
எடப்பாடிக்காகக் கொங்கு லாபி ஒன்று டெல்லியில் ஓவர்டைம் உழைத்தது. தங்கள் சமூகத்துக்கு ‘வாராது வந்த மாமணி’யாக அவரைக் கருதினார்கள்.
‘நம்மில் ஒருவர், நமக்கான தலைவர்.’
அக்டோபர் 7-ம் தேதி அ.தி.மு.க-வின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்ட அடுத்த நிமிடம், இந்த வாசகத்துடன் எடப்பாடியின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டது அ.தி.மு.க ஐ.டி பிரிவு. சீனியர் அமைச்சர்கள் முதல் ஜூனியர் கட்சி நிர்வாகிகள் வரை தங்கள் சோஷியல் மீடியா பக்கங்களில் புரொபைல் படமாக இதை உடனே பதிவேற்றினர். கட்சியில் எல்லோருக்கும் சீனியரான செங்கோட்டையன் முதல், தர்மயுத்த காலத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் பக்கம் நின்ற ஒற்றை அமைச்சரான மாஃபா பாண்டியராஜன் வரை அமைச்சரவை சகாக்கள் பலரும் எடப்பாடிக்கு வாழ்த்து சொல்ல முண்டியடித்தனர்.
பச்சைச் சேலையில் ஜெயலலிதா காட்சி தரும் புகைப்படம் ஒன்றை சட்டைப் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு நடமாடுவது அ.தி.மு.க சீனியர்களின் வழக்கம். இனி அவர்கள் எடப்பாடியின் படத்தை பாக்கெட்டில் வைத்துக்கொண்டால் ஆச்சர்யமில்லை. அந்த அளவுக்குக் கட்சிக்குள் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறார் எடப்பாடி.
குடிமராமத்து முதல் தமிழ கத்தின் தண்ணீர் உரிமை களைப் பெற்றுத் தந்தது வரை எடப்பாடி அரசின் சாதனை களை விளக்கி 2 நிமிட வீடியோ ஒன்றை அ.தி.மு.க தயாராக வைத்திருந்து வெளியிட்டது. அச்சகத்தின் பெயரும் அச்சிட்டவரின் பெயரும் இல்லாமலே தமிழகம் முழுக்க ஒட்டப்பட்ட போஸ்டர்கள், ஸ்டாலினை வம்புக்கு இழுத்தன. ‘மண்ணின் மைந்தனா... மன்னனின் மைந்தனா? செயல் நாயகனா... அறிக்கை நாயகனா?’ என எடப்பாடியுடன் ஸ்டாலினை ஒப்பிட்டன அவை. ‘உழவன் வீட்டில் உதித்த ஒருவனும், உழைத்தால் முதல்வராக முடியும்’ என, தொண்டர்களுக்குக் கடிதம் எழுதியிருக்கிறார் எடப்பாடி. முதல்வர் வேட்பாளர் அறிவிப்பையே, ஏதோ தேர்தலில் வென்று பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டதுபோல திருவிழாவாகக் கொண்டாடி விட்டனர் அ.திமு.க-வினர்.

ஆனால், கூட்டணிக் கட்சிகளேகூட இந்த உற்சாகத்தைக் காண்பிக்க வில்லை. குட்டிக் குட்டிக் கட்சிகள் மட்டுமே வாழ்த்து தெரிவித்தன. ‘நேற்றைய பொழுது நிஜமில்லை, நாளைய பொழுது நிச்சயமில்லை’ என ட்விட்டரில் குத்தலாக கமென்ட் அடித்தார் பா.ம.க நிறுவனர் ராமதாஸ். ‘எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க-வின் முதல்வர் வேட்பாளரா, அ.தி.மு.க கூட்ட ணியின் முதல்வர் வேட்பாளரா?’ என்ற கேள்விக்கு, பதில் சொல்ல மறுத்தார், தமிழக பி.ஜே.பி தலைவர் எல்.முருகன். ‘‘அவர் எங்கள் கூட்டணியின் முதல்வர் வேட்பாளரா என்பதை எங்கள் தேசியத் தலைமையே முடிவு செய்யும்’’ என்கிறார், சீனியர் பி.ஜே.பி தலைவர் வானதி சீனிவாசன். இந்த எதற்கும் எடப்பாடி நேரடியாக பதில் சொல் லவில்லை. ‘‘நாங்கள் அறிவித்த முதல்வர் வேட்பாளரை ஏற்றுக் கொள்பவர்கள்தான் எங்களுடன் கூட்டணியில் இருக்க முடியும்’’ எனக் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி பதில் சொல்லியிருக்கிறார்.
முதல்வர் வேட்பாளருக்காக ஓ.பன்னீர்செல்வத்துடன் நடந்த ரேஸில் எடப்பாடி ஜெயித்ததில் எந்த ஆச்சர்யமும் இல்லை. ஆனால், பன்னீர் ஒட்டுமொத்தமாக இதில் ஸ்கோர் செய்யத் தவறியதையே எல்லோரும் ஆச்சர்யத்துடன் பார்க்கிறார்கள்.
தமிழக அரசியலில் ‘தற்காலிக முதல்வர்’ என்ற அடையாளத்துடன் மேலே வந்தவர் பன்னீர்செல்வம். ஜெயலலிதா வழக்கில் சிக்கிப் பதவியை இழந்தபோது முதல்வர் பதவிக்குக் கொண்டு வரப்பட்ட பன்னீரை அப்படித்தான் அழைத்தார் ஜெயலலிதா. மூன்று முறை அந்த நாற்காலியில் அமர்ந்தவர் பன்னீர். தமிழகத்தை ஆட்சி செய்த முதல்வர்கள் பட்டியலில் அவருக்கு நிரந்தர இடம் உண்டு. ஆனால், அவர் தன்னை தற்காலிக முதல்வராகவே கருதிக் கொண்டார். முதல்வர் அறையையோ, முதல்வருக்கான அதிகாரங்களையோ, முதல்வருக்கான பாது காப்பையோ பெற நினைத்த தில்லை. அமைச்சராக இருந்த போது பயன்படுத்திய அதே அறை, அதே கார் என்றே இருந்தார். ஜெயலலிதா மறைந்த நாளில் மூன்றாவது முறையாக முதல்வரான போதும் அப்படித்தான் செயல்பட்டார். ஒருபோதும் ஜெயலலிதாவின் இடத்தை அடைய நினைத்ததில்லை.

குல்சாரிலால் நந்தா என்று ஒருவர் இருந்தார். நேரு மறைந்தபோது இரண்டு வாரங்களும், லால் பகதூர் சாஸ்திரி மறைந்தபோது இரண்டு வாரங்களும் அவர்தான் இந்தியாவின் பிரதமர் பொறுப்பு வகித்தார். ஆனால், யாருக்கும் அவரைத் தெரியாது. நம் நாவலர் நெடுஞ்செழியனை எடுத்துக் கொள்ளுங்கள்... அண்ணா மறைந்தபோது ஆறு நாள்களும், எம்.ஜி.ஆர் அமெரிக்காவில் சிகிச்சை பெற்றபோது சுமார் மூன்று மாதங்களும், எம்.ஜி.ஆர் மறைந்தபோது 13 நாள்களும் அவர்தான் தமிழகத்துக்கு முதல்வர் பொறுப்பு வகித்தார். ஆனால், அவரை முதல்வராக யாரும் கருதியதில்லை.
தன்னை ‘தற்காலிகம்’ என நினைக்கும் யாரும் தலைவராக உருவெடுப்பதில்லை. அதிகாரம் நிறைந்த முதல்வர் நாற்காலியில் அமர்ந்தாலும், தன்னை ‘தற்காலிக முதல்வர்’ என்றே நினைத்தவர் ஓ.பன்னீர்செல்வம். பேருந்தில் யாருக்காகவோ இடம் பிடித்து, அவர் வந்ததும் எழுந்து இடம் விடுகிற ஒரு நபர் போலவே இருந்தார். சசிகலாவுக்காக அவர் ராஜினாமா செய்து விட்டு, பிறகு மனம் மாறி தர்மயுத்தம் நடத்திய இடைவெளியில் எடப்பாடி பழனிசாமி அந்த இடத்துக்கு வந்தார்.
கட்சியில் இழந்ததைவிட அதிகமாக டெல்லியில் பன்னீர் இழந்தார். எந்தப் பதவியிலும் இல்லாதபோதும் நினைத்த நிமிடத்தில் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்திக்கும் அளவுக்கு சக்தி வாய்ந்தவராக இருந்தார் பன்னீர்!
சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வந்து சசிகலா சிறைக்குச் செல்ல வேண்டியிருந்த 2017 பிப்ரவரியில் ‘யார் அடுத்த முதல்வர்’ என்ற குழப்பம் வந்தது. குடும்பத்துக்குள் டி.டி.வி.தினகரனுக்கு அந்தப் பதவிமீது ஆசை இருந்தது. கட்சியில் மூத்த தலைவரான கே.ஏ.செங்கோட்டையனுக்கு எதிர்பார்ப்பு இருந்தது.
2001-ம் ஆண்டு நீதிமன்ற உத்தரவு காரணமாக ஜெயலலிதா பதவி விலக நேர்ந்தபோது, சீனியர் தலைவர்களை ஒதுக்கிவிட்டு, பின்வரிசையில் இருந்த ஓ.பன்னீர்செல்வத்தை முதல்வர் ஆக்கினார். அதே யுக்தியை இம்முறை சசிகலா கையாண்டார். கட்சியில் செல்வாக்கோ, ஆளுமையோ இல்லாத எடப்பாடியை முதல்வர் ஆக்கினார். அவரை ‘தற்காலிக முதல்வர்’ என்றே சசிகலா நினைத்தார். பலரும் அப்படித்தான் நினைத்தார்கள். ‘மூன்று மாதங்கள் தாக்குப் பிடிப்பாரா’ என நினைத்துக் கொண்டே காலண்டரில் தேதி கிழித்தனர்.
ஆனால், எடப்பாடி மட்டும் அப்படி நினைக்கவில்லை. சசிகலாவின் சாய்ஸாக முதல்வர் நாற்காலியில் அமர்ந்தாலும், தன்னை ஜெயலலிதாவாகக் கற்பனை செய்துகொள்ளும் துணிச்சல் அவருக்கு இருந்தது. 2017 பிப்ரவரி 16-ம் தேதி தமிழக முதல்வரானதும் முதல் நாள் கோட்டைக்குச் சென்று ஜெயலலிதா பயன்படுத்திய அதே அறையில், அதே நாற்காலியில் அமர்ந்து முதல் கையெழுத்து போட்டார். அன்று நுனி இருக்கையில் அமர்ந்தவர், கொஞ்சம் கொஞ்சமாக இருக்கையை ஆக்கிரமித்துவிட்டார்.

ஜெயலலிதா எப்போது வீட்டிலிருந்து வெளியில் சென்றாலும், வழிநெடுக போலீஸ் நிற்கும். இப்போது எடப்பாடி வெளியூர் செல்லும்போது, கிரீன்வேஸ் சாலை இல்லத்திலிருந்து விமான நிலையம் வரை போலீஸ் பட்டாளம்.
எடப்பாடிக்காகக் கொங்கு லாபி ஒன்று டெல்லியில் ஓவர்டைம் உழைத்தது. தங்கள் சமூகத்துக்கு ‘வாராது வந்த மாமணி’யாக அவரைக் கருதினார்கள். விரைவிலேயே அவர் சசிகலா குடும்பத்தின் அதிகார வட்டத்திலிருந்து வெளியில் வந்தார். ‘தர்ம யுத்தம்’ நடத்திக்கொண்டிருந்த பன்னீருடன் சமரசம் செய்துகொண்டார்.
அந்த சமரசத்தால் பன்னீர் கொஞ்சம்கூட சந்தோஷப்பட முடியவில்லை. தர்மயுத்த காலத்தில் பன்னீருக்குத் துணையாக நின்ற நிறைய பேரைக் கரைத்துத் தன் பக்கம் கொண்டுவந்துவிட்டார் எடப்பாடி. 11 எம்.எல்.ஏ-க்களை அன்று தன் முகாமில் வைத்திருந்த பன்னீருக்கு, இன்று ஐந்து எம்.எல்.ஏ-க்கள்கூட விசுவாசி களாக இல்லை. ‘கட்சிக்கு வழிகாட்டுதல் குழு அமைத் தால்தான் எடப்பாடியை முதல்வர் வேட்பாளராக ஏற்பேன்’ என பன்னீர் அடம் பிடித்து அமைத்த வழிகாட்டுதல் குழுவில் ஆறு பேர் எடப்பாடி தரப்பினர். ஐந்து பேர் மட்டுமே பன்னீரின் ஆட்கள். அந்தக் குழுவுக்கு என்ன வேலை? அது யாருக்கு வழிகாட்டும்? எதுவுமே தெளிவாக இல்லை.
கட்சியில் இழந்ததைவிட அதிகமாக டெல்லியில் பன்னீர் இழந்தார். எந்தப் பதவியிலும் இல்லாதபோதும் நினைத்த நிமிடத்தில் டெல்லி சென்று பிரதமர் மோடியைச் சந்திக்கும் அளவுக்கு சக்தி வாய்ந்தவராக இருந்தார் பன்னீர். இப்போது எடப்பாடியின் நம்பிக் கைக்குரிய அமைச்சர்கள் தங்கமணியும் எஸ்.பி.வேலுமணியும் அவர் சார்பில் டெல்லி போய் சந்திப்புகளை நிகழ்த்துகின்றனர். முதல்வர் வேட்பாளர் பஞ்சாயத்து நடந்த நேரத்தில்கூட இருவரும் டெல்லி போய் சீனியர் பி.ஜே.பி தலைவர்களைப் பார்க்க முடிந்தது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் அப்பாயின்ட்மென்ட் கேட்டுக் காத்திருக்கிறார் பன்னீர். பதிலே இல்லை. கிட்டத்தட்ட டெல்லி போகும் வழியே அவருக்கு மறந்துவிட்டது. டெல்லியின் அன்புப்பார்வை முழுக்க இப்போது எடப்பாடி முகாம் பக்கம் இருக்கிறது.
அது எடப்பாடிக்குள் ‘நாம் ஜெயலலிதாவின் மறு உருவம்’ என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி யிருக்கிறது. எனவே, அவர் ஜெயலலிதா போலவே 110 விதியின் கீழ் சட்டமன்றத்தில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிடுகிறார். அமெரிக்கா, பிரிட்டன் என 13 நாள்கள் அவர் சுற்றுப்பயணம் சென்றுவிட்டுத் திரும்பிய போது, கிட்டத்தட்ட ஜெயலலிதாவுக்குக் கொடுக்கும் வரவேற்பை எடப்பாடிக்குக் கொடுத்தார்கள்.
இந்தக் கொரோனா நேரத்திலும் அவர் பரிவாரங்களுடன் பல மாவட்டங்களுக்குச் சுற்றுப் பயணம் செல்கிறார். மாவட்டச் செயலாளர்களை மாற்றுகிறார். ஒரு பிரச்னை வந்தபோது தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்த டாக்டர் மணிகண்டனைப் பதவி யிலிருந்து தூக்கியடித்தார்.
எல்லாவற்றையும்விட முக்கியமானது, அவர் அமைத்த தேர்தல் கூட்டணி. ‘இனி கேப்டன் விஜயகாந்த் கிங் மேக்கர் இல்லை; அவர்தான் கிங்’ என்று சொல்லிக் கொண்டிருந்தார் பிரேமலதா. அந்த தே.மு.தி.க., எடப்பாடியின் தலைமையை ஏற்றுக் கூட்டணியில் இணைந்தது. ‘மாற்றம்... முன்னேற்றம்’ என முழக்கமிட்டு ‘முதல் நாள்... முதல் கையெழுத்து’ வரை போன அன்புமணி ராமதாஸும் கூட்டணிக்கு வந்தார். இப்படி இரண்டு முதல்வர் வேட்பாளர்களை அடக்கிப் போட்டு அவர் உருவாக்கிய வித்தியாசமான கூட்டணி ஜெயிக்கவில்லை. 37 எம்.பி-க்களை அ.தி.மு.க-வுக்குக் கொடுத்துவிட்டுப் போயிருந்தார் ஜெயலலிதா. இப்போது அந்தக் கட்சிக்கு இருப்பது ஒற்றை எம்.பி மட்டுமே! ஆனால், சட்டமன்ற இடைத் தேர்தல்களில் போதுமான அளவுக்கு ஜெயித்து, ஆட்சியை அவரால் தக்க வைத்துக்கொள்ள முடிந்தது.
‘மூன்று மாதங்கள் தாக்குப்பிடிக்க மாட்டார்’ எனக் கருதப்பட்ட ஒருவரின் ஆட்சியை வீழ்த்துவதற்கு பிரசாந்த் கிஷோரின் உதவி தி.மு.க-வுக்குத் தேவைப் படுகிறது. இதுவே எடப் பாடியின் சாதனை எனலாம். சில மாதங்களுக்கு முன்பு சென்னை எஸ்.எஸ்.என் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் எடப்பாடி பங்கேற்றார். அங்கு அவரை மாணவர்களுக்கு அறிமுகம் செய்யும்போது, ‘நீச்சல் வீரர்’ என்று குறிப்பிட்டார்கள். அரசியல் நீச்சலை டெல்லி வரை அடித்துக் கரையேறிவிட்டார் அவர்.
ரேஷன் கார்டுக்கு ரொக்கப் பணம் தருவதை ஜெயலலிதா ஆரம்பித்துவைத்தார். இந்தக் கொரோனா காலத்தில் எடப்பாடி அதைப் பரவலாக்கி யிருக்கிறார். ‘தீபாவளி, பொங்கல், கொரோனா நிவாரணம் என்று இதைத் தந்து ஓட்டு வாங்கி விடலாம்’ என்று நினைக்கும் இடத்தில்தான் அ.தி.மு.க இருக்கிறது.
ஆனால், அது ஓட்டாக மாறுமா? ஜெயலலிதா கடுமையாக எதிர்த்து வந்த உணவுப் பாதுகாப்பு மசோதா, உதய் மின் திட்டம், நீட் தேர்வு போன்ற எல்லாமே தமிழகத்துக்கு வந்தது எடப்பாடி காலத்தில்தான். ஒவ்வோர் ஆண்டு மருத்துவச் சேர்க்கை காலத்திலும் நீட் வாங்கும் உயிர்ப்பலிகள் தமிழகத்தைக் கொந்தளிக்க வைக்கின்றன. தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் 13 பேரைத் துடிக்கத் துடிக்க போலீஸ் சுட்டுக்கொன்றது ஆறாத வடுவாக இருக்கிறது.
‘சாமானியர்களின் முதல்வர்’ என்று அவருக்குப் பட்டம் கொடுத்திருக்கிறார்கள். அந்த முதல்வர் சுற்றுப் பயணங்களின்போது இதுவரை மூன்று முறை தன் காரிலிருந்து இறங்கி சாமானியர்களுடன் உரையாடியிருக்கிறார். மற்றபடி சாமானியர்களின் குரல் அவர் காதில் விழுவ தில்லை.
தமிழ் சினிமாவில் காமெடி சீசன், பேய் சீசன், வில்லேஜ் சீசன் என வருகிறமாதிரி அரசியல்வாதிகளுக்குத் தேர்தல் நேரத்தில் ‘விவசாயி சீசன்’ வந்துவிடும். காவிரி டெல்டாவைப் பாது காக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தபோது, ‘நான் ஒரு விவசாயி’ என்று எடப்பாடி சொன்னார். ‘மண்புழு மாதிரி நெளிந்து நெளிந்து பதவிக்கு வந்தவர்’ என்று ஸ்டாலின் விமர்சனம் செய்தபோதுகூட, ‘மண்புழு விவசாயிகளின் நண்பன்’ என்று ‘பன்ச்’ கொடுத்தார். ஆனால், சென்னை - சேலம் எட்டு வழிப் பசுமைச் சாலையை எதிர்த்து விவசாயிகள் போராடியபோது, ‘அந்தத் திட்டம் வந்தே தீரும்’ என்றவர் இந்த விவசாயிதான். கடைசியில் நீதிமன்றமே விவசாயிகளைக் காத்தது. சமீபத்தில் மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் மசோதாக்களை பி.ஜே.பி-யின் நீண்டகாலக் கூட்டணிக் கட்சியான அகாலி தளமே எதிர்த்தபோதும், அந்த மசோதாக்களை ஆதரித்தார் இந்த எளிய விவசாயி. தமிழகத்தை பாதிக்கும் மத்திய அரசின் பல திட்டங்களை எதிர்த்து ஒரு கடிதம் எழுதுவதோடு தன் கடமையை முடித்துக்கொள்கிறார் எடப்பாடி.
தொடர்ச்சியாக 10 ஆண்டுகள் ஆட்சி செய்த ஓர் அரசுக்கு இயல்பாக எழும் எதிர்ப்பு, மத்திய அரசுமீது இருக்கும் கோபம் ஆகிய இரண்டையும் எதிர்கொள்ள வேண்டியவராக எடப்பாடி இருக்கிறார். திரைமறைவு அரசியலில் ஸ்கோர் செய்வதற்கு மேலிடச் செல்வாக்கு மட்டுமே போதும்; நேரடி அரசியலில் ஜெயிப்பதற்கு மக்கள் செல்வாக்கு வேண்டும்.
முதல்வர் வேட்பாளர் ஆவதற்கும், முதல்வர் ஆவதற்கும் இடையே இருக்கும் தூரம் மிக அதிகம். எல்லா நேரங்களிலும் யாரோ ஒருவர் உழைத்து அந்த நாற்காலியை இன்னொருவருக்குக் கொடுத்துவிடுவதில்லை.