விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகேயுள்ள ஒட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரின் மகன் சரண் (18), சேதராப்பட்டியிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இன்று எம்.ஜி.ஆர் பிறந்தநாள் தினம் கொண்டாடப்படுவதையொட்டி, விழுப்புரம் மாவட்டம், கோட்டகுப்பத்திலுள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவிப்பதற்காக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நேற்றைய தினமே வருகைதந்து, ஆரோவில் பகுதியில் தங்கியிருக்கிறார்.

எனவே, அவரை வரவேற்பதற்காக சென்னை - புதுவை கிழக்குக் கடற்கரை சாலையில் பிள்ளைச்சாவடி முதல் கோட்டகுப்பம் வரையில் வாழை மரங்கள் கட்டும் பணி நேற்று நடைபெற்றிருக்கிறது. இந்தப் பகுதி நேர பணியில், நேற்றிரவு சரண் ஈடுபட்டிருக்கிறார். பிள்ளைச்சாவடி கோயில் குளக்கரை அருகே சாலையோரமாக வாழை மரத்தை கட்டிவிட்டு, எதிர் திசையில் கட்டுவதற்காக சாலையைக் கடக்க முயன்றிருக்கிறார். அப்போது சென்னை - புதுவை நோக்கிச் சென்ற தனியார் ஹோட்டலின் ஆம்னி வேன் ஒன்று பலமாக மோதியிருக்கிறது. இந்த விபத்தில் சில அடி தூரம் தூக்கி வீசப்பட்ட சரண், தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து சரணின் தந்தை கோட்டக்குப்பம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அந்தப் புகாரைப் பெற்றுக்கொண்ட காவல்துறை அதிகாரிகள், 279, 304 (a) ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். டிடிவி தினகரனை வரவேற்பதற்காக வாழைமரம் கட்டும் பணிக்குச் சென்ற இளைஞர், வாகன விபத்தில் உயிரிழந்திருக்கும் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.