அலசல்
அரசியல்
Published:Updated:

‘ஆதி திராவிடர்’ பெயர் மாற்றம்... அரசுக்கு வலுக்கும் கோரிக்கை!

மாணவர் விடுதி
பிரீமியம் ஸ்டோரி
News
மாணவர் விடுதி

மாணவர்கள் மட்டுமல்ல... ஆசிரியர்களும் பாதிக்கப்படுகிறார்கள். நான் ஆதி திராவிட நலப் பள்ளியில்தான் ஆசிரியராக இருக்கிறேன்

பாடப்புத்தகத்தில் தலைவர்களின் சாதிப் பெயர் நீக்கத்தைத் தொடர்ந்து தற்போது ஆதிதிராவிட நலப் பள்ளிகள், விடுதிகளின் பெயர்களை மாற்ற வேண்டும் என்கிற கோரிக்கை தீவிரமடைந்திருக்கிறது.

“ஆதி திராவிட நலத்துறையின் கீழ் தமிழகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளும் மாணவர் விடுதிகளும் இயங்கிவருகின்றன. அவற்றில் இருக்கும் ஆதி திராவிடர் என்கிற முன்னொட்டு, அங்கு படிக்கும் மாணவர்களுக்கு உளவியல்ரீதியாகத் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்துவதாக இருக்கிறது. எனவே, பள்ளிகள் மற்றும் விடுதிகளின் பெயர்களிலுள்ள சாதி அடையாளத்தை நீக்கி, அவற்றை `சமூக நலப் பள்ளிகள்’ என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும்’’ என்கிற கோரிக்கையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் முதல்வரிடம் வைத்திருக்கிறார்.

திருமாவளவன்
திருமாவளவன்

இந்தக் கோரிக்கைக்கான அவசியம் குறித்து பேசும் எழுத்தாளர் இமயம், “நான் ஆதி திராவிட நல விடுதியில் தங்கி, அந்தப் பள்ளியிலேயே படித்தவன்.‘ஆதி திராவிட’ என்கிற பெயரால் அந்தப் பள்ளிகளில், விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கு உளவியல்ரீதியாக சிக்கல்கள் ஏற்படுகின்றன. அங்கு படிக்கும் மாணவர்களை கீழ்த்தரமாக நடத்துவதற்கு அந்தப் பெயரும் ஒரு காரணம். அதனால், ஆதி திராவிட விடுதிகளில் தங்குவதற்கு விண்ணப்பிக்கவே மாணவர்கள் தயங்குகிறார்கள்.

இமயம்
இமயம்

மாணவர்கள் மட்டுமல்ல... ஆசிரியர்களும் பாதிக்கப்படுகிறார்கள். நான் ஆதி திராவிட நலப் பள்ளியில்தான் ஆசிரியராக இருக்கிறேன். அரசுப் பள்ளிகளுக்கான மீட்டிங்கில் மற்ற பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களைக் குறிப்பிடும்போது, ‘மேடம்பாக்கம் அரசுப் பள்ளி ஹெச்.எம்.’, ‘அரும்பாக்கம் அரசுப் பள்ளி ஹெச்.எம்’ என்று அழைப்பார்கள். எங்களை மட்டும் ‘ஆதி திராவிட பள்ளி ஹெச்.எம்’ என்பார்கள். எங்களை இப்படி அழைப்பதால் தேவையற்ற மனத் தொந்தரவுகள் ஏற்படுகின்றன. பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, சீர்மரபினர் நலத்துறைகளைப்போல, ஆதி திராவிட நலத்துறை பார்க்கப்படுவதில்லை. அதனால், ஆதி திராவிட நலப் பள்ளிகளை `சமூக நலப் பள்ளிகள்’ என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும்.

தனியார் பள்ளிகள், கல்லூரிகளில் இருக்கிற சாதிப் பெயர்களை என்ன செய்வது எனச் சிலர் கேள்வி எழுப்புவார்கள். முதலில் இதை அரசுப் பள்ளிகளிலிருந்து தொடங்கலாம். பெயரை மாற்றினால் இட ஒதுக்கீடு போன்ற உரிமைகள் போய்விடும் என்கிற அச்சமும் தேவையில்லை. அதேசமயம், பெயரை நீக்கிவிட்டால் சமூகமும் மாறிவிடுமா என்றால் நிச்சயமாக இல்லைதான். ஆனால், மாற்றத்துக்கான தொடக்கமாக இது இருக்கட்டும்’’ என்றார்.

‘ஆதி திராவிடர்’ பெயர் மாற்றம்... அரசுக்கு வலுக்கும் கோரிக்கை!

ஒருபுறம் பெயரை மாற்ற வேண்டும் என்கிற கோரிக்கைகள் எழுந்தாலும், “அது சாதிப் பெயரல்ல, அரசியல் அடையாளப் பெயர். அதில் தாழ்வோ, இழிவோ இல்லை. அதனால் மாற்றத் தேவையில்லை” என்கிற குரல்களும் ஒலிக்கின்றன. விவாதம் நல்லதுதான்!