Published:Updated:

அச்சுறுத்தும் வேகத்தடைகள்... திடீரென்று முளைக்கும் பேரிகார்டுகள்

தேனியில் அதிகரிக்கும் விபத்துகள்
பிரீமியம் ஸ்டோரி
News
தேனியில் அதிகரிக்கும் விபத்துகள்

- தேனியில் அதிகரிக்கும் விபத்துகள்

வேகத்தைக் குறைத்து, விபத்துகளைக் கட்டுப் படுத்தத்தான் சாலைகளில் வேகத்தடைகளும் பேரிகார்டுகளும் அமைக்கப்படுகின்றன. ஆனால், எங்கள் மாவட்டத்தில் அளவுக்கு அதிகமாக உள்ள வேகத்தடை களாலும், பேரிகார்டுகளாலும்தான் அதிக அளவில் விபத்துகள் நடக்கின்றன’’ என்று புலம்புகின்றனர் தேனி மாவட்ட மக்கள்.

சாய் சரண் தேஜஸ்வி - ராமகிருஷ்ணன்
சாய் சரண் தேஜஸ்வி - ராமகிருஷ்ணன்

தேனி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகள் மற்றும் பேரிகார்டுகள் குறித்து, தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தகவல்களைப் பெற்றுள்ளார் தேனியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ராமகிருஷ்ணன். அவரிடம் பேசினோம். ‘‘தேனி முதல் பெரியகுளம் வரை 16 கிலோமீட்டர் தூரத்துக்கு 30 வேகத்தடைகளும், தேனியிலிருந்து கண்டமனூர் வரை 14 கிலோமீட்டர் தூரத்துக்கு 27 வேகத்தடைகளும் உள்ளன. இவை போதாதென்று ஒவ்வொரு நாளும் ஒவ்வோர் இடத்தில் பேரிகார்டுகளை வைத்து வாகன ஓட்டிகளைத் திணறடிக்கின்றனர். 2016-ம் ஆண்டு கோடாங்கிப்பட்டியில் திடீரென வைக்கப்பட்ட பேரிகார்டால் அரசுப் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகி, பலர் காயமடைந்தனர். விசாரணை யில், ’தேவையே இல்லாத இடத்தில் பேரிகார்டு அமைக்கப்பட்டதுதான் விபத்துக்குக் காரணம்’ என்று தெரியவந்தது. அதேபோல, வெள்ளை நிற பெயின்ட் பூசப்படாத, உயரமான வேகத்தடைகளாலும் இரவு நேரங்களில் அதிக அளவில் விபத்துகள் நடக்கின்றன. இப்படி விபத்தில் சிக்கிப் பலர் இறந்துள்ளனர்.

ஆர்.டி.ஐ மூலம் கேட்டால், காவல்துறை தரப்பில் `மாவட்டம் முழுவதும் 10 பேரிகார்டுகள் மட்டுமே வைத்துள்ளோம்’ என்கின்றனர். ஆனால், தேசிய நெடுஞ்சாலைத்துறை தரப்பிலோ ‘தேனி எல்லைக்குள் மதுரை-கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் அனுமதியில்லாமல் 5 வேகத்தடைகளும், 30 பேரிகார்டுகளும் வைக்கப்பட்டுள்ளன’ என்று தகவல் தந்துள்ளனர். “விதிப்படி ஒரு வேகத்தடை 0.10 மீட்டர் உயரமும், 2 மீட்டர் அகலமும்தான் இருக்க வேண்டும். ஆனால், இங்கு இந்த அளவைக் கடைப்பிடிக்கவில்லை. இஷ்டத்துக்கு உயரத்தை ஏற்றியிருக்கின்றனர். இதனால் விபத்துகள் அதிகமாகின்றன. அதுமட்டுமல்ல ஆம்புலன்ஸுகள் குறித்த நேரத்துக்குச் செல்ல முடியாததாலும் மரணங்கள் அதிகரிக்கின்றன’’ என்றார்.

மாநில நெடுஞ்சாலைத்துறை தேனி கோட்ட உயர் அதிகாரி ஒருவரிடம் பேசியபோது, ‘‘எங்கள் அனுமதி இல்லாமல் பல இடங்களில் காவல்துறையினர்தான் வேகத்தடைகளையும் பேரிகார்டுகளையும் வைத்துள்ளனர்’’ என்றார்.

அச்சுறுத்தும் வேகத்தடைகள்... திடீரென்று முளைக்கும் பேரிகார்டுகள்

தேனி எஸ்.பி-யான சாய் சரண் தேஜஸ்வி யிடம் பேசினோம். ‘‘விபத்து நடக்கிறது என்று அந்தந்த ஊர் மக்களிடமிருந்து வரும் கோரிக்கைகளின் அடிப்படையில்தான் வேகத்தடைகளும் பேரிகார்டுகளும் அமைக்கப்படுகின்றன. மற்றபடி, திட்டமிட்டு எதையும் செய்யவில்லை’’ என்றார்.

விபத்துகளைத் தடுக்க வேண்டியவர்களே விபத்துகளுக்கான காரணமாகிவிடக் கூடாது!