், (மனைவி இறந்தது தெரியாமலேயே) மரணமடைந்திருக்கிறார்.
சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் படிப்பை நிறைவு செய்தபோதே தங்கப்பதக்கம், பனகல் அரசர் பதக்கம் எனப் பதக்கங்களை வாங்கிக் குவித்தவர். தொடர்ந்து ஐம்பதுகளின் பிற்பகுதியில் பிரிட்டன் சென்று நுரையீரல், ஆஸ்துமா, அலர்ஜி பிரச்னைகளுக்குச் சிகிச்சையளிக்கப் பயிற்சி பெற்றார். நாடு திரும்பி அதே ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியிலேயே பேராசிரியராகப் பணியில் சேர்ந்தபோது தொடங்கியது இவரது மருத்துவ சேவை. அப்போது முதல் அரை நூற்றாண்டு கடந்து, ஓய்வுக்காலத்தையெல்லாம் பொருட்படுத்தாது, இறுதி மூச்சு வரை ஓடிக்கொண்டே இருந்தார் என்றுதான் சொல்ல வேண்டும்.
`துறையை நேசிச்சவர். எந்நேரமும் மருத்துவ சிந்தனையிலேயே இருந்தவர். தீர்க்கதரிசி. மருத்துவ அறத்தை அறிந்தவர். எல்லாத்துக்கும் மேல நோயாளிகளை அவர் அணுகிய விதம்னு அவர் பத்தி நிறைய பேசலாம்’ என்கிறார், ஹேமடாலஜியில் (குருதியியல்) தமிழகத்தின் தலைசிறந்த மருத்துவர்களில் ஒருவரான டாக்டர் பரத்வாஜ். மாணவர் பருவத்திலிருந்து திருவேங்கடத்தின் கடைசி நாள்கள் வரை அவருடன் தொடர்பிலிருந்தவர் இவர்.
``1976-ல் `எம்.டி. பொது மருத்துவம்’ சேர்ந்தப்ப அவருடைய மாணவன் நான். கார்டியாலஜி வகுப்பும் அவர்தான் எடுப்பார், நியூராலஜியும் அவர்தான் எடுப்பார். `ஒரு பிரிவுல ஸ்பெஷலிஸ்ட் ஆகறதுக்கு முன்னாடி, பொது மருத்துவத்தை முழுசாப் புரிஞ்சுகிட்டு வரணும்’கிறதை எனக்குப் புரிய வச்சார்.

எம்.டி முடிச்சதும் போய், `கார்டியாலஜி பண்ணலாமா’ன்னு கேட்டேன். `இதயமோ, நரம்போ, மூளையோ எல்லாப் பிரிவுகளுமே பொது மருத்துவத்தின் கிளைகள்தான்; அதனால பவுண்டேசன் வலுவா இருந்தா மட்டுமே அடுத்த பயணம் நல்லபடியா இருக்கும்’னார். அவர் அட்வைஸ்படியே அஞ்சு வருஷம் ஜெனரல் மெடிஷன்ல பிராக்டிஸ் செஞ்சுட்டு மறுபடியும் போய், என்னுடைய `கார்டியாலஜி’ விருப்பத்தைச் சொன்னேன். `எந்தவொரு விஷயத்தையும் தொடங்கறப்ப தொலைநோக்குச் சிந்தனை அவசியம் பரத்வாஜ்’னு சொன்னார். `ஹேமடாலஜி’னு ஒரு பிரிவு இப்ப வெளிநாடுகளில் வந்திருச்சு, அதைப் படிச்சா என்ன’ன்னு தீர்க்கதரிசியா அன்னைக்குச் சொன்னார். அவர் சொன்ன மாதிரியே இன்னைக்கு ஹேமடாலஜிக்கு ரொம்பவே அவசியம் இருக்கு’’ என்ற பரத்வாஜ், திருவேங்கடம் நோயாளிகளை அணுகும்விதம் குறித்தும் சிலாகித்துப் பேசுகிறார்..
‘`இன்னைக்கு நோயாளிகளின் முகத்தைப் பார்த்துப் பேசக்கூட டாக்டர்களுக்கு நேரமிருக்கறதில்லை. ஆனா ஒவ்வொரு நோயாளிக்கும் அவ்வளவு நேரம் ஒதுக்குவார் அவர். ‘பேப்பரைப் பார்த்து வைத்தியம் பார்க்கக் கூடாது, ரிப்போர்ட்ங்கிற பேப்பர் மெஷின்ல இருந்து எடுக்கறது; பேஷன்ட்டைப் பார்த்து வைத்தியம் செய்யணும்’னு சொல்வார். அவங்களைப் பேசவிட்டு ‘என்னெல்லாம் பண்ணுது’ன்னு கேட்டு முடிச்சுட்டுதான் மருந்துகளைப் பரிந்துரைப்பார். `நோயாளிகள்கிட்ட பேசற நேரம் அதிகமா இருக்கே’ன்னு கேட்டா, `பிரச்னைன்னு வர்ற ஒவ்வொருத்தருமே மருத்துவர்களுக்கு ஒரு புத்தகம் போலத்தான்; அதனாலதான் பேஷன்ட்டுகளைப் படிங்கன்னு சொல்றேன்’னு சொல்வார்’’ என்கிறார் பரத்வாஜ்.
ஸ்டான்லி, பிறகு சென்னை மருத்துவக் கல்லூரி என சுமார் 31 ஆண்டுகள் பேராசிரியர் பணியை முடித்து ஓய்வுபெற்ற பின்னரும், பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில் ஆலோசகராகவும் செயல்பட்டு வந்தார்.
தேசிய அளவில் மருத்துவத் துறையில் சிறந்தவர்களுக்கு வழங்கப்படும் டாக்டர் பி.சி.ராய் விருது உள்ளிட்ட பல்வேறு உயரிய விருதுகளும். `இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் அறிவியல் ஆலோசனைக் குழு உறுப்பினர்’ போன்ற கௌரவங்களும் இவரை அலங்கரிக்கத் தவறவில்லை.
திருவேங்கடம் பெயரில் வழங்கப்பட்டு வரும் ‘கே.வி.திருவேங்கடம் விருதி’னைப் பெற்றவரும், பிரபல முதியோர் நல மருத்துவருமான டாக்டர் வி.எஸ்.நடராஜனிடம் பேசினேன்.
‘`லண்டன் போய் முதியோர் மருத்துவத்துல பயிற்சி முடிச்சுட்டு வந்ததும் சென்னை அரசுப் பொது மருத்துவமனையில எனக்குப் பணி கிடைச்சது. எனக்கு செகண்ட் யூனிட்ல போஸ்டிங். பர்ஸ்ட் யூனிட்டின் ஹெச்.ஓ.டி திருவேங்கடம். ஒருநாள் கூப்பிட்டு `நீங்க ‘ஜீரியாட்ரிக்’ (மூப்பியல்) எடுத்தது ரொம்ப சந்தோஷமான விஷயம்’னு வாழ்த்திட்டு, நீங்க ஏன் வயதானவர்களின் பிரச்னை பத்தி ஒரு கட்டுரை எழுதக் கூடாது’ன்னு கேட்டார். ‘சரி’ன்னு மதுரையிலிருந்து வந்த ‘தி ஆன்டிசெப்டிக்’ மெடிக்கல் ஜர்னல்ல நானும் கட்டுரை தயார் செய்துட்டேன். கட்டுரையை இறுதி செஞ்சுட்டு அவர்கிட்ட காட்டப் போனேன்.
கட்டுரையில `டாக்டர் கே.வி. திருவேங்கடம், ஹெச்.ஓ.டி’ன்னு போட்டு அவர் பேருக்குக் கீழ் `வி.எஸ்.நடராஜன், உதவிப் பேராசிரியர்’னு போட்டிருந்தேன். அப்படித்தான் போடணும். அதுதான் முறை. கட்டுரையைப் படிச்சு முடிச்சதும், லேசாச் சிரிச்சவர், ஒரு பென்சிலை எடுத்து, என்னுடைய பெயரை ரவுண்ட் பண்ணி, ‘இது இங்க வரட்டும்’னு அவர் பெயருக்கு மேல போடச் சொன்னார்.
‘என்ன சார்’னு கேட்டதுக்கு, நீங்கதான் `ஜீரியாட்ரிஷன், நான் ஜெனரல் டாக்டர். நான் எப்படி இந்த ஆர்ட்டிகிள் எழுத முடியும்’னு கேட்டார். துறையில எப்படி நிபுணரா இருந்தாரோ, குணத்துலயும் அதே உயரத்துலயே இருந்தார்’’ என்கிறார் இவர்.
திருவேங்கடத்தின் மனைவியும் மருத்துவரே. கடந்த சில தினங்களுக்கு முன் கணவன் மனைவி இருவருக்குமே `கோவிட்’ அறிகுறி தெரிய, மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறக் கேட்ட போது, மனைவியைச் சிகிச்சை எடுத்துக்கொள்ளச் சொன்னவர், தன் விஷயத்தில், ‘இந்தக் கார் 90 வருஷத்துக்கு மேல ஓடிடுச்சு. இனிமே ரிப்பேர் பண்ணினாலும் நல்லா ஓடும்னு நம்பறீங்களா’ எனக் கேட்டாராம்.
இந்தியாவின் மருத்துவத் தலைநகருக்கு இவரது மறைவு பேரிழப்புதான்.