தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

மன உறுதி இருந்தால் போதும்!

மன உறுதி
பிரீமியம் ஸ்டோரி
News
மன உறுதி

மீண்ட கதை

அரியலூர் மாவட் டத்தைச் சேர்ந்த இளம் பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் சிகிச்சையளிக்கப்பட்டு பூரண குணமாகி ஏப்ரல் 18 அன்று வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

``சிகிச்சையோடு, அன்பை யும் சேர்த்து கொடுத்தாங்க. அதனால மட்டும்தான் என் தனிமை பயம் நீங்கி, மனவலிமையைக் கூட்டி மீண்டுவர முடிஞ்சது” என்று தெம்பாகப் பேச ஆரம்பிக்கிறார் அவர்.

கொரோனா சிகிச்சையில் இருப்பவர்கள் / மீண்டவர்கள் பற்றிய பெயர் விவரங்களை அரசு வெளியிடுவதில்லை என்பதால், இங்கே அந்தப் பெண்ணின் பெயரும் படமும் தவிர்க்கப்படுகிறது.

``எங்க அப்பா அரசு பேருந்தில் டிரைவரா வேலை செய்யறார். அம்மா இல்லத்தரசி. ஓர் அண்ணன், ஒரு தம்பி. வீட்டுல ஒரே பொம்பளைப் புள்ளைங்கிறதுனால எனக்குச் செல்லம் ஜாஸ்தி. சென்னையில் லேடீஸ் ஹாஸ்டலில் தங்கியிருந்தபடி வேளச்சேரியில் உள்ள வணிக நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்துக்கிட்டிருந்தேன். நண்பர்களுக்காக டிக் டாக், தோழிகளோட அரட்டைன்னு செம ஜாலியா போச்சு என் வாழ்க்கை. கொரோனா ஊரடங்கு அறிவிப்புக்கு சில நாள்கள் முன்னாடி நான் வேலை பார்த்த நிறுவனத்தை மூடிட்டாங்க. அதனால சொந்த ஊருக்கு வந்துட்டேன். அடுத்த நாளே மூச்சுவிட முடியலை. தலையைத் தூக்கவே முடியாம கஷ்டப்பட்டேன். உடனே அப்பா என்னை அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அழைச்சுக்கிட்டுப் போனாங்க. பரிசோதித்த டாக்டர்கள் எனக்கு கொரோனா தொற்று இருக்குது, வீட்டுக்குப் போகக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க. புதிதாகக் கட்டப்பட்ட கொரோனா கட்டடத்தில் என்னைத் தங்க வெச்சு, என் வீட்டில் உள்ளவங்களையும் தனிமைப்படுத்தினாங்க. எனக்கு செம ஷாக். உலகமே இருண்ட மாதிரி ஆகிப்போச்சு. என்னால என் குடும்பத்துக்கும் இடைஞ்சல் வந்திருச்சேன்னு அழுதேன்.

மன உறுதி இருந்தால் போதும்!

எனக்குன்னு ஒரு பெரிய அறை. இரவு நேரத்துல முழுக்க மூடின உடையில் மருத்துவர்கள், செலிவியர்கள் வருவாங்க. தூக்கத்துக்கு நடுவே கண்விழிச்சு பார்த்தா அவங்க நிப்பாங்க. தூக்கிவாரிப் போடும்.

அப்புறம் எனக்கு எதிர் வார்டில் இருந்த ஒருத்தர் அவருக்கான லேப் ரிப்போர்ட் வர்றதுக்கு முன்னாடியே மின்விசிறியில தூக்குப் போட்டு தற்கொலை செய்துகிட்டார். இதையெல்லாம் கேள்விப்பட்டு எனக்குத் தூக்கமே வராம போச்சு.

ஐந்து முறை மனநல மருத்துவர்கள் மூலமா எனக்கு கவுன்சலிங் கொடுத்தாங்க. கொரோனா பயத்தைவிட நாலு சுவத்துக்குள் இருக்கிற தனிமை பயம்தான் கொடூரமா இருந்தது. அப்போதைக்கு எனக்கு இருந்த ஒரே ஆறுதல் சிகிச்சையளிச்ச மருத்துவர் கள், செவிலியர்கள் மற்றும் செல்போன்தான்.

சத்தியமா சொல்றேன்... என் வீட்டுலகூட என்னை இப்படித் தாங்கிக் கவனிச்சதில்லை.

ஒருவழியா மனசைத் தேத்திக்கிட்டு கொரோனா விழிப்புணர்வை டிக் டாக்கா பண்ணினேன். ஆனா, நான் நர்ஸோட சேர்ந்து டிக்டாக் பண்ணிட்டு இருக்கிறதா ஒரு தொலைக்காட்சியில நியூஸ் போட்டுட் டாங்க. என்னடா இது... நமக்கு ஆதரவா இருந்தவங்களைப் பத்தி, தப்பா நியூஸ் போட்டுட்டாங்களேன்னு அழுதுட்டு இருந்தேன். உடனே மருத்துவர்கள்தான் `இதையெல்லாம் கண்டுக்காத. நீ மனசை தளரவிடாம தைரியமா இரு'ன்னு சொல்லி தைரியப்படுத்தினாங்க.

அதோட நேரத்துக்குச் சாப்பாடு, பழங்கள், பால், முட்டை, வேகவைத்த சுண்டல்னு அடிக்கடி ஏதாவது சாப்பிட கொடுப்பாங்க. சத்தியமா சொல்றேன்... என் வீட்டுலகூட என்னை இப்படித் தாங்கிக் கவனிச்சதில்லை.

எனக்கு டைரி எழுதுற பழக்கம் உண்டு. நர்ஸம்மாகிட்ட எனக்கு ஒரு நோட்டும் பேனாவும் வேணும்னு கேட்டு வாங்கி அதில் கவிதைகள் எழுத ஆரம்பிச்சேன். அப்புறம் கிராஃப்ட் வேலைகள் தெரியும். வீட்டுல இருந்து வர்றப்ப அதுக்கான பொருள்களை எடுத்துட்டு வந்திருந்தேன். அதுல ஈடுபட்டதால நேரம் போனதே தெரியலை.

போதுமான உடைகள் என்கிட்ட இல்லைங் கிறதை தெரிஞ்சுக்கிட்ட மருத்துவர்கள் அவங்க கைக்காசுல எனக்குத் தேவையான உடைகளையும் சில பொருள்களையும் வாங்கிக் கொடுத்தாங்க. அதை வாங்கினப்ப எனக்குக் கண்கலங்கிடுச்சு. இந்த அதீதமான அன்புனாலதான் சிகிச்சையில இருந்து வெற்றிகரமா என்னால மீண்டு வர முடிஞ்சது.

உடல்நிலை சரியான பிறகு மாவட்ட கலெக்டரும், சிகிச்சையளிச்ச மருத்துவர்களும் பூங்கொத்து கொடுத்தாங்க. என்னைக் கூப்பிட அப்பா வந்திருந்தார். அவரைப் பார்த்ததும் கட்டிப்பிடிச்சுக்கிட்டேன். ஆம்புலன்ஸ் மூலம் வீட்டுக்கு வந்தேன். வீட்டைப் பார்த்த பிறகுதான் உயிரே வந்தது. கொரோனாவை விட, நேசிக்கிறவங்களைப் பிரிந்து இருக்கிறது தான் கொடுமையா இருந்தது. இதுக்குத்தான் வீட்ல இருங்கன்னு அரசாங்கம் சொல்லுது. மன உறுதி இருந்தா போதும்... கொரோனாவைத் தூக்கியெறிஞ்சு மீண்டு வரலாம் என்பதுக்கு நான் ஓர் உதாரணம்'' என்கிறவரின் வார்த்தைகள் மற்றவர்களுக்கு நம்பிக்கையைத் தருகின்றன.