கோவை சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் அனுராதா. தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இன்று காலை பணிக்குச் செல்வதற்காக, அனுராதா தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, போக்குவரத்துக்கு இடையூராக அ.தி.மு.க கட்சியின் கொடி கம்பம் இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அனுராதா அந்த வழியே செல்லும்போது கம்பம் சரிந்து விழுந்துள்ளது. அதே நேரத்தில், அங்கு ஓர் லாரியும் வந்துள்ளது. இதையடுத்து அனுராதா மீது லாரி ஏறி விபத்து ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அனுராதாவின் உறவினர்கள், ``அனுராதா அங்கு செல்லும்போது, அ.தி.மு.க கட்சி கம்பம் விழுந்துள்ளது. அதைத் தவிர்ப்பதற்காக அவர் பிரேக் போட்டுள்ளார். அப்போது வண்டி ஸ்லிப்பாகி கீழே விழுந்தவுடன், அந்த வழியே வந்த லாரி ராதாவின் கால் மீது ஏறிவிட்டது. தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்றுவருகிறார்.

ராதாவின் ஒரு காலில் எலும்பு வெளியே வந்துவிட்டது. மற்றொரு காலில் நரம்புகள் கட்டாகிவிட்டன. ஆபரேஷன் நடந்து கொண்டிருக்கிறது. விபத்துக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றனர்.
அந்தப் பகுதியில் உள்ள அ.தி.மு.க பிரமுகர் யோகா மாஸ்டர் சுவாமி போமிவர்தன் – தாமரை இல்ல திருமணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதற்காக, அவிநாசி சாலையின் ஒரு பகுதி முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு அ.தி.மு.க கொடிக்கம்பங்களும் வைக்கப்பட்டுள்ளன.

ஏற்கெனவே கோவை ரகு, ஊட்டி பாபு, சென்னை சுபஶ்ரீ என்று பேனர் மற்றும் கொடிக் கம்பங்களால் அடுத்தடுத்து உயிர்பலி ஏற்பட்டுவிட்டன. ஆனால், அதிலிருந்து அ.தி.மு.க எந்தப் பாடமும் கற்கவில்லை என்பது அனுராதா விபத்தின் மூலம் தெரியவந்துள்ளது என வேதனை தெரிவித்துள்ளனர் அப்பகுதி மக்கள்!