ஜெயலலிதா மறைந்த தினமே சர்ச்சையாகிக்கொண்டிருக்கும் சூழலில், அவரது நினைவு நாளின்போது, 'அம்மா மறைந்த நன்னாளில்' என எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவினர் உறுதிமொழி ஏற்றது கூடுதல் சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது.
மேலும், 'அதனாலதானே இ.பி.எஸ்ஸால் சி.எம். ஆக முடிஞ்சது. அப்போ, அவருக்கு அது உண்மையாகவே நன்னாள் தானே?' என்கிற ரேஞ்சுக்கு மீம்ஸ்களாக வைரலாகிக்கொண்டிருக்கும் சூழலில், இந்த சர்ச்சை குறித்து அதிமுகவின் பா. வளர்மதியிடம் கேட்டோம்,
"ஒரு குடும்பத்தில் வயதானவர்கள் இறந்துவிட்டால், குழந்தைகளை அழைத்து 'நீ தாத்தா மாதிரி சாதிக்கணும், அப்பா மாதிரி வரணும்' என்றெல்லாம் சொல்லி உற்சாகப்படுத்துவார்கள். அதனை, தட்டிக்கொடுத்துதானே சொல்வார்கள்? அழுதுகொண்டா சொல்வார்கள். அப்படித்தான் இதுவும். திமுக ஆட்சி ஒழிந்து அதிமுக ஆட்சி மலரவேண்டும். அந்த நல்ல நாளை நாம் எதிர்பார்ப்போம். அந்த நல்ல நாளுக்காக அம்மாவின் சிந்தனைகளை எடுத்துக்கொள்வோம் என்பதற்காக அப்படி சொன்னது. அதனை எல்லோரும் நேற்றிலிருந்து, 'நன்னாள்... நன்னாள்' என்று பிடித்து தொங்கிக்கொண்டிருக்கிறார்கள். நாங்கள் வேண்டுமென்றே 'நன்னாளில்' என்று சொல்லவில்லை. எதிர்பாராமல் வந்துவிட்டது. இது ஒரு குற்றமா? குற்றமான செய்தியா? இதனைப் போய் குற்றமான செய்தியாக ஊடகங்களும் சமூக வலைதளங்களும் தான் பெரிதுபடுத்துகின்றன.
அம்மா இறந்ததை யாராவது நல்லநாள் என்பார்களா? சாதாரண மக்கள்கூட சொல்லமாட்டார்கள். அம்மாவை நாங்கள் கடவுள் மாதிரி நினைக்கிறோம். அவரின் நினைவு நாளை கடவுளின் ஆசி கிடைக்கக்கூடிய நாளாகத்தான் பார்க்கிறோம். எதிர்பாராவிதமாக நாங்கள் சொல்லியிருந்தாலும் ஆசி கிடைக்கும் நாளை நன்னாள் என்றதில் தவறொன்றும் இல்லை. அதேபோல, இறந்தவர் நினைவுநாள் என்றால் சாப்பாடு போடுகிறார்கள் இல்லையா? அப்படித்தான், அதிமுகவினர் லட்டு வழங்கியதையும் எடுத்துக்கொள்ளவேண்டும்" என்பவரிடம் "அதிமுக 100 நாளில் காணாமல் போய்விடும் என்று ஜெ.தீபா கூறியிருப்பதை எப்படி பார்க்கிறீர்கள்?" என்றோம்,

"அதிமுகவை வளர்த்த, அதிமுகவிற்காகவே வாழ்ந்த அம்மா, இந்தக் கட்சி 100 ஆண்டுகள் இருக்கும்னு சொன்னாங்க. அத்தைன்னு உரிமை கொண்டாடுற, தீபாவோட அத்தை சொல்லிருக்காங்க. ஆனால், தீபா 100 நாள்கூட இருக்காதுன்னு சொன்னா எப்படி? அப்போ, அம்மா சொன்னது பொய்யா? இல்ல இவங்க சொல்றது பொய்யா? இப்படியெல்லாம் பேசலாமா தீபா?" என்று கேள்வியெழுப்புகிறார்.