அலசல்
Published:Updated:

“மக கல்யாணப் பந்தல்லயே மகனுக்குக் காரியம் செய்ய வெச்சுட்டாங்க!” - வைத்தி சம்பந்திமீது பகீர் புகார்

கோவிந்தராஜன் குடும்பம்
பிரீமியம் ஸ்டோரி
News
கோவிந்தராஜன் குடும்பம்

‘இந்த கவர்மென்ட்டே எங்களோடது... உன்னால எதுவும் செய்ய முடியாது’னு போலீஸ் முன்னாடியே என் மகனையும் அடிச்சாங்க.

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே நிலப்பிரச்னை தொடர்பாக இளைஞர் ஒருவரை நடுத்தெருவில் ஜட்டியுடன் நிற்கவைத்து, கொடூரத் தாக்குதல் நடத்தியுள்ளனர் அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளரான வைத்திலிங்கத்தின் சம்பந்தி குடும்பத்தினர். இதில் அவமானம் தாங்காமல் அந்த இளைஞர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டார். இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள்மீது போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று இளைஞரின் தந்தை கதறியழுது, கிளப்பியிருக்கும் குற்றச்சாட்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஒரத்தநாடு அருகே புதூர் வடக்குத் தெருவில் வசிப்பவர் டாக்டர் கார்த்திகேயன். இவர் வைத்திலிங்கத்தின் மகளைத் திருமணம் செய்திருக்கிறார். இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் கோவிந்தராஜன். இவரின் மகன் வினோத்குமார். தங்களுக்குச் சொந்தமான இடத்தை கார்த்திகேயன், அவரின் தந்தை குணசேகரன் ஆகியோர் அபகரித்துக்கொண்டதாக கோவிந்தராஜன் தரப்பு குற்றம்சாட்டுகிறது. இது தொடர்பாக இருதரப்பினருக்கும் அடிக்கடி பிரச்னை நடந்துவந்த நிலையில்தான், வினோத்குமாரை குணசேகரன் தரப்பினர் தாக்கியதில், அவர் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்துகொண்டதாக புகார் எழுந்திருக்கிறது.

கோவிந்தராஜனி
கோவிந்தராஜனி

இது குறித்து கோவிந்தராஜனிடம் பேசினோம். மகன் இறந்த துக்கத்திலிருந்து மீளாதவராக தழுதழுத்தபடியே பிரச்னையை விவரித்தார்... “எங்க வீட்டுக்குப் பக்கத்துல எங்களுக்கு 21 சென்ட் நிலம் இருக்குது. அதுக்கான பத்திரம் உட்பட எல்லா ரெக்கார்டும் எங்ககிட்ட இருக்கு. அதுல ஏழு சென்ட் இடத்தை குணசேகரனும் அவரின் மகன் கார்த்திகேயனும் அபகரிச்சுட்டாங்க. இது தொடர்பா அஞ்சு வருஷமா எங்களுக்குள்ள பிரச்னை நடக்குது.

ஒரு வருஷத்துக்கு முன்னாடி எங்க இடத்தை மீட்டுத் தரணும்னு வினோத்குமார் ஒரத்தநாடு போலீஸ் ஸ்டேஷன்ல புகார் கொடுத்தான். அந்தக் கோபத்துல கார்த்திகேயன் அடியாட்களோட வந்து கடைவீதியிலிருந்த வினோத்குமாரை கடுமையா தாக்கி, கத்தியால கை உட்பட பல இடங்கள்ல கிழிச்சுட்டாங்க. போலீஸ் அவங்க மேல எந்த நடவடிக்கையும் எடுக்கலை. அதன் பிறகு ஒருமுறை என் மனைவியை நெஞ்சுலயே அடிச்சிட்டாங்க. இந்தப் பிரச்னையை இப்படியே விட்டா நிம்மதியா இருக்க முடியாதுன்னு குணசேகரன்கிட்ட போய், ‘இடத்தை நீங்களே வெச்சுக்குங்க... அதுக்கான பணத்தைக் கொடுங்க’னு கேட்டேன். அதுக்கு, ‘நீ இருக்குறதே உன்னோட இடமில்லை போடா’ன்னு சொல்லி என்னை அவமானப்படுத்தினார்.

பிறகு நான் வைத்திலிங்கத்தைப் பார்த்து, ‘உங்க சம்பந்தியும் மருமகனும் உங்க பேரைச் சொல்லித்தான் இப்படி செய்யறாங்க. பிரச்னையை நீங்கதான் முடிச்சுவெக்கணும்’னு கேட்டேன். அவரோ, ‘உங்க ஊர்ப் பிரச்னையை உங்க ஊர்லயே முடிச்சுக்கோங்க... நான் தலையிட முடியாது’ன்னுட்டார். வைத்திலிங்கத்தோட மகன் பிரபுகிட்டயும் பேசினேன். அவரும் கண்டுக்கலை. இடைப்பட்ட காலத்துல குணசேகரன் தரப்பினர் அந்த இடத்தை முறைகேடாக அவங்க பேருக்கு மாத்திக்கிட்டாங்க.

வினோத்குமார்
வினோத்குமார்

இந்தநிலையில்தான், என் மகள் வினோதினிக்கு கடந்த ஜனவரி 31-ம் தேதி கல்யாணம் நடந்துச்சு. பிப்ரவரி 5-ம் தேதி பொண்ணு மாப்பிள்ளைக்கு எங்க வீட்ல விருந்துவெச்சோம். அது முடிஞ்சதும் நாங்க குடும்பத்தோட பொண்ணு மாப்பிள்ளையை அவங்க வீட்டுக்கு வழியனுப்ப போயிட்டோம். என் மகன் வினோத் மட்டும் வீட்டுல இருந்தான். வழக்கமா அவன் எங்க வீட்டு வாசப்படிக்கு வர்ற குணசேகரன் வீட்டு நாய்க்கு பிஸ்கட் போடுவான். அப்படிதான் அன்னிக்கும் பிஸ்கட் போட்டிருக்கான். அப்ப குணசேகரன், ‘ஒரு நாய் போடுற பிஸ்கட்டை இன்னொரு நாய் சாப்பிடுது’னு பேசியிருக்காரு. கோபமான என் மகன் எங்க இடத்துல இருந்த பிரச்னைக்குரிய அந்தப் பாதையை அடைச்சுட்டான். அப்ப குணசேகரன் மரக்கட்டையால என் மகனை தாக்கியிருக்காரு. பதிலுக்கு வினோத்தும் அவரைத் தள்ளிவிட்டிருக்கான். இதுதான் நடந்துச்சு. அதுக்குள்ள நாங்களும் வந்துட்டோம். அதுக்கு அப்புறம்தான் அந்தக் கொடுமை நடந்துச்சு...” என்றவர் தேம்பியழ ஆரம்பித்துவிட்டார். அவரைச் சமாதானப்படுத்தி, பேசவைத்தோம்.

“கொஞ்ச நேரத்துல கார்த்திகேயன், டாக்டர் மணி, ஏட்டு என்கிற ஆனந்த், சங்கர் உள்ளிட்ட பெரிய கும்பலே என் வீட்டுக்குள்ள திபுதிபுன்னு நுழைஞ்சு என் மகனை தெருவுல இழுத்துப் போட்டு அடிச்சாங்க. அவன் சட்டை, லுங்கியை எல்லாம் உருவிட்டு, நடுத்தெருவுல ஜட்டியோட நிக்கவெச்சு தாக்கினாங்க. அவன் கூனிக்குறுகிப் போயிட்டான்... ஒருவழியா நாங்க தடுத்து, அவனை வீட்டுக்குள்ள அழைச்சுட்டுப் போயிட்டோம். அப்பவும் அவங்க அடங்கலை... ‘அவங்க குடும்பத்தையே வீட்டுள்ள தீவெச்சு எரிங்கடா’னு கத்துனாங்க. அதோட விட்டுடலைங்க... கொஞ்ச நேரத்துல வீட்டுக்கு போலீஸ் வந்துருச்சு. ‘குணசேகரனைத் தாக்கினதா புகார் வந்திருக்கு’னு சொல்லி வினோத்தை ஸ்டேஷனுக்குக் கூப்பிட்டாங்க. போலீஸ்கிட்ட நான் பேசிக்கிட்டிருக்கும்போதே கார்த்திகேயன் என் கண்ணுல ஓங்கிக் குத்தினான். ‘இந்த கவர்மென்ட்டே எங்களோடது... உன்னால எதுவும் செய்ய முடியாது’னு போலீஸ் முன்னாடியே என் மகனையும் அடிச்சாங்க.

வைத்திலிங்கம் - குணசேகரன் - கார்த்திகேயன்
வைத்திலிங்கம் - குணசேகரன் - கார்த்திகேயன்

நொந்துபோன நான்தான், ‘சார்... என் பையன் மனநிலை சரியில்லாம இருக்கான். காலையில ஸ்டேஷனுக்கு அழைச்சிட்டு வர்றேன்’னு சொல்லி போலீஸை அனுப்பினேன். ‘அப்பா... நாம என்னப்பா தப்பு பண்ணினோம்? நம்ம பக்கம் நியாயம் இருந்தும் யாரும் நமக்காக வரலையே... போலீஸ் ஸ்டேஷன்லயும் என்னை அடிப்பாங்களா... அரசியல் செல்வாக்கு இருந்தா என்ன வேணும்னாலும் செய்வாங்களா?’னு கேட்டு, கதறி அழுதான். அவனைச் சமாதானப்படுத்தி, படுக்கவெச்சுட்டு எல்லாரும் தூங்கிட்டோம். விடியக்காலையில எழுந்து பார்த்தா என் மகன் தூக்குல தொங்குறான். படுபாவிங்க... என் மக கல்யாணத்துக்குப் போட்ட பந்தலிலேயே என் மகனுக்குக் காரியம் செய்ய வெச்சுட்டாங்க.

தாலிக்கொடியில மஞ்சக்கறை போவாத என் பொண்ணு, ‘அண்ணா... `அடிக்கடி வந்து பாக்குறேன், கவலைப்படாம போம்மா’ன்னு சொன்னியே, இப்படி அநியாயமா போயிட்டீயே’னு அண்ணன் உடம்பைக் கட்டிக்கிட்டு அழுவுறா. என் மனைவி அங்கேயே மூர்ச்சையாகி விழுந்துட்டா. எங்க குடும்பமே நிலைகுலைஞ்சு போயிடுச்சு. அதிகாரத் திமிருல அநியாயமா ஒரு உசுரைக் கொன்னுட்டாங்க... போலீஸ்ல புகார் கொடுத்தேன். ஆனா, போலீஸ் உயரதிகாரி ஒருத்தரு ‘அவங்ககிட்ட அதிகாரம் இருக்கு, தன்னோட மருமகனுக்கு பிரச்னைன்னா வைத்திலிங்கம் சும்மாவிடுவாரா? நீங்க மோதி ஜெயிக்க முடியாது’னு கட்டப் பஞ்சாயத்து பேசினாரு” என்று கதறி அழுதவர், கண்களைத் துடைத்துக்கொண்டு சத்தமாகப் பேச ஆரம்பித்தார்...

“என் புகார்ல கண்துடைப்புக்காக சங்கர் என்கிறவனை மட்டும் கைதுசெஞ்சுட்டு உடனே விட்டுட்டாங்க. இனிமே இந்தப் பிரச்னையை நான் விடுறதா இல்லைங்க. என் குடும்பக் குலக்கொழுந்தே போயிடுச்சு... இனி என்ன ஆனாலும் சரி. என் மகனைத் தற்கொலை செய்யத் தூண்டியிருக்காங்க. இதுவும் கொலைக்கு சமம்தான். சம்பந்தப்பட்டவங்க மேல சட்டப்படி நடவடிக்கை எடுத்தே ஆகணும்” என்றார் ஆவேசமாக!

சர்ச்சைக்குரிய இடம்
சர்ச்சைக்குரிய இடம்

இது குறித்து ஒரத்தநாடு டி.எஸ்.பி பழனியிடம் பேசினோம். “குணசேகரன் தரப்புக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை என்று போலீஸ் விசாரணையில் தெரிந்திருக்கிறது. ஆனாலும், வினோத் மரணத்தை சந்தேக மரணமாக வழக்கு பதிவுசெய்து விசாரித்துவருகிறோம்” என்றார் சம்பிரதாயமாக!

குற்றம்சாட்டப்படும் கார்த்திகேயனிடம் பேசினோம். “மொத்தம் 28 சென்ட் இடத்துல எங்களுக்கு ஏழு சென்ட், கோவிந்தராஜன் தரப்புக்கு ஏழு சென்ட், இன்னொருத்தர் பேருல 14 சென்ட் இடம் இருக்குது. அரசியல்ல செல்வாக்குள்ள வைத்திலிங்கம் பொண்ணை நான் திருமணம் செஞ்சிருக்கறதால எங்ககிட்ட மிரட்டிப் பணம் பறிக்குற நோக்கத்துல அடிக்கடி பிரச்னை செஞ்சாங்க. வினோத் குடிப்பழக்கம் உடையவர். ஒருமுறை அவராவே கையைக் கிழிச்சுக்கிட்டு, நாங்க அடிச்சதா புகார் கொடுத்தார். சரி... பிரச்னையை முடிச்சிக்கலாம்னு அந்த இடத்துக்குப் பணம் கொடுக்கப் பேசினாலும் நடப்பு விலையைவிட அதிகமா பணம் கேட்குறாங்க. சம்பவத்தன்னிக்கு என் அப்பாவை அடிச்சிருக்காங்க. நான் போலீஸுக்கு போன் செஞ்சு, நியாயமா நடவடிக்கை எடுங்கன்னு சொல்லிட்டு ஊருக்குப் போயிட்டேன். ஆனா, நாங்க எல்லாரும் சேர்ந்து வினோத்தை அடிச்சதா புகார் கொடுத்திருக்காங்க. எங்களுக்கும் இந்தச் சம்பவத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை” என்றார்.

இது குறித்து விளக்கம் கேட்க வைத்திலிங்கத்தைத் தொடர்பு கொண்டோம். அவரின் உதவியாளர்தான் பேசினார். அவரிடம் விஷயத்தைச் சொன்னபோது, மீண்டும் அழைப்பதாகத் தெரிவித்தார். அதன் பிறகு பலமுறை வைத்திலிங்கத்தை தொடர்புகொண்டும் நமது அழைப்பை அவர் ஏற்கவில்லை.