புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கிக்கு அருகேயுள்ள கூத்தாடிவயலைச் சேர்ந்தவர் ராஜலெட்சுமி. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரசவத்துக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். ராஜலெட்சுமிக்கு சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. தொடர்ந்து, ரத்தப்போக்கு அதிகமாக இருந்ததால், அவரை புதுக்கோட்டை ராணியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு கர்ப்பப்பை அகற்றப்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
இதேபோல், கடந்த 13-ம் தேதி அறந்தாங்கிக்கு அருகேயுள்ள அரசர்குளம் மேல்பாதியிலிருந்து ஜோதிமீனா என்ற பெண் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்த நிலையில், அடுத்த சில மணி நேரங்களிலேயே மூச்சுத்திணறல் ஏற்பட்டு, பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த நிலையில், அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு முன்பு திரண்ட பாதிக்கப்பட்ட பெண்களின் உறவினர்கள், "தவறான சிகிச்சையாலும், அலட்சியப் போக்காலும்தான் உயிரிழப்பு நடந்திருக்கிறது" எனக் கூறி, சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி மருத்துவமனைக்கு முன்பு சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அங்கு வந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி கொடுத்ததையடுத்து மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனர். மகப்பேறு இறப்புகளே இல்லாத மருத்துவமனையாகத் திகழ்ந்துவந்த அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் இந்தச் சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றன.
பாதிக்கப்பட்டவர்களிடன் உறவினர்களிடம் பேசினோம். ``புதுக்கோட்டையில் மருத்துவக் கல்லூரி வந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புதான், இந்த மருத்துவமனையை தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தினாங்க. ஆனாலும், இங்கு போதுமான மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லை. ஆள் பற்றாக்குறை அதிகமாக இருக்கிறது. ஒரு மருத்துவர் விடுமுறை எடுத்தாலும், அந்தத் துறையில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் அன்னைய பாடு திண்டாட்டம்தான். அதேபோல் ஒவ்வொருவரும் தனியாக கிளினிக்குகளை நடத்திக்கொண்டு முறையாக நோயாளிகளை கவனிப்பதில்லை. பிரசவ வார்டில்
அளித்த தவறான சிகிச்சையாலும், அலட்சியப் போக்காலும்தான் இன்னைக்கு உயிரிழப்பு வரை நடந்திருக்கு. சம்பந்தப்பட்ட அதிகாரிகள்மீது உரிய நடவடிக்கை எடுக்கணும்" என்றனர்.

இந்த விவகாரத்தில் பணியிலிருந்த மருத்துவர், செவிலியர், செவிலியர் உதவியாளர் உள்ளிட்ட மூன்று பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர்.
மருத்துவமனை ஊழியர்களிடம் இது குறித்துக் கேட்டபோது, ``இறந்துபோன பெண்ணுக்கு உயர் ரத்த அழுத்தம், ரத்தசோகை உள்ளிட்ட சில இணை நோய்கள் இருந்தன. எங்களால் முயன்ற அளவு சிகிச்சைகளை மேற்கொண்டோம். ராணியார் மருத்துவமனையில் சிகிச்சைபெறுபவர் தற்போது நலமுடன் இருக்கிறார். சம்பந்தப்பட்டவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது" என்றனர்.