மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான அறிவிப்பு 2015ம் ஆண்டு அறிவிக்கப்பட்டு அதன் அடிக்கல் நாட்டுவிழா தோப்பூரில் கடந்த 2019ம் ஆண்டு பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த அடிக்கல் நாட்டு விழா நடந்து நான்கு ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. இருப்பினும், இதுவரை அதன் கட்டுமானப்பணிகள் நிறைவடையாமல் அதற்காக ஒதுக்கப்பட்ட நிலம் வெறுச்சோடிக் காணப்படுவது அனைவரும் அறிந்த செய்திதான். இதனால் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கான எம்பிபிஎஸ் வகுப்புகள் மதுரையிலிருந்து 100கிமீ தொலைவில் அமைந்துள்ள `ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி'யின் ஒருபகுதியில் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு மருத்துவப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது.

ஏற்கனவே 50 மாணவர்கள் படித்து வரும் நிலையில் புதிதாக சேர்ந்தவர்களையும் சேர்த்து மொத்தம் 100 மாணவர்கள் என தற்போது எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இருப்பினும், இதுவரை எய்ம்ஸ் மருத்துவமனையைக் காணும் வாய்ப்பு மாணவர்களுக்குக் கிடைக்கவில்லை. இதனால் நவீன வகுப்பறைகள், ஆய்வகங்கள் எனப் பல்வேறு வசதிகளுடன் அமைவதாகச் சொன்ன எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியின் நவீன வசதிகளைக் காணமலே அவர்களின் மருத்துவப் படிப்பு நிறைவடையும் சோகம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் 'மதுரை எய்ம்ஸ் கல்லூரி மாணவர்கள், தங்கள் கல்லூரியைக் கண்ணால் கூடக் காணமல் படித்து முடித்துச் செல்வார்கள். அவர்களின் சான்றிதழ்களில் மட்டுமே 'எய்ம்ஸ் கல்லூரியின் பெயர் இருக்கும்' எனப் பலர் விமர்சித்து வருகின்றன. குறிப்பாக, மதுரை எம்.பி சு.வெங்கடேசன் இதுபற்றி தொடர்ந்து பேசி நூதனப் போரட்டங்களையும் செய்து வருகிறார்.

இதுபற்றிக் கூறிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரான மா. சுப்பிரமணியன், "மாணவர்களுக்கான எய்ம்ஸ் மருத்துவப் படிபிற்கான வகுப்புகளை நடத்துவதற்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடமளித்திருக்கிறோம். எய்ம்ஸ் வளாகத்தை நிறுவுவதை உறுதி செய்வதற்கான வழிகளில் இதுவும் ஒன்று. பிற மாநிலங்களின் எய்ம்ஸ் கல்லூரிகள் மத்திய அரசின் நிதியைப் பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளதால் அவை நிறைவடைந்துள்ளது. ஆனால் தமிநாட்டில் 'JICA' நிதியிலிருந்து எய்ம்ஸ் கட்டத்திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் இதன் பணிகள் தாமதமடைந்துள்ளன" என விளக்கமளித்துள்ளார்.
எதுவாயினும் விரைவில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானப்பணிகள் நிறைவடைந்து மாணவர்களுக்கு பயனளிக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.