Published:Updated:

நிதி கேட்டு மிரட்டுகின்றனவா அ.தி.மு.க, தி.மு.க கட்சிகள்?

ராணிப்பேட்டை
பிரீமியம் ஸ்டோரி
News
ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை தொழிலதிபர்கள் குமுறல்

ஊரடங்கால் முடங்கியிருந்த தொழிற்சாலைகள் இரண்டு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் இப்போதுதான் இயங்கத் தொடங்கியிருக்கின்றன.

இந்தச் சூழலில் மூலப்பொருள்களுக்கான விலை திடீரென்று உயர்ந்திருப்பது, ஊரடங்கில் ஏற்பட்ட வருவாய் இழப்பு போன்ற காரணங்களால் பல்வேறு குறு, சிறு தொழில் நிறுவனங்களும் தடுமாற்றத்தைச் சந்தித்துள்ளன. இப்படியிருக்க, தொழிற்சாலைகளிடம் நிவாரண நிதி கேட்டு திராவிடக் கட்சிகள் அழுத்தம் கொடுப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தொழிற்பேட்டைப் பகுதியான ராணிப்பேட்டையில் இந்தப் பிரச்னை உச்சத்தில் இருப்பதாகப் புலம்புகின்றனர் தொழிலக உரிமையாளர்கள்.

காந்தி, சு.ரவி
காந்தி, சு.ரவி

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

‘‘தி.மு.க-வினராவது கொடுப்பதை வாங்கிக் கொண்டு சென்றுவிடுகிறார்கள். இல்லையென்று சொன்னாலும் பெரிதாகப் பிரச்னை செய்வதில்லை. ஆளுங்கட்சியினரான அ.தி.மு.க-வினரின் அடாவடிதான் அதிகமாக உள்ளது. காவல் துறையினர் மூலமாகவே மிரட்டி, லாரி நிறைய நிவாரணப் பொருள்களைக் கேட்கின்றனர்’’ என்றெல்லாம் குற்றச்சாட்டுகள் குவிகின்றன.

பெயர் வெளியிட வேண்டாம் என்ற நிபந்தனையுடன் நம்மிடம் பேசிய ராணிப்பேட்டை ‘சிப்காட்’ பகுதியைச் சேர்ந்த தொழிற்துறையைச் சார்ந்தவர்கள், ‘‘தேர்தல் சமயங்களிலும் அதற்குப் பிறகும் கட்சிப் பெயரைச் சொல்லி அடிக்கடி வந்து நிதி கேட்பார்கள். நாங்களும், ‘அரசியல் கட்சிகளைப் பகைத்துக் கொள்ளக் கூடாது’ என்பதற்காகப் பணத்தைக் கொடுத்துவிடுகிறோம். ஊரடங்கு காலத்தில் எந்தவொரு தொழிற்சாலையும் இயங்கவில்லை. ஆனாலும், மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலை ஏற்றுப் பல தொழிற்சாலைகள் முகக்கசவம், கையுறை, சானிட்டைசர் வழங்கியதுடன், நிவாரணப் பொருள்களையும் வழங்கின. அப்படியிருந்தும், கட்சிக்காரர்கள் மனச்சாட்சி இல்லாமல் லட்சக்கணக்கான ரூபாயைக் கேட்டுத் தொல்லை கொடுக்கிறார்கள்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

பணமாகக் கொடுக்க முடியவில்லை என்றால், ஒரு லோடு அரிசி மூட்டையும் மளிகைப் பொருள் களையும் கொடுக்கச் சொல்லி வற்புறுத்துகிறார்கள். தரவில்லை என்றால் எதிர்காலத்தில் பிரச்னை வரும் என்று மிரட்டுகிறார்கள். தொழிலாளர்களுக்கே சம்பளம் வழங்க முடியாத சூழலில் நாங்கள் இருக்கிறோம். டன் கணக்கில் அரிசி, மளிகைப்பொருள்களுக்கு எங்கே போவோம்?

ஆளுங்கட்சியினர் பெரும்பாலும் அமைச்சர் கே.சி.வீரமணி பெயரைப் பயன்படுத்தி போலீஸை அனுப்புகிறார்கள். மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சியினர் நினைப்பது தவறு இல்லை. அதை அவர்கள் பணத்தில் செய்யட்டும். அதைவிடுத்து, எங்கள் பணத்தைப் பறித்து நிவாரணம் கொடுத்து விளம்பரம் தேடுவது வெட்கமாக இல்லையா?’’ என்றனர் கொதிப்புடன்.

கே.சி.வீரமணியுடன் ஷியாம்குமார்
கே.சி.வீரமணியுடன் ஷியாம்குமார்

புகார் குறித்து ராணிப்பேட்டைத் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ-வும் மாவட்டச் செயலாளருமான காந்தியிடம் கேட்டோம். ‘‘ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் தன்னார்வலர்கள் மற்றும் காவல்துறையினருக்கு தினமும் உணவு வழங்கி வருகிறோம். துப்புரவுப் பணியாளர்களுக்கும் ஏழைக் குடும்பங்களுக்கும் நிவாரணப் பொருள் களைக் கொடுத்து உதவிசெய்கிறோம். தி.மு.க-வினர் எந்தவொரு நிறுவனத்தையும் மிரட்டிப் பணம் கேட்பதில்லை. ஆளுங்கட்சியினர்தான் போலீஸை வைத்து நிறுவனங்களிடம் பணத்தை வசூல் செய்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன்’’ என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அரக்கோணம் தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ-வும் மாவட்டச் செயலாளருமான சு.ரவி, ‘‘அ.தி.மு.க-வின் பெயரைப் பயன்படுத்தி நாங்கள் யாரும் நிதியைப் பெறவில்லை’’ என்றார்.

ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை

அமைச்சர் வீரமணியைத் தொடர்புகொண்டபோது அவரின் உதவியாளர் ஷியாம்குமார் பேசினார். ‘‘எதற்கெடுத்தாலும் அமைச்சர் வீரமணியின் பெயரைப் பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது. பொத்தம்பொதுவாக தி.மு.கழக எம்.எல்.ஏ-வான காந்தி ஆளுங்கட்சியினர் மீது குறை சொல்லக் கூடாது. நிதி கேட்பவர்கள் யார் என்று என்னிடம் தெரிவித்தால், நேரடியாக அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டுசென்று நடவடிக்கை எடுக்கச் சொல்வேன். அதிலும், அமைச்சர் வீரமணி வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறையைக் கவனிக்கிறார். அந்தத் துறையிலிருந்து யாராவது இப்படியான புகார் சொன்னால்கூட, அதில் முகாந்திரம் இருக்கிறது. சம்பந்தமே இல்லாமல் தொழிற்சாலைகளிலிருந்து இப்படியொரு புகாரைச் சொல்வதை, அமைச்சரின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் முயற்சியாகவே பார்க்கிறோம். ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து அமைச்சர் தூங்காமல் இரவும் பகலும், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் முழுவதும் ஏழை மக்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கிவருகிறார். அதெல்லாம் அவருடைய சொந்தப் பணம். எங்களைப் பாராட்ட வேண்டாம். குறை சொல்லாமல் இருந்தால் போதும்’’ என்றார்.

ராணிப்பேட்டைக் காவல்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘தொழிற்சாலைகளிடம் நிதி வாங்கித்தருவது எங்களுடைய வேலையில்லை. அதுமாதிரியான வேலைகளுக்கு ஆளுங்கட்சியாக இருந்தாலும் உதவிசெய்ய மாட்டோம். நிதி கேட்டு மிரட்டுவது தொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தரப்பில் புகார் கொடுத்தால், காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கும்’’ என்றனர்.

கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பதை அரசியல் கட்சிகள் எப்போதுதான் கைவிடப்போகின்றனவோ?