அலசல்
Published:Updated:

ஜூ.வி ஆக்‌ஷன் ரிப்போர்ட் - ஒரு மாற்றுத்திறனாளி தாயின் கண்ணீர்!

செந்தில்ராஜ்
பிரீமியம் ஸ்டோரி
News
செந்தில்ராஜ்

அரசு கட்டிக்கொடுத்த இந்த வீட்டை 20 வருஷத்துக்கு முன்னால ஒருத்தர்கிட்டருந்து விலை கொடுத்து வாங்கினோம். என் கணவர் விவசாயக் கூலி.

தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் அருகிலுள்ள ஆழிகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் பானுமதி. கணவரை இழந்த மாற்றுத்திறனாளியான இவர், மூளைச் சவால்கொண்ட தன் மகனுடன் பழைய காலனி வீட்டில் வசித்துவருகிறார். அந்த வீடு தற்போது இடியும் நிலையில் உள்ளது. ‘‘ஆதரவற்ற நிலையில இருக்கேன். வறுமையில தவிக்கிற எனக்கு அரசு புது வீடு கட்டித் தரணும்னு அதிகாரிகள்கிட்ட அலையா அலைஞ்சும் பலனில்லை. எவ்வளவோ முறையிட்டுப் பார்த்துட்டேன். ஒண்ணும் நடக்க மாட்டேங்குது” என்ற பானுமதியின் பரிதாபக் குரல் நமது காதுகளுக்கு வந்தது. ஆழிகுடிக்குச் சென்றோம்...

ஜூ.வி ஆக்‌ஷன் ரிப்போர்ட் - ஒரு மாற்றுத்திறனாளி தாயின் கண்ணீர்!

மேற்கூரை சிமென்ட் பூச்சு பெயர்ந்து, கம்பிகள் வெளிப்பட்டு இடிந்துவிழும் நிலையிலிருக்கிறது. வீட்டு வாசலில் தன் மகனுடன் பரிதாபமாக அமர்ந்திருந்த பானுமதியைச் சந்தித்துப் பேசினோம், ‘‘அரசு கட்டிக்கொடுத்த இந்த வீட்டை 20 வருஷத்துக்கு முன்னால ஒருத்தர்கிட்டருந்து விலை கொடுத்து வாங்கினோம். என் கணவர் விவசாயக் கூலி. திடீர்னு ஒரு கையும் காலும் வேலை செய்யாமப்போச்சு. ரெண்டு வருசம் படுத்த படுக்கையா இருந்தார். ஏழு வருஷத்துக்கு முன்னாடி செத்துப்போயிட்டார். என்னால சரியா நடக்க முடியாது. கம்பை ஊனிக்கிட்டோ, யாரையாவது பிடிச்சுக்கிட்டோ மெது மெதுவாத்தான் நடக்க முடியும். என் மகன் உதயகுமாருக்கு 40 வயசாகுது. அஞ்சு வயசு பையன் அளவுக்குத்தான் அவனுக்கு மூளை வளர்ச்சி இருக்குது. அவனுக்கு எல்லாப் பணிவிடைகளையும் நான்தான் செய்யறேன். எனக்கு 1,000 ரூபாய், மகனுக்கு 1,500 ரூபாய்னு கிடைக்கிற 2,500 ரூபாய் உதவித்தொகையை வெச்சுத்தான் குடும்பம் நடத்துறேன். அக்கம் பக்கத்துல இருக்கிறவங்க அரிசி, பருப்புனு ஏதாவது கொடுக்கிறதை வாங்கிக்கிறேன்.பணத்தேவைக்கு வேற வழியே இல்லாத சமயத்துல, பையனைப் பக்கத்துல உள்ளவங்களைப் பார்த்துக்கச் சொல்லிட்டு மெது மெதுவா நடந்து 100 நாள் வேலைக்கும் போவேன். மாசத்துல ஏழு நாளுதான் அந்த வேலையும் இருக்கும்.

வீட்டுல இருக்குற கக்கூஸுக்குக் கதவு போடக்கூட வழியில்லாம அட்டையை வெச்சு மறைச்சும், துணியைக் கட்டியும் சமாளிச்சுட்டு இருக்கேன். மழை பெய்யுறப்போ ராத்திரியில வீட்டுக்குள்ள படுக்காம, பக்கத்துல இருக்குற கோயில் மண்டபத்துலதான் படுத்திருப்போம். மேற்கூரை எப்போ இடிஞ்சு விழுமோன்னு ஒவ்வொரு நாளும் பதறிக்கிட்டிருக்கோம். அப்படி வீடு இடிஞ்சுட்டுதுன்னா என் மகனை என்னாலயும் காப்பாத்த முடியாது. என்னை அவனாலயும் காப்பாத்த முடியாது. அரசுதான் மனிதாபிமான முறையில எங்களுக்கு வீடு கட்டித் தரணும்’’ என்றார் கண்ணீருடன்.

ஜூ.வி ஆக்‌ஷன் ரிப்போர்ட் - ஒரு மாற்றுத்திறனாளி தாயின் கண்ணீர்!

நடவடிக்கை எடுத்த ஆட்சியர்!

மாவட்ட ஆட்சியர் டாக்டர் செந்தில்ராஜின் கவனத்துக்கு இதைக் கொண்டுசென்றோம். உடனடியாக அதிகாரிகளை ஸ்பாட்டுக்கு அனுப்பி ஆய்வுசெய்து அறிக்கை தர உத்தரவிட்டார். அடுத்த நாளே அதிகாரிகள் ஆய்வுசெய்து அறிக்கை தர, நம்மைத் தொடர்புகொண்டு பேசிய ஆட்சியர், ‘‘ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி நிதியிலிருந்து வீடு பழுதுபார்க்க 50,000 ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யலாம் என்று நினைத்தோம். வீட்டு மேற்கூரையின் நிலையைப் பார்த்தபோது, அந்த நிதி போதாது என்கிறார்கள். கூடுதலாகப் பணம் போட்டுச் சரிசெய்யும் அளவுக்கு அவர்களுக்கு வசதியும் இல்லை. அதனால், இந்திரா காந்தி நினைவு குடியிருப்புத் திட்டத்தின் கீழ் ரூ.2,40,000 மதிப்பீட்டில், புதிதாக வீடு கட்டிக்கொடுக்க முடிவுசெய்திருக்கிறோம். விரைவில் அதற்கான ஆணை வழங்கப்படும்’’ என்றார்.

விஷயத்தை பானுமதியின் கவனத்துக்குக் கொண்டு சென்றபோது, ‘‘உடனே நடவடிக்கை எடுத்த கலெக்டர் ஐயாவுக்கு நன்றி’’ என்றார் கண்ணீருடன்!

கண்ணீர் துடைக்கும் விரல்களுக்கு நன்றி!