Published:Updated:

``இப்படியே போனால் ஆவின் பால் விற்பனையைப் புறக்கணிக்க வேண்டிவரும்'' - பால் முகவர்கள் சங்கம்

இ.லோகேஷ்வரி

"ஆவின் பால் விற்பனை தொடர்ந்து சரியக் காரணம் என்ன?" பால் முகவர்கள் சங்கம் சொல்லும் காரணம்...

 ஆவின் பால்
ஆவின் பால்

ஆவின் பால் நிறுவனம், கொள்முதல் விலையை நான்கு ரூபாய்க்கும், விற்பனை விலையை ஆறு ரூபாய்க்கும் உயர்த்தியுள்ளது. இந்த நிலையிலும், பால் முகவர்களுக்கு வழங்க வேண்டிய கமிஷன் தொகை உயர்த்தப்படாமல் இருக்கிறது. இதே நிலை நீடித்தால், ஆவின் பால் விற்பனையைப் புறக்கணிக்க உள்ளதாகத் தெரிவித்திருக்கிறார்கள், தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கம்.

தமிழகத்தில், பால் கொள்முதல் விலை உயர்த்தப்படும்.
முதல்வர் பழனிசாமி

தமிழகத்தில், பால் கொள்முதல் விலை உயர்த்தப்படும் என்று சட்டசபையில் கடந்த மாதம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதையடுத்து, தற்போது ஆவின் பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலை உயர்த்தப்பட்டுள்ளது.

``பசுந்தீவனம், கலப்புத் தீவனம், உலர் தீவனம், தவிடு, புண்ணாக்கு ஆகியவற்றின் விலை மற்றும் இதர இடு பொருள்களின் விலை கடந்த நான்கு ஆண்டுகளில் உயர்ந்துள்ளன என்று தெரிவித்து, பால் கொள்முதல் விலையை உயர்த்தித் தர வேண்டும் என்று பால் உற்பத்தியாளர்களும், அச்சங்கத்தினரும் அரசுக்குத் தொடர்ந்து கோரிக்கைவைத்து வந்தனர்.

பால் உற்பத்தி, கிராமப் பொருளாதார மேம்பாட்டில் ஒரு முக்கியப் பங்கு வகிப்பதையும், பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையைக் கருத்தில் கொண்டும், கிராம அளவில் உள்ள தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ள 4 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் மேலான பால் உற்பத்தியாளர்கள் பயனடையும் வகையில், பசும்பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 28 ரூபாயில் இருந்து 32 ரூபாயாக, அதாவது லிட்டர் ஒன்றுக்கு 4 ரூபாய் உயர்த்தவும், எருமைப் பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 35 ரூபாயில் இருந்து 41 ரூபாயாக, அதாவது லிட்டர் ஒன்றுக்கு 6 ரூபாய் உயர்த்தி வழங்க தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

Aavin Milk
Aavin Milk

பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று, பால் கொள்முதல் விலையை உயர்த்துவதாலும், கிராமப்புறப் பால் உற்பத்தியாளர்களுக்கான பால் பணப் பட்டுவாடா எவ்விதத்திலும் பாதிப்படையக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டும், நுகர்வோர்களுக்கு நல்ல தரமான பால் தொடர்ந்து விநியோகம் செய்வதை உறுதிப்படுத்தும் வகையிலும், பால் உற்பத்தியாளர் ஒன்றியங்களின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், பதப்படுத்தும் செலவு, போக்குவரத்து மற்றும் அலுவலகச் செலவு ஆகியவை கணிசமாக உயர்ந்துள்ளதாலும், அனைத்து வகையான ஆவின் பால் விற்பனை விலை லிட்டர் ஒன்றுக்கு 6 ரூபாய் உயர்த்தப்படும்'' என்று தமிழக அரசின் ஆவின் பால் நிறுவனம் அறிவித்திருக்கிறது. இந்தப் பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலை உயர்வு இன்று முதல் (19.8.2019 ) முதல் அமலுக்கு வந்துள்ளது.

தமிழக அரசு இதற்கு முன்பு கடைசியாகக் கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலையை உயர்த்தியது. 5 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்த்தப்பட்டு இருக்கிறது. நீலம் (நிலைப்படுத்தப்பட்டது) ஒரு லிட்டர் பால் அட்டைக்கு ரூ.40 ஆகவும், சில்லரை விற்பனை ரூ.43 ஆகவும், பச்சை (சமன்படுத்தப்பட்டது) பால் அட்டைக்கு ரூ.45 ஆகவும், சில்லரை விற்பனை ரூ.47 ஆகவும் உயர்ந்துள்ளது.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

ஆரஞ்சு (கொழுப்புச் சத்து செறிவூட்டப்பட்டது) பால் அட்டைக்கு ரூ.49 ஆகவும், சில்லரை விற்பனை ரூ.51 ஆகவும், மெஜந்தா (கொழுப்புச் சத்து நீக்கப்பட்டது) பால் அட்டைக்கு ரூ.41 ஆகவும் உயர்ந்திருக்கிறது. ஆவின் பால் விலை உயர்ந்ததைத் தொடர்ந்து, ஆவினின் மற்ற தயாரிப்புகளான வெண்ணெய், நெய் உள்ளிட்ட பொருள்களின் விலையும் உயர இருக்கிறது.

தமிழ்நாடு பால் முகவர்கள், ஆவின் மற்றும் தனியார் பால் முகவர்கள் கூட்டமைப்புத் தொழிலாளர்கள் நலச் சங்கத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி இதுகுறித்து கூறுகையில், ``ஆவின் நிறுவனம் பால் முகவர்களுக்கு இதுவரை ஒரு லிட்டர் பால் விற்பனை செய்வதற்கு ஐம்பது பைசா மட்டுமே கொடுத்துவருகிறது. அதை, நான்கு ரூபாயாக உயர்த்தித் தருமாறு பால்வளத் துறை அமைச்சரிடமும் ஆவின் நிறுவன மேலாண் நிறுவனரிடமும் பலமுறை கோரிக்கை வைத்திருக்கிறோம்.

அமைச்சரிடம் கோரிக்கை மனு கொடுக்கும்  பால் முகவர் சங்கத்தினர்
அமைச்சரிடம் கோரிக்கை மனு கொடுக்கும் பால் முகவர் சங்கத்தினர்

கடந்த 18 ஆண்டுகளாக வெறும் ஐம்பது பைசாவுக்குத்தான் வேலைசெய்து வருகிறோம். இதுவே தனியார் பால் நிறுவனங்கள் ஒரு லிட்டர் விற்பனை செய்ய மூன்று ரூபாய் கொடுக்கிறார்கள். அதை, பால் முகவர்கள் மற்றும் கடை உரிமையாளர்கள் சரிசமமாகப் பங்கிட்டுக்கொள்கிறோம். ஆனால், ஆவின் நிறுவனம் எங்களை வேண்டுமென்றே அலைக்கழிக்கிறது. எத்தனை முறை அரசிடம் கோரிக்கைவைத்தாலும், எங்களைக் கண்டுகொள்வதில்லை.

இப்படியே சென்றால், ஆவின் பால் விற்பனையைப் புறக்கணிக்க உள்ளோம். உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று பால் விலை உயர்த்தப்பட்டதாகச் சொல்கிறார்கள். ஆனால் கொள்முதல் விலை நான்கு ரூபாயாகவும் விற்பனை விலை ஆறு ரூபாயாகவும் உள்ளது.

இப்படியே சென்றால், ஆவின் பால் விற்பனையைப் புறக்கணிக்க உள்ளோம்.
பால் முகவர் சங்கம்

ஆவின் பால் விலையேற்றம், காலத்தின் கட்டாயம் என்கிறார்கள். ஆனால், முறையாக நிர்வாகம் செய்திருந்தால் இந்த விலையேற்றத்தைத் தவிர்த்திருக்கலாம். அத்தோடு, ஆவின் விற்பனையை அதிகரிக்க அந்நிறுவனம் முயற்சி செய்வதில்லை.

தமிழகத்தில், ஆவின் நிறுவனம் மூலமாகத் தினசரி 33 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு, 25 லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகிறது. மீதமுள்ள பால், மதிப்புக்கூட்டுப் பொருள்கள் தயாரிக்க எடுத்துக்கொள்ளப்படுகிறது. தமிழகத்தில் ஆவின் பாலின் விற்பனை 16.4 சதவிகிதம் மட்டும்தான். மீதமுள்ள 86.4 சதவிகிதம் பால், தனியார் பால் உற்பத்தியாளர்களால் விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் 2 கோடி லிட்டர் மொத்தமாக உற்பத்திசெய்யப்படுகிறது. அதில் ஒன்றரைக் கோடி லிட்டர் மட்டுமே நேரடி விற்பனைக்கு வருகிறது. இதுதவிர, அண்டை மாநிலங்களுக்கும் பால் அனுப்பப்படுகிறது.

பொன்னுசாமி
பொன்னுசாமி

தீவனம், மாடு பராமரிப்பு உட்பட பால் உற்பத்தியாளர்கள் ஒரு லிட்டர் பால் உற்பத்தி செய்ய 49 ரூபாய் 84 காசுகள் செலவு செய்கிறார்கள். இதுவரை அவர்களுக்கு ஒரு லிட்டருக்கு 28 ரூபாய் மட்டுமே அரசு கொடுத்துவந்தது. அது தற்போது 32 ரூபாயாக மாற்றப்படுகிறது. ஆனால், அந்தப் பாலை விற்பனை செய்யும் பால் முகவர்களுக்கு ஒரு லிட்டருக்கு ஐம்பது பைசா மட்டுமே கொடுக்கப்படுகிறது. அதேபோல் பால் முகவர்களுக்கு எந்தச் சலுகைகளும் கிடையாது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் மொத்த விற்பனையாளர்களால் எங்களுக்குப் பிரச்னைகள்தான் வருகின்றன.

வாங்கும் பாலுக்கு முறையாக ரசீதுகூடக் கொடுப்பதில்லை. ஆனால், பிற மாவட்டங்களில் சதவிகித அடிப்படையில் எங்களுக்குப் பணம் கொடுக்கிறார்கள். இதை யாரிடம் சொல்வது? இதனால் கந்துவட்டிக் கும்பலிடம் சிக்கிச் சீரழிகிறது எங்கள் வாழ்க்கை. ஆவின் நிறுவனத்தைப் பொறுத்தவரை நேரடியாகப் பால் முகவர்களிடம் தொடர்புவைக்காமல், மொத்த விற்பனையாளர்களிடம் கொடுத்து விற்கச் சொல்வதால்தான் நஷ்டம் ஏற்படுகிறது. அதேபோல் இன்னும் பல நிர்வாகச் சிக்கல்கள் இருக்கின்றன. இதையெல்லாம் சரிசெய்து, ஆவின் விற்பனையை உயர்த்த வேண்டும்'' என்றார்.