ஆசியாவிலேயே அதிக குடிசைகளைக்கொண்ட பகுதியாக அறியப்படும் தாராவியில் 60 ஆயிரம் குடும்பங்கள் மிகவும் நெருக்கமாக வாழ்ந்துவருகின்றன. இந்தக் குடிசைகளை மேம்படுத்தும் திட்டம் நீண்ட நாள்களாகக் கிடப்பில் இருந்துவந்தது. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த பல முறை டெண்டர்விடப்பட்டு இறுதியில் கைவிடப்பட்டது. தற்போது புதிய அரசு பதவியேற்றவுடன் தாராவி குடிசை மேம்பாட்டுத் திட்டத்தைச் செயல்படுத்த கடந்த அக்டோபர் மாதம் டெண்டர் விட்டிருந்தது. இந்த முறை டெண்டரில் எட்டு நிறுவனங்கள் கலந்துகொண்டன. அவற்றில் அதானி, டிஎல்எஃப் உட்பட மூன்று நிறுவனங்கள் மட்டும் இறுதியாகத் தேர்வுசெய்யப்பட்டன.

259 ஹெக்டேர் பரப்புகொண்ட தாராவி குடிசை மேம்பாட்டுத் திட்டத்துக்கு ஆரம்பகட்ட முதலீடாக அதானி நிறுவனம் ரூ.5,069 கோடி முதலீடு செய்வதாகத் தெரிவித்திருந்தது. 20,000 கோடி கொண்ட இந்தத் திட்டத்தில் பங்கேற்ற டிஎல்எஃப் நிறுவனம் ஆரம்பகட்ட முதலீடாக 2,026 கோடி முதலீடு செய்யப்படும் என்று டெண்டரில் குறிப்பிட்டிருந்ததாதாக தாராவி குடிசை மேம்பாட்டு ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆர்.ஸ்ரீனிவாஸ் தெரிவித்திருக்கிறார்.
மாநில அரசு. இந்தத் திட்டத்தில் பங்கேற்கும் நிறுவனம் குறைந்தபட்சமாக 1,600 கோடி ஆரம்பகட்ட முதலீடாகப் போட வேண்டும் என்று நிபந்தனை விதித்திருந்தது. இது குறித்து ஸ்ரீனிவாசன் மேலும் கூறுகையில், ``தாராவி குடிசை மேம்பாட்டுத் திட்டத்தை செயல்படுத்த அதானி நிறுவனம் தேர்வுசெய்யப்பட்டிருக்கிறது. டெண்டர் விவரம் மாநில அரசுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.

மாநில அரசு இறுதி முடிவு எடுக்கும். மாநில முதல்வர் இந்த விவகாரத்தில் இரண்டு வாரங்களில் இறுதி முடிவு எடுப்பார். 2.5 சதுர கிலோமீட்டரில் இருக்கும் 60 ஆயிரம் குடிசைவாசிகள், 13 ஆயிரம் கடைகள், வணிக நிறுவனங்கள் இந்தத் திட்டத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள. அதானி நிறுவனம் இலவச அடுக்கு மாடிக் குடியிருப்புகளைக் கட்டிக்கொடுக்கும். குடிசைவாசிகளுக்கு வீடு கட்டிக்கொடுத்தது போக எஞ்சி இருக்கும் நிலத்தில் அதானி நிறுவனம் வீடுகள் மற்றும் கடைகளைக் கட்டி விற்பனை செய்துகொள்ளும். அதானி நிறுவனம் இந்தத் திட்டத்துக்காக மாநில அரசுடன் இணைந்து கூட்டு நிறுவனம் ஒன்றை உருவாக்கும். அதில் மாநில அரசுக்கு 20 சதவிகிதப் பங்கும், அதானி நிறுவனத்துக்கு 80 சதவிகிதப் பங்கும் இருக்கும். பணி ஆர்டர் கிடைக்கப்பட்டதிலிருந்து ஏழு ஆண்டுகளுக்குள் பணிகளை முடித்துக்கொடுக்கும்” என்று தெரிவித்தார்.
ஒவ்வொரு குடிசைவாசிக்கும் 405 சதுர அடியில் வீடு கட்டிக்கொடுக்கப்படும். அதானி நிறுவனம் இலவச வீடுகள் பெறத் தகுதியானவர்கள் தொடர்பாகப் புதிய கணக்கெடுப்பு நடத்தும். இலவச வீடு பெறத் தகுதியில்லாதவர்கள் நிலம், கட்டுமான செலவைக் கொடுத்து வீடு பெற்றுக்கொள்ள வேண்டும். முதற்கட்டமாக குடிசைவாசிகளுக்கு வீடு கட்டுவதற்காக ரயில்வே நிர்வாகத்திடம் கணிசமான நிலம் விலைக்கு வாங்கப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டத்துக்குத் தேர்வு செய்யப்பட்டிருக்கும் அதானி நிறுவனத்துக்கு மாநில அரசு பல்வேறு நிதிச் சலுகைகளை அறிவித்திருக்கிறது.