களவு போகலை... கனவு கண்டோம்... ஊத்தி மூடப்பட்டதா, ஒன்றரை டன் ஆவின் ஸ்வீட் ஊழல் விவகாரம்!

இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை அதிகாரி அளித்த அறிக்கையில் பல சிக்கல்கள் இருப்பதால், துறை அதை ஏற்கவில்லை.
“முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வீட்டுக்கு ஒன்றரை டன் ஆவின் ஸ்வீட்டுகள் இலவசமாகச் சென்றிருக்கின்றன. அதற்கான ஆதாரம் இருப்பதால், நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கடந்த 2021-ல் அறிவித்தார் தற்போதைய பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர். ஆனால், ஒன்றரை ஆண்டு கழித்து வெளிவந்த விசாரணை அறிக்கையோ, ‘என் ஆடு களவு போகலை... களவு போன மாதிரி கனவு கண்டேன்...’ என்ற வடிவேலு காமெடியாகியிருக்கிறது.
தீபாவளி பண்டிகைக்காக கடந்த 2020-ம் ஆண்டு, நவம்பர் மாதம் 11-ம் தேதி, சேலம் மாவட்டம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க வாகனத்தில் சுமார் 2.5 கோடி மதிப்பிலான 1.5 டன் எடையுள்ள ஆவின் ஸ்வீட்டுகள் விருதுநகருக்கு முறைகேடாக எடுத்துச் செல்லப்பட்டதாகப் புகார் எழுந்தது. தி.மு.க ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சரான கையோடு, இது குறித்து விசாரிக்க ஈரோடு துணைப்பதிவாளர் ராஜராஜனை விசாரணை அதிகாரியாக நியமித்தார் அமைச்சர் சா.மு.நாசர்.
சம்பவம் நடந்த காலகட்டத்தில் சேலம் மாவட்ட பால் உற்பத்தியாளர் ஒன்றியத்தின் பொது மேலாளராக இருந்த நர்மதாதேவி, இதுதொடர்பாக விசாரணை அதிகாரிக்கு எழுத்துபூர்வமாக பதில் கொடுத்தார். அதில், “ஆவின் அதிகாரிகள் உள்ளிட்ட வி.வி.ஐ.பி., வி.ஐ.பி-களுக்கு மரியாதை நிமித்தமாகப் பால் உபபொருள்கள் வழங்குவது என்பது எல்லா ஒன்றியங்களிலும் பல ஆண்டுக்காலமாக இருக்கும் வழக்கம்தான். அந்த நடைமுறைகளைப் பின்பற்றியே உபபொருள்கள் வழங்கப்பட்டன. தனிப்பட்ட முறையில் என்னால் எந்த முடிவும் மேற்கொள்ளப்படவில்லை” என்று கூறியிருந்தார்.

“ராஜேந்திர பாலாஜிக்கு பால் உபபொருள்கள் வழங்கப்பட்டது என்பதற்கு அப்போதைய பொது மேலாளர் அளித்த ஒப்புதல் வாக்குமூலம்தான் இது” என்று அப்போது ஆவின் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது. ஆனால், சமீபத்தில் சமர்ப்பிக்கப்பட்ட விசாரணை அதிகாரியின் அறிக்கையோ அதற்கு நேர் மாறாக இருக்கிறது. நமக்குக் கிடைத்த அந்த அறிக்கையின் சாரம் இதுதான்.
“2020 தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, சேலம் ஆவினில் 32 டன் இனிப்பு, காரம் தயாரித்து விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. அதில் எந்தக் குறைபாட்டையும் கண்டுபிடிக்க முடியவில்லை. அதேநேரத்தில், 11.11.2020 அன்று சேலம் ஆவினிலிருந்து கணக்கில் தெரிவிக்கப்படாத அளவில் இனிப்புகள் கனரக வாகனம் மூலமாக விருதுநகருக்கு எடுத்துச் செல்லப்பட்டிருப்பது உண்மை.

பொறியியல் பிரிவு மேலாளர் பூபதிராஜ் பிறப்பித்த வாய்மொழி ஆணையின் அடிப்படையில், ஓட்டுநர் ரங்கநாதன், முதுநிலை தொழிற்சாலை உதவியாளர் மோகன் ஆகியோர் அந்த வாகனத்தை எடுத்துச் சென்றிருக்கிறார்கள். இனிப்பு ஏற்றிவந்த வாகனத்தை ஆவின் வாயிலில் பாதுகாவலர் தடுத்து நிறுத்தியபோது, ‘பின்னர் கேட் பாஸ் வழங்குகிறேன்’ என்று கூறி அந்தத் தடையை உடைத்திருக்கிறார் தனிச் செயலாளர் சாந்தா. கேட்டால், `100 கிலோ இனிப்புதான் சென்றது’ என்றார்கள். அதற்கு ஏன் அவ்வளவு பெரிய வாகனத்தைப் பயன்படுத்தினார்கள் என்பதற்குத் தெளிவான விளக்கம் இல்லை. மேலாளர் பூபதிராஜோ, ‘தனிச் செயலர் கூறியதன் அடிப்படையில்தான் இனிப்பு அனுப்பிவைக்கப்பட்டது. வண்டியில் என்ன இருந்தது என்று தெரியும்... எவ்வளவு இருந்தது எனத் தெரியாது’ என வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.
எதற்காக விருதுநகருக்கு இனிப்பு எடுத்துச் செல்லப்பட்டது என்பதற்கும் பொருத்தமான காரணங்கள் சொல்லப்படவில்லை. கணக்கில் வராத இனிப்புகள் ஆவினிருந்து அனுப்பப்பட்டது உண்மை. ஆனால், எவ்வளவு எடை அல்லது மதிப்புள்ள பொருள்கள் அனுப்பப்பட்டன என்றும், கணக்கில் காட்டாமல் எவ்வளவு இனிப்புகளைக் கூடுதலாகத் தயாரித்தார்கள் என்றும் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே, ஆவினுக்கு நஷ்டம் எதுவும் இல்லை எனக் கருதி, தண்டத்தீர்வை நடவடிக்கைக்குப் பரிந்துரைக்கவில்லை” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இது குறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் தலைவர் பொன்னுசாமியிடம் கேட்டபோது, “சுமார் ஒன்றரை டன் ஸ்வீட்டுகள் ராஜேந்திர பாலாஜிக்கு கொடுக்கப்பட்டதாகத்தான் குற்றச்சாட்டு. இதை தற்போதைய அமைச்சர் நாசரும் பல முறை உறுதிப்படுத்தியிருக்கிறார். இந்த முறைகேடு தொடர்பு விசாரணை அறிக்கையில், ‘சேலம் ஒன்றியத்திலிருந்து ஸ்வீட்டுகள் தயாரிக்கப்பட்டது உண்மை. அதை லாரியில் ஏற்றிச் சென்றதும் உண்மை. ஆனால், எவ்வளவு எனத் தெரியவில்லை’ என்று முழுப் பூசணிக்காயை அல்ல, முழு டைனோசரையே சோற்றில் மறைக்கப் பார்க்கிறார்கள். ஒரு துறையின் முன்னாள் அமைச்சர் மீதான புகாரை, அதே துறையின் கீழ்நிலை அதிகாரியைக்கொண்டு விசாரித்தால், எப்படி உண்மை வெளிப்படும்... முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் தொடங்கப்பட்ட விசாரணையின் முடிவும் அதன்படியே வந்திருக்கிறது என்றுதான் நான் கருதுகிறேன். ஆவின் மீது அரசுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால், இது குறித்து மறு விசாரணை செய்ய லஞ்ச ஒழிப்புத்துறை அல்லது சி.பி.சி.ஐ.டி-க்கு உத்தரவிட வேண்டும்” என்றார் காட்டமாக.

இது குறித்து பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசரைத் தொடர்புகொள்ள பலமுறை முயன்றும் முடியவில்லை. என்ன விஷயத்துக்காக அழைக்கிறோம் என அவருக்கும், அவரின் உதவியாளர்களுக்கும் குறுஞ்செய்தி அனுப்பியும் எந்த பதிலும் இல்லை.
ஆவின் நிர்வாக இயக்குநர் சுப்பையனிடம் விளக்கம் கேட்டபோது, “இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை அதிகாரி அளித்த அறிக்கையில் பல சிக்கல்கள் இருப்பதால், துறை அதை ஏற்கவில்லை. அதேபோல, மறு விசாரணையை விரிவாக மேற்கொள்ள புதிய அதிகாரியாக இரணியன் நியமிக்கப்பட்டிருக்கிறார்” என்றார்.
இது குறித்து முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் கேட்டபோது, “தவறு ஏதாவது நடந்திருந்தால்தானே கண்டுபிடிக்க முடியும்... அப்படியே எனக்கு ஸ்வீட் தேவைப்பட்டிருந்தால், பக்கத்திலேயே மதுரை, தேனி, விருதுநகரில் ஆவின் இருக்கிறதே... எதற்கு சேலத்திலிருந்து விருதுநகருக்கு வரவழைக்கப் போகிறேன். பரபரப்புக்காக வதந்தியைப் பரப்பினார்கள். இப்போது அது பொய் எனத் தெரியவந்திருக்கிறது” என்றார் கூலாக.
ஊழலை நிரூபிக்கிறார்களோ இல்லையோ... அது தொடராமல் இருக்க வேண்டுமென்றால் இலவச இனிப்பு சப்ளையை நிறுத்த வேண்டும். ஆவின் ஓசி ஸ்வீட் வழங்கினால்தான் தீபாவளியைக் கொண்டாட முடியும் என்கிற தரித்திர நிலையிலா இருக்கிறார்கள் நம்மூர் வி.வி.ஐ.பி-க்கள்?