ஜார்க்கண்ட் மாநிலம், தன்பாத் அருகிலுள்ள மகேஷ்பூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் உத்தம் மகதோ. இவர் அருகிலுள்ள கிழக்கு வசூரியா என்ற கிராமத்தைச் சேர்ந்த நிஷா என்ற பெண்ணைக் காதலித்துவந்தார். இருவரும் கடந்த நான்கு ஆண்டுகளாகக் காதலித்துவந்தனர். இரு வீட்டிலும் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்ததையடுத்து, நிச்சயதார்த்தமும் செய்துகொண்டனர்.

ஆனால், திருமணத்துக்கு 20 நாள்கள் இருக்கும் நிலையில், திடீரென உத்தம் தன்னுடைய காதலி நிஷாவைத் திருமணம் செய்துகொள்ள விருப்பமில்லை என்று தெரிவித்துவிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த நிஷா தன்னுடைய குடும்பத்தினர் அனைவரையும் அழைத்துக்கொண்டு காதலனின் மகேஷ்பூருக்கு வந்தார். காதலன் வீட்டு முன்பு தன் உறவினர்களுடன் சேர்ந்து அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால், உத்தம் குடும்பத்தினர் வீட்டைக் காலிசெய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இந்தப் பிரச்னை போலீஸார் கவனத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டது. போலீஸார் இரு தரப்பினருடன் பல சுற்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
இறுதியில் நிஷாவைத் திருமணம் செய்துகொள்ள உத்தம் சம்மதித்தார். இதையடுத்து, இருதரப்பினரும் உடனே கிளம்பி உள்ளூரில் இருக்கும் கங்காபூர் அம்மன் கோயிலுக்கு புறப்பட்டுச் சென்றனர். அங்கு இரு குடும்பத்தார் முன்னிலையில் பூசாரி உதய் திவாரி இருவருக்கும் திருமணம் செய்துவைத்தார். இந்தத் திருமணத்தில் இரு கிராமத்தையும் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

திருமணம் நடந்ததால் நிஷா மிகவும் மகிழ்ச்சியடைந்ததாகக் கூறப்படுகிறது. இந்தத் திருமணத்தின் மூலம் தன் காதலை கண்டுபிடித்துவிட்டதாகத் தெரிவித்திருக்கும் நிஷா, தான் போலீஸ் நிலையத்தில் கொடுத்திருக்கும் புகாரைத் திரும்பப் பெற்றுக்கொண்டதாகத் தெரிகிறது.