Published:Updated:

``அப்பாவ சங்கிலியால கட்ற கொடுமை யாருக்கும் வரக்கூடாது!" - கலங்கும் நடிகர்

பரந்தாமன்
News
பரந்தாமன் ( ச. கெளதம் )

மனவளர்ச்சி குறைபாடுடைய தந்தை, விபத்தில் அடிபட்டு வேலைக்குச் செல்ல முடியாத தாய், தன்னைப் போன்றே வளர்ச்சி குறைபாடுடைய சகோதரன் எனத் துயரான குடும்பப் பின்னணியிலிருந்து தன் நம்பிக்கையால் வாழ்வை நகர்த்தி வருபவர் நடிகர் பரந்தாமன்.

Published:Updated:

``அப்பாவ சங்கிலியால கட்ற கொடுமை யாருக்கும் வரக்கூடாது!" - கலங்கும் நடிகர்

மனவளர்ச்சி குறைபாடுடைய தந்தை, விபத்தில் அடிபட்டு வேலைக்குச் செல்ல முடியாத தாய், தன்னைப் போன்றே வளர்ச்சி குறைபாடுடைய சகோதரன் எனத் துயரான குடும்பப் பின்னணியிலிருந்து தன் நம்பிக்கையால் வாழ்வை நகர்த்தி வருபவர் நடிகர் பரந்தாமன்.

பரந்தாமன்
News
பரந்தாமன் ( ச. கெளதம் )

மக்களை மகிழ்விக்க, அவர்கள் துயரை, சோர்வைப் போக்க கலைகள் பல தருணங்களில் துணைநிற்கின்றன. மேடைப் பாடகர்கள், நாடகக் கலைஞர்கள், கூத்துக்கலைஞர்கள் எனப் பலரும் சொற்ப வருமானம் கிடைத்தால்கூட மக்களின் மகிழ்ச்சிக்காக தம் கலையை நிகழ்த்துவதில் தன்னிறைவுடன் இருப்பர். தற்போதைய ஊரடங்கு காலத்தில்கூட பலரின் மன அழுத்தத்தையும் கலைசார்ந்த நிகழ்ச்சிகள் மூலம்தான் போக்கிக் கொள்கிறோம்.

மேடையில், திரையில் தோன்றி நம்மை மகிழ்விக்கும் பல கலைஞர்களின் வாழ்க்கை புன்னகை நிறைந்ததாய் இருப்பதில்லை என்பதே யதார்த்தம். ஒப்பனை தரித்து நடித்தும், ஆடியும், பாடியும் மகிழ்விப்பவர்கள் ஒப்பனை கலைத்து தம் வாழ்வில் நுழைகையில் புன்னகை தொலைந்து போகிறது

நகைச்சுவை நடிகர் பரந்தாமனின் வாழ்க்கையும் இந்தத் துயர யதார்த்தத்துக்குள் அகப்பட்டுக்கிடக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் சிவலிங்கபுரத்தில் ஒரு மலை கிராமத்தில் பிறந்தவர் பரந்தாமன். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில், யூ-டியூப்களில் நகைச்சுவை பாத்திரங்களில் நடித்து வருபவர். `நகைச்சுவை' என்கிற பதத்தை தம் உடல்மொழியால், நடிப்பால் வெளிப்படுத்தி பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் பரந்தாமனின் வாழ்க்கை பல இன்னல்களுக்குள் உழன்று கிடக்கிறது.

பரந்தாமன்
பரந்தாமன்
ச.கெளதம்

பிறவியிலேயே வளர்ச்சிகுறைபாட்டுக்கு ஆளான பரந்தாமன். தன் திறமையால் பலரும் அறிந்த முகமாக இருக்கிறார். மனவளர்ச்சி குறைபாடுடைய தந்தை, விபத்தில் அடிபட்டு வேலைக்குச் செல்ல முடியாத தாய், தன்னைப் போன்றே வளர்ச்சி குறைபாடுடைய சகோதரன் எனத் துயர் நிறைந்த குடும்பப் பின்னணியிலிருந்து தன் நம்பிக்கையால் வாழ்வை நகர்த்தி வருபவர். கொரோனா கால ஊரடங்கு பல எளியவர்களைப் போல பரந்தாமனின் வாழ்வையும் கலைத்துப் போட்டிருக்கிறது. அவரைச் சந்தித்துப் பேசினோம்.

``ஸ்கூல்ல படிக்குற காலத்துல இருந்தே நடிக்கணும்கிற ஆசை எனக்குள்ள இருந்தது. தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை தமிழ் இலக்கியம் படிச்சேன். பெரிய பெரிய சினிமா கனவுகளோட, சென்னையில் நடிப்பு சொல்லிக் கொடுக்கிற காலேஜ்-ல சேர்ந்தேன். அங்க கிடைச்ச நண்பர்கள் என் நடிப்பைப் பார்த்து சில வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தாங்க. யூ-டியூப் சேனல்களில் நடிக்க வாய்ப்பு கிடைச்சது. என்னுடைய திறமைக்கு சமூக ஊடகங்கள்ல எனக்கு கிடைச்ச ஆதரவு பெரிசு. அந்த வெளிச்சம் மூலமாதான் முன்னணி தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்ல நடிக்க வாய்ப்பு கிடைச்சது. கல்லூரி நிகழ்ச்சில என்னைப் பார்த்த நடிகர் நாசர் `உன் திறமைக்கு ஏற்ற இடம் சினிமாவில் கிடைக்கும்' னு எனக்கு உற்சாகம் கொடுத்தார். நடிகர் தம்பி ராமைய்யாவுக்கு என் நடிப்பு ரொம்பப் பிடிக்கும்.

தம்பி ராமையாவுடன் பரந்தாமன்
தம்பி ராமையாவுடன் பரந்தாமன்

`சொல்ற விஷயங்களைத் துல்லியமாகப் புரிஞ்சுக்கிட்டு நுணுக்கமா நடிக்குற... சீக்கிரமே சினிமா உலகம் உனக்கு வாய்ப்பளித்து வரவேற்கும்' னு நம்பிக்கையூட்டினார். இவங்கள மாதிரி நான் மதிக்கிற பெரிய நடிகர்களுடைய வார்த்தைகளும் வாழ்த்துகளும் என் மனசுல நம்பிக்கையையும், உத்வேகத்தையும் கொடுத்துச்சு. ஆனா திறமைய நம்புற அதே நேரத்துல குடும்ப வறுமை என்னையும் என் குடும்பத்தையும் வாழ விடுமான்னே தெரியல...” -பரந்தாமனின் குரல் தழுதழுத்தது.

``நான் குழந்தையிலிருந்தே பார்த்து வளர்ந்ததெல்லாம் வறுமை மட்டும்தான். 30 வருஷசத்துக்கு முன்னாடி என் அப்பாவுக்கு மனநல பாதிப்பு ஏற்பட்டுச்சு. சில நாள் நல்லாருப்பாரு. திடீர்னு சில நாள் மனநிலை சரியில்லாம சுத்துவாரு. அம்மாவும் நானும் சேலம், பெங்களூர்னு ஆஸ்பத்திரி, ஆஸ்பத்திரியா கூட்டிகிட்டுப் போவோம். சிகிச்சைக்காக அடிக்கடி மின்சாரம் பாய்ச்சியே அப்பாவோட உடம்புல இருக்கிற ரத்தமெல்லாம் சுண்டிப்போச்சு. இனிமே அவர் உடம்புல சிகிச்சைக்குத் தேவையான அளவுக்கு ரத்தமுமில்லை. சிகிச்சை பண்றதுக்கு எங்ககிட்டையும் பணமுமில்லை. வேறு வழியில்லாம வீட்டுலயே சங்கிலியால் கட்டிவைக்க வேண்டியதா போச்சு. பெத்த அப்பாவ சங்கிலியால கட்டிவைச்சுப் பாக்குற கொடுமை எந்த மகனுக்கும் வரவே கூடாதுங்க. எங்க அம்மாதான் கூலி வேலைக்குப் போய் குடும்பத்தைப் பார்த்துக்கிட்டு இருந்தாங்க.

8 மாசத்துக்கு முன்னாடி நடந்த விபத்துல அம்மாவுக்குக் கால் எழும்பு முறிஞ்சு போச்சு. அப்போதிருந்து வீட்டுலையே அவங்க பொழப்பும் அடங்கிப்போச்சு. தம்பி சகாதேவனும் என்னைப்போலவே வளர்ச்சிக் குறைபாடுடையவன். சென்னையில் தமிழ் இலக்கியம் படிக்கிறான். ஊரடங்கு இல்லாம இருந்திருந்தா ஏதாவது நிகழ்ச்சிகள்ல கலந்துகிட்டு, என்னால் முடிஞ்சதை சம்பாதிச்சு வீட்டுக்கு அனுப்பி வைப்பேன். கொரோனா அதுக்கும் வழியில்லாம முடக்கிப் போட்டுருச்சு. எங்களைப் காப்பாத்தி கரையேத்த வேண்டிய அப்பாவை சங்கிலியில் கட்டிவைத்துக் காப்பாற்றவேண்டிய நிலைமை.

பரந்தாமன்
பரந்தாமன்

இதுநாள் வரைக்கும் எங்களைப் பாத்துக்கிட்ட அம்மாவால வேலைக்குப் போக முடியாத சூழல். இப்ப எங்க வீட்டுல ஒட்டுமொத்த வருமானமே மாற்றுத் திறனாளிக்கான மாதாந்திர உதவிப்பணம் ஆயிரம் ரூபாய்தான். போதாக்க்குறைக்குக் குடியிருக்க ஏற்ற வீடும் இல்லை. தங்கியிருப்பது காத்துக்கும் மழைக்கும் உத்திரவாதமில்லாத தகரக்கொட்டகைதான். இந்தச் சூழல் எல்லாம் கடந்து வாழ்க்கைல என் திறமையால சில விஷயங்களை சாதிக்கணும்.

என்னுடைய லட்சியம், ஆசையெல்லாம் சினிமா திரையில் சில நிமிடங்களாச்சும் தோன்றி மக்களை சிரிக்க வைக்கணும்கிறதுதான். ஆனா அதெல்லாம் தாண்டி இப்போ என் குடும்பத்தோட வறுமையைப் போக்கி அப்பா, அம்மா, தம்பியைப் பத்திரமா பாத்துக்கணும்கிறதுதான் முக்கியம். இரண்டு டிகிரி முடிச்சுருக்கேன். சமூக ஊடகங்களில் திறமையை நிரூபித்துக் காட்டிருக்கேன்.

பரந்தாமன்
பரந்தாமன்
ச. கெளதம்

இருந்தும் என்னால என் குடும்பத்தைப் பாத்துக்க முடியலையேங்கிற வருத்தம் தினம்தினம் என்னை நோகடிக்குது. என் படிப்புக்கு ஏற்ற வேலை எதாவது அரசாங்கம் கொடுத்தா என் குடும்பமே கரையேறும். குடியிருக்கும் வீட்டுக்கும், அப்பா, அம்மா வைத்திய செலவுக்கும் அரசையும், தெரிஞ்சவங்களையுமே நம்பியிருக்கேன். எல்லாமே ஒரு நாள் மாறும்... அதுக்கான சூழல் அமையும். நடிகனாவும் ஜெயிச்சு, என் குடும்பத்தையும் நல்லா பாத்துக்குவேன் "

பரந்தமானின் சொற்களில் தன் மீதான பெரும் நம்பிக்கை நிறைந்து நின்றது. மேடைகளில் பலரையும் சிரிக்க வைக்கும் பரந்தாமன்களை நிஜ வாழ்க்கையில் சிரிப்பைத் தொலைத்தவர்களாகவே வைத்திருக்கிறது காலம்.