அரசியல்
Published:Updated:

அதானி துறைமுகத்தால் பாதிப்பா?

அதானி துறைமுகம்
பிரீமியம் ஸ்டோரி
News
அதானி துறைமுகம்

பழவேற்காடு முதல் ஸ்ரீஹரிகோட்டா வரை கடல் அரிப்பு...

‘மக்களுக்காகத்தான் திட்டங்களே தவிர, திட்டங்களுக்காக மக்கள் அல்ல’ என்பார்கள். அரசுகளும் தனியாரும் இதைப் பொருட்படுத்தாததால், வெறும் ஏட்டளவில் மட்டுமே இருக்கின்றன இந்த வார்த்தைகள். இதற்கு நிகழ்கால உதாரணமாகத் திகழ்கிறது திருவள்ளூர் மாவட்டம், காட்டுப்பள்ளியில் அமையவிருக்கும் அதானியின் தனியார் துறைமுகம். இத்தனை நாள்கள் பழவேற்காடு வரை பாதிப்பு ஏற்படும் என்று கூறப்பட்டுவந்த நிலையில், தற்போது ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவிலிருக்கும் ராக்கெட் ஏவுதளத்துக்கே பாதிப்பு ஏற்படும் என்று தகவல் கிடைத்திருப்பது இந்த விவகாரத்தில் அதிர்ச்சியைக் கூட்டியிருக்கிறது.

வடசென்னையில் கடந்த 25 ஆண்டுகளில் கொண்டுவரப்பட்டுள்ள பல்வேறு தொழில் சார்ந்த கட்டுமானங்களுக்கு எதிராக மக்கள் தொடர்ச்சியாகப் போராடிக்கொண்டேதான் இருக்கிறார்கள். முதலில் வடசென்னை அனல் மின் நிலையம் அமைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 1999-ல் சென்னை காமராஜர் துறைமுகமும், 2008-ல் தனியார் பன்னாட்டு நிறுவனமான எல் அண்ட் டி-யின் கப்பல் கட்டும் தளமும் அமைக்கப்பட்டது. தற்போது, எல் அண்ட் டி நிறுவனத்துக்குச் சொந்தமான நிலத்தின் ஒரு பகுதியை துறைமுகப் பணிக்காக நாட்டின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவரான அதானி வாங்கியிருக்கிறார்.

அதானி துறைமுகத்தால் பாதிப்பா?

நிலம் மற்றும் கொசஸ்தலை ஆற்றுநீர் பரப்பு மட்டுமன்றி, கடலில் 2,000 ஏக்கர் அளவுக்குக் கற்கள், மண்ணைக் கொட்டிச் சமன்படுத்தி, மொத்தம் 6,111 ஏக்கர் பரப்பளவில் சரக்குப் போக்குவரத்துக்கான துறைமுகத்தை அதானி குழுமம் அமைக்க விருப்பதாகச் சொல்கிறார்கள். ‘துறைமுகம் அமைந்தால், கடல் அரிப்பு ஏற்படும். பழவேற்காடு ஏரிக்கும் சரணாலயத்துக்கும் ஆபத்து ஏற்படும். மீன்வளம் அழியும்’ என்று சொல்லி கடந்த இரண்டாண்டுகளாக அந்தப் பகுதி மீனவர்களும் சமூக ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்தநிலையில், இதன் பாதிப்பு ஸ்ரீஹரிகோட்டா வரை நீளும் என்று சமீபத்திய ஆய்வொன்று தெரிவிக்கிறது.

இந்தத் திட்டத்துக்கு எதிராகத் தொடர்ந்து போராடிவருகிறார் சுற்றுச்சூழல் ஆர்வலர் நித்யானந்த் ஜெயராமன். ‘‘காட்டுப்பள்ளியில் சரக்குத் துறைமுகத்தை அமைப்பதற்காக, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கைக்கு விண்ணப்பம் செய்திருந்தது அதானி குழுமம். அதன்படி, சுற்றுச்சூழல்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ததில், ‘ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் துறைமுகங்களால் 8.6 மீட்டர் அளவுக்குக் கடல் அரிப்பு ஏற்பட்டுவருகிறது. மேற்கொண்டு துறைமுகத்தை விரிவுபடுத்தினால் 16 மீட்டர் அளவுக்குக் கடல் அரிப்பு ஏற்படும்’ என்று அறிக்கை கொடுத்திருக்கிறார்கள். அதையும் மீறி, அடுத்தகட்டமாக மக்கள் கருத்துக்கேட்புக் கூட்டத்தைக் கடந்த ஜனவரி 22-ம் தேதி நடத்த மத்திய, மாநில அரசுகள் முடிவெடுத்து அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் மீனவர்கள், அரசியல் கட்சியினர் எதிர்ப்பால், தேர்தல் நேரத்தில் சிக்கல் வந்துவிடக் கூடாது என்று கொரோனாவைக் காரணம் காட்டி கூட்டத்தை ரத்துசெய்தார் திருவள்ளூர் கலெக்டர்.

அதானி துறைமுகத்தால் பாதிப்பா?

இந்தநிலையில், எங்கள் கூற்றுக்குக் கூடுதல் வலுசேர்க்கும்விதமாக மத்திய பூமி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும், சென்னையிலுள்ள `என்.சி.சி.ஆர்’ எனப்படும் கடலோர ஆராய்ச்சிக்கான தேசிய மையம் மூலம் ஒரு தகவல் கிடைத்திருக்கிறது. அதாவது, ஸ்ரீஹரிகோட்டாவில் இயங்கிவரும் இஸ்ரோ ஆய்வு மையம், சம்பந்தப்பட்ட இடங்களில் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் கடலரிப்புகள் குறித்து ஆய்வு செய்ய, என்.சி.சி.ஆர் அமைப்பை நாடியது. அவர்கள் அங்கு ஆய்வு செய்ததில், ‘சென்னையில் அமைக்கப்பட்டுவரும் துறைமுகங்களால் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்துக்கும் கடல் அரிப்புகளால் பாதிப்பு ஏற்படும்’ என்று சொல்லியிருப்பதாகச் செய்திகள் வருகின்றன. இந்த அறிக்கை இன்னும் இஸ்ரோவிடம் சமர்ப்பிக்கப்படவில்லை என்று தெரிகிறது. இருந்தபோதும், அதிலிருந்த தகவல்கள் கசிந்துவிட்டன. இனியாவது இதற்கொரு தீர்வு கிடைத்தால் நல்லது’’ என்கிறார் நித்தியானந்த் ஜெயராமன்.

பழவேற்காடு மீனவர் சங்கத் தலைவர் மகேந்திரன் ஏற்கெனவே நடந்த பெரும் கட்டுமானங்களால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து நம்மிடம் பகிர்ந்துகொண்டார். ‘‘கடலில் ஒருபக்கம் கற்களையும் மண்ணையும் கொட்டிச் சமன்படுத்தினால், வடக்குப் பகுதியில் கடல்நீர் நிலத்துக்குள் புகுந்துவிடும்; இதுதான் கடலரிப்பு எனப்படுகிறது. இதனால், நிலத்தடிநீரும் உப்புநீராக மாறிவிடும். சென்னை காமராஜர் துறைமுகம் அமைக்கும்போதும், எல் அண்ட் டி துறைமுகம் அமைக்கும்போதும் இப்படித்தான் நடந்தது. தற்போது அதானி துறைமுகத்தால் தேசிய சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ள பழவேற்காடு ஏரியும், காடுகளும், 13 மீனவ கிராமங்களும் அழியும் என்பதால்தான் தொடர்ந்து அதற்கு எதிராகப் போராடிவருகிறோம். இப்போது ஸ்ரீஹரிகோட்டா வரை கடல் அரிப்பால் பாதிப்பு ஏற்படும் என்கிறார்கள். தனியார் நிறுவனம் லாபம் பார்ப்பதற்காக நாட்டின் விண்வெளி தளத்தையே காவுகொடுக்க மத்திய அரசு முனையுமா?

நித்யானந்த் - மகேந்திரன்
நித்யானந்த் - மகேந்திரன்

ஏற்கெனவே கப்பல் கட்டும் தளத்தை அமைத்துள்ள எல் அண்ட் டி நிறுவனம், காட்டுப்பள்ளி குப்பத்தையே காலிசெய்யவைத்து அதை எடுத்துக்கொண்டது. இரண்டு கிலோமீட்டருக்கு அப்பால் அவர்களுக்கு வீடு கட்டிக்கொடுத்து, 140 பேருக்கு வேலைவாய்ப்பு கொடுத்தது. ஒன்றரை ஆண்டுகளில் பணி நிரந்தரம் செய்கிறோம் என்று சொன்னார்கள். ஆனால், இன்று வரை செய்யவில்லை. இப்படியிருக்க, அதானியை எப்படி நம்புவது? அதனால், துறைமுகத்தை இங்கு அமைக்க அனுமதிக்க மாட்டோம்’’ என்றார் ஆவேசமாக.

திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட்டிருக்கும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ‘நான் வெற்றிபெற்று எம்.எல்.ஏ ஆன பிறகு இதைத் தடுக்க நடவடிக்கை எடுப்பேன்’ என்று அறிவித்தார். லோக்கலிலுள்ள தி.மு.க மற்றும் அ.தி.மு.க-வினர் இதற்கு எதிர்ப்புக் குரல் கொடுத்தாலும், புதிதாகப் பொறுப்பேற்கவிருக்கும் அரசு மனது வைத்தால்தான் இந்தத் திட்டத்தைத் தடுக்க முடியும்.

துறைமுகத் திட்டம் குறித்து விளக்கம் கேட்க அதானி காட்டுப்பள்ளி துறைமுக அதிகாரிகளைத் தொடர்புகொண்டோம். சொல்லிவைத்தாற்போல் அத்தனை பேரும் ‘‘ஊடகங்களிடம் பேசும் அதிகாரம் எங்களுக்கு இல்லை. அகமதாபாத்திலுள்ள தலைமை அலுவலகத்தைத் தொடர்புகொள்ளுங்கள்’ என்றார்கள். அங்கு தொடர்புகொண்டபோது அந்த அலைபேசி உபயோகத்தில் இல்லை என்றே தகவல் வந்தது. அதையடுத்து, www.adani.com என்ற அவர்களின் இணையதளத்துக்குக் கேள்விகளை அனுப்பியிருக்கிறோம்.