`மலையிலிருந்துதான் நதி உற்பத்தியாகிறது. ஆனால், நதியிடம் அது எதையும் எதிர்பார்ப்பதில்லை. நதியின் அழகையும், நீண்டதூர வெற்றிப் பயணத்தையும் பார்த்து மலை பூரித்துப்போகிறது’ - ரவிந்திரநாத் தாகூரின் வரிகளை அப்படியே பிரதிபலிக்கிறது, பைங்காநாடு துளசேந்திரபுரம். `தன் மண்ணில் வாழ்ந்த தலைமுறையினரின் தொடர்ச்சி ஒன்று, உலகின் கவனத்தை ஈர்க்கிறது’ என்ற பெருமித பிரவாகத்தில் திளைத்துக்கொண்டிருக்கிறது இந்தக் கிராமம். `அமெரிக்காவின் துணை அதிபர் வேட்பாளராகப் போட்டியிடும் அளவுக்கு உயர்ந்திருக்கிறாரே எங்கள் ஊரில் வாழ்ந்த கோபாலனின் பேத்தி...’ என வியப்பிலும் மகிழ்ச்சியிலும் திளைக்கிறார்கள் இம்மக்கள்.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியிலிருந்து சுமார் பத்து கிலோமீட்டர் பயணம்... ஊரின் எல்லையில் நம்மை உற்சாகமாக வரவேற்கின்றன, பைங்காநாடு துளசேந்திரபுரத்தின் பெயர்ப்பலகையும், அமெரிக்க துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸின் வாழ்த்து பேனரும்... தங்களது ஊரைப் பூர்வீகமாகக்கொண்ட பெண்மணி, அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார் என்றால், இங்குள்ள மக்களின் உணர்வுகள் என்னவாக இருக்கும் ?
``ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்துல இருந்து நிறைய அரசியல் தலைவர்கள், திரைப்படக் கலைஞர்கள் உருவாகி, இந்தியா அளவுல கோலோச்சியிருக்காங்க. அதுக்கே நாங்க பெருமைப்பட்டுக்குவோம். அதுவும் இப்போ எங்க ஊரை பூர்வீகமாகக்கொண்ட ஒருவர், உலகமே திரும்பி பார்க்கக்கூடிய ஒரு முக்கியப் பதவிக்கு போட்டியிடக்கூடிய அளவுக்கு வளர்ந்திருக்காங்கனு நினைக்குறப்போ, எங்களோட சந்தோஷத்துக்கு அளவே இல்லை.” - நெகிழ்ச்சி நிறைந்த வார்த்தைகளை உதிர்க்கும் இம்மக்கள், கமலா ஹாரிஸ் வெற்றி பெற கோயில்களில் சிறப்பு பிரார்த்தனைகள் செய்து வருகிறார்கள்.

வயல்வெளி, கடைத்தெரு என ஆங்காங்கே ஊர்மக்கள் வைத்துள்ள வாழ்த்து பேனர்களில் புன்னகைக்கிறார் கமலா ஹாரிஸ். இதுவரை கமலா ஹாரிஸை இவர்கள் நேரில் பார்த்ததில்லை. கண்ணுக்குப் புலப்படாத ஊர் பந்தம், பல ஆயிரம் கிலோமீட்டர் கடல் கடந்து, கண்டம்விட்டு கண்டம் தாண்டி, இம்மக்களையும் அந்தப் பெண்மணியையும் நேசத்தோடு இணைக்கிறது. அமெரிக்க அதிபர் மற்றும் துணை அதிபருக்கான தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. ஜனநாயகக் கட்சியின் சார்பில் துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்.
இவரின் தாய்வழி தாத்தா கோபாலன், இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் என்ற தகவல் வெளியானதிலிருந்தே இப்பகுதி மக்கள் மிகுந்த பெருமித உணர்விலும் நெகிழ்ச்சியிலும் ஆழ்ந்துள்ளார்கள். 90 ஆண்டுகளுக்கு முன்னர் இங்குள்ள அக்ரஹார தெருவில் வாழ்ந்திருக்கிறது கோபாலனின் குடும்பம். ஆங்கிலேயே ஆட்சியில் சிவில் சர்வீஸ் அதிகாரியாக பணியாற்றிய கோபாலன் சென்னைக்குக் குடிபெயர்ந்திருக்கிறார். இவரின் மூத்த மகள் ஷியாமளா, மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்றிருக்கிறார். ஜமைக்கா நாட்டைச் சேர்ந்த டொனால்டு ஜெ ஹாரிஸைத் திருமணம் செய்திருக்கிறார். இவர்களின் மகள்தான் கமலா ஹாரிஸ். அரசியல், பொருளாதாரம், சட்டம் எனப் பல துறைகளில் பட்டம் பெற்ற கமலா ஹாரிஸ், கலிஃபோர்னியா தலைமை வழக்கறிஞர், செனட் உறுப்பினர் எனப் படிபடியாக உயர்ந்து, தற்போது அமெரிக்க துணை அதிபர் வேட்பாளராக உச்சத்தைத் தொட்டுள்ளார்.

’``ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஏகப்பட்ட விசாரிப்புகள். `அமெரிக்க துணை அதிபர் தேர்தல்ல நிக்கிற கமலா ஹாரிஸ் ஊங்க ஊராமே’ன்னு நிறைய பேர் கேட்டுக்கிட்டே இருக்காங்க. எங்க ஊர் மக்கள் எல்லாருக்குமே இது பெருமையா இருக்கு. பைங்காநாடு துளசேந்திரபுரம்கற எங்களோட ஊர் பேரு, உலகம் முழுக்கப் பிரபலமாயிடுச்சி.’’ - பெருமிதத்தில் நெகிழ்ந்து போகிறார் இவ்வூர்க்காரரான மலர்வேந்தன்.
இத்தனைக்கும் கமலா ஹாரிஸின் உறவினர்கள்கூட இங்கு வசிக்கவில்லை. தாத்தா கோபாலன் வாழ்ந்த வீடு, பல பேர் கைமாறி காலிமனையாகக் கிடக்கிறது. ஆனாலும்கூட இவர் குடும்பத்தினருக்கும், இம்மண்ணுக்குமான உறவு தொடர்ந்து கொண்டேதான் இருந்திருக்கிறது. இங்குள்ள இவர்களின் குலதெய்வக் கோயிலான ஸ்ரீதர்மசாஸ்தா ஸ்ரீசேவகப்பெருமாள் கோயில் கல்வெட்டில் நன்கொடையாளர்கள் பட்டியலில் கமலா ஹாரிஸின் பெயரும் இடம்பெற்றுள்ளது.
2014-ம் ஆண்டு இக்கோயிலுக்கு 5,000 ரூபாய் நன்கொடை கொடுத்துள்ளார் கமலா ஹாரிஸ். ’``நாங்க யாருமே கமலா ஹாரிஸையோ, அவரோட குடும்பத்தினரையோ நேர்ல பார்த்ததில்லை. ஆனாலும், எங்களுக்கு ஏதோ ஓர் இனம் புரியாத உணர்வு. `அமெரிக்க துணை அதிபர் தேர்தல்ல அவர் ஜெயிச்சிடணும்’னு ஊர் மக்கள் எல்லாருமே கடவுளை வேண்டிக்கிட்டு கிடக்குறோம்” எதிர்பார்ப்பற்ற எதிர்பார்ப்புகள் பைங்காநாடு துளசேந்திரபுரம் முழுவதும் வியாபித்திருக்கிறது.