
புனித பாண்டியன்
பொதுச் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட ‘பாஸ்வான்’ என்ற சாதி அடையாளத்தைத் தன்னுடைய பெயராகவே கொண்டிருந்தாலும் அரை நூற்றாண்டுக்கால இந்திய அரசியலில் - பொதுச் சமூகம் புறக்கணிக்கவே முடியாத அளவிற்குத் தாக்கத்தை ஏற்படுத்தியவர், ராம் விலாஸ் பாஸ்வான்.
சமூக நீதிக் கோட்பாட்டை முன்னிறுத்தியதால்தான் பீகாரின் ஹாஜ்பூர் தொகுதியில் நாலேகால் லட்சம் (4,24,545) வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அவரால் ‘கின்னஸ்’ பட்டியலில் இடம்பெற முடிந்தது.
மதச்சார்பற்ற அரசியல் மூலம் மக்களை ஒன்றிணைத்தே ஜனநாயகத்தைக் காப்பாற்ற முடியும் என்பதற்கான நிகழ்ச்சி நிரல், அவர் உருவாக்கிய சமூக அமைப்பான ‘தலித் சேனா’விலும் (1983) அரசியல் கட்சியான ‘லோக் ஜன சக்தி’ யிலும்(2000) நீங்கா இடம் பிடித்திருந்தது. பீகாரில் உள்ள சாதி இந்துக்களின் ஆயுதந்தாங்கிய வன்முறை அமைப்பான ‘ரண்வீர் சேனா’ வின் கொடுங்கோன்மையில் இருந்து ஒடுக்கப்பட்ட மக்களைக் காப்பதற்காக உருவாக்கப்பட்ட சமூக ஜனநாயக அமைப்பே ‘தலித் சேனா.’
சோசலிஸ்ட் தலைவர் ராம் மனோகர் லோகியாவின் கருத்துகளால் உந்தப்பட்டு அரசியலில் நுழைந்த பாஸ்வான், சம்யுக்த சோசலிஸ்ட் கட்சி, பாரதிய லோக் தளம், ஜனதா தளம் எனப் பல்வேறு கட்சிகளில் இணைந்து செயல்பட்டபோதும் பிற்காலங்களில் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிக் கூட்டணிகளில் இடம் பெற்றபோதும் தன்னுடைய தனித்துவத்தை இழக்காதவராகவே செயல்பட்டார்.
எண்பதுகளின் தொடக்கத்திலிருந்து மண்டல் குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தக் கோரி நடைபெற்ற திராவிடர் கழக மாநாடுகளிலும் முஸ்லிம்கள் மற்றும் கிறித்துவர்களின் உரிமைகளை நிலைநாட்டிட நடத்தப்பட்ட கூட்டங்களிலும் தலித் இயக்கங்கள் முன்னிறுத்திய போராட்டங்களிலும் பாஸ்வானின் ஆவேசமும் உணர்ச்சியும் கொப்பளிக்கும் உரைவீச்சைக் கேட்க முடிந்தது. இனப்படுகொலைக்கு ஆட்பட்ட ஈழத்தமிழர்களின் இன்னல்களைக் களைய நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்ததோடு மட்டுமன்றி, ஈழத்தமிழர்களுக்காக நடத்தப்பட்ட மாநாடுகளிலும் பங்கேற்று, தமிழ் ஈழத்திற்கான ஆதரவை உறுதியாக வெளிப்படுத்தியதில் ஜார்ஜ் பெர்ணாண்டஸுக்கு அடுத்து பாஸ்வானுக்கு மகத்தான பங்குண்டு.

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மைய அரசில் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தக் கோரி இந்தியா முழுவதும் அவர் பல்வேறு போராட்டங்களிலும் பங்கேற்றார். கல்வி மற்றும் அரசுப் பணியிடங்களில் நிலவும் ஏகபோக ஆதிக்கத்தை தலித் மற்றும் பழங்குடியினரின் பிரதிநிதித்துவப் பங்கேற்பால் (இடஒதுக்கீடு) மட்டுமே வீழ்த்திட முடியாது; சமூகத்தின் 50 சதவிகிதமாக இருக்கும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான பிரதிநிதித்துவப் பங்கேற்பையும் உறுதிசெய்வதன் மூலமே அரசு நிர்வாகத்தை ஜனநாயகப்படுத்த முடியும் என்று அவர் உறுதியாக நம்பினார்.
அதே நேரத்தில் எண்ணற்ற அம்பேத்கர் சிலைகளைத் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் நாட்டின் பிற இடங்களிலும் திறந்து வைத்த பெருமைக்குரியவர் பாஸ்வான். எல்லாவற்றுக்கும் மேலாக நாடாளுமன்றத்தில் அம்பேத்கரின் திருவுருவச் சிலை இடம் பெறுவதற்கும் அண்ணலுக்கு பாரத ரத்னா வழங்கப்படுவதற்கும் அவரே மூலக் காரணியாக இருந்தார். 1990-ம் ஆண்டை சமூக நீதி ஆண்டாக அறிவித்து, அம்பேத்கர் பிறந்த ஏப்ரல் 14-ம் தேதியைப் பொது விடுமுறையாகவும் அறிவித்தார். இன்றைக்கு அம்பேத்கரின் எழுத்துகளும் உரைகளும் 37 நூல் தொகுதிகளாக வெளிவந்து தலித் இலக்கியம் என்றொரு வகை மாதிரி உருவாவதற்கு, அவர் சமூக மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்தபோது ஏற்படுத்திய அம்பேத்கர் நூற்றாண்டு விழாக் குழுதான் அடித்தளமிட்டது என்பது பலரும் அறிந்திராத செய்தி.
தலித் மக்கள் பவுத்த மதத்திற்கு மாறினாலும் அவர்களுக்கு இடஒதுக்கீட்டு உரிமை பறிபோகாது என்பதற்கான அரசாணை கிடைப்பதற்கும்; வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் நடைமுறைப் படுத்தப்படுவதற்கும்; அரசமைப்புச் சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் பினாமி மற்றும் புறம்போக்கு நிலங்களைச் சேர்த்து அந்நிலங்களை நிலமற்ற மக்களுக்கு அளிக்க வேண்டும் என்பது போன்ற முக்கியமான சட்டங்கள் வகுக்கப்படவும் அவரே காரணமாக இருந்தார்.
ராம்விலாஸ் பாஸ்வான் அதிகாரத்தில் இருந்ததால்தான் மண்டல் குழு பரிந்துரைகள் நிறைவேற்றப்பட்டன என்று நாம் பெருமையோடு நினைவுகூர்ந்தாலும் அவை ஏன் 27 சதவிகிதத்துடன் முடக்கப்பட்டது? முப்பது ஆண்டுகள் கழித்து 10 சதவிகிதம்கூட அது ஏன் நடைமுறைப்படுத்தப்படவில்லை? தொடர்ந்து ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் பாஸ்வானால் இதற்கெல்லாம் தீர்வுகாண முடியாது என்பதையும் இணைத்தே - அதிகாரத்தின் எல்லையை - நாம் புரிந்துகொள்ள வேண்டும். அதுமட்டுமல்ல, அரசமைப்புச் சட்டத்திற்கு முற்றிலும் எதிராக பொருளாதாரத்தில் பின்தங்கிய, முன்னேறிய சாதியைச் சேர்ந்தவர்களுக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்பட்டு, சமூக நீதிக்கே அநீதி இழைக்கப்பட்டுள்ளது. ஆம், சமூக நீதிக்குச் செயல்வடிவம் கொடுத்த அதே அதிகாரத்தால் பாஸ்வான் மௌனமாகவும் ஆக்கப்பட்டார்!
சமூக வாழ்க்கையில் அடிப்படைக் கொள்கையை விட்டுக்கொடுக்காமல் அரசியல் சமரசங்களுடன் அதிகாரத்தைப் பொறுப்புடன் கையாண்டதற்கான எடுத்துக்காட்டாகவே திகழ்கிறார் பாஸ்வான்!