அலசல்
Published:Updated:

தேர்தல் செலவுக்கு கொள்ளையடித்த அ.தி.மு.க வட்டச்செயலாளர்!

‘ஈகை’ சீனு
பிரீமியம் ஸ்டோரி
News
‘ஈகை’ சீனு

கவுன்சிலர் கனவு... துப்புக் கொடுத்த மாப்பிள்ளை...

விரைவில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரவிருக்கிறது. கட்சிகளெல்லாம் தேர்தல் வேலைகளில் மும்முரமாக இருக்க... சென்னையில் அ.தி.மு.க வட்டச்செயலாளர் ‘ஈகை’ சீனு என்பவர், சென்னை மாநகராட்சித் தேர்தலில் போட்டியிட்டு கவுன்சிலராகும் கனவில், தொழிலதிபர் வீட்டில் நான்கரைக் கோடி ரூபாயையும் தங்க நகைகளையும் கொள்ளையடித்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த தொழிலதிபர் கோபால். இவரின் மனைவி ஜோதினி. இவர் கடந்த நவம்பர் 23 அன்று வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில், ‘ஆழ்வார் திருநகர் அப்பார்ட்மென்ட்டிலுள்ள வீட்டில் அலுவலகம் நடத்திவருகிறோம். கடந்த நவம்பர் 19-ம் தேதி இரவு சிலர் அந்த வீட்டின் கதவைத் திறந்து நான்கரைக் கோடி ரூபாய் மற்றும் 30 சவரன் தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்’ என்று குறிப்பிட்டுள்ளார். அதன்படி வளசரவாக்கம் எஸ்.ஐ வீரபாண்டிய கட்டப்பொம்மன் வழக்கு பதிவு செய்து விசாரித்தார்.

தேர்தல் செலவுக்கு கொள்ளையடித்த அ.தி.மு.க வட்டச்செயலாளர்!

கொள்ளை நடந்த வீட்டில் போலீஸார் ஆய்வு செய்தபோது, கதவுகளும் லாக்கர்களும் உடைக்கப்படவில்லை என்பது தெரிந்தது. சம்பவ இடத்திலுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது, நான்கு பேர் வீட்டுக்குள் செல்லும் காட்சியும், அபார்ட்மென்ட்டுக்குக் கீழே சாலையில் கார் அருகில் இரண்டு பேர் நிற்கும் காட்சியும் பதிவாகியிருந்தன. காரின் பதிவு எண்ணை வைத்து விசாரித்தபோது, முகப்பேரைச் சேர்ந்த அருள்பிரகாஷ் என்பவன் இதில் சம்பந்தப்பட்டிருப்பது தெரிந்தது. இவன்மீது சென்னை மத்திய குற்றப்பிரிவில் நில மோசடி வழக்கு உள்ளது. அருள்பிரகாஷின் செல்போன் நம்பரை ஆய்வு செய்தபோது, அவனின் டிரைவர் மணிகண்டனுடன் கொள்ளை நடந்த அன்று பேசிய தகவல் கிடைத்தது. போலீஸார் மணிகண்டனைப் பிடித்து விசாரித்தபோது, இந்தக் கொள்ளைச் சம்பவத்துக்கு மூளையாகச் செயல்பட்டது சென்னை ஈக்காட்டுத்தாங்கலைச் சேர்ந்த அ.தி.மு.க வட்டச் செயலாளர் ‘ஈகை’ சீனு என்று தெரியவந்தது. மணிகண்டன் அளித்த தகவலின்படி இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட ஆறுமுகம், சதீஷ், சுரேஷ், சேகர் ஆகியோரைப் போலீஸார் கைதுசெய்தனர். தொடர்ந்து, இந்தக் கொள்ளையில் ஈடுபட்ட அருள்பிரகாஷும் தீபக்கும் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இதற்கு மாஸ்டர் மைண்டாகச் செயல்பட்ட சீனு மற்றும் அவனின் உறவினர்கள் தலைமறைவாகிவிட்ட நிலையில், அவர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.

தேர்தல் செலவுக்கு கொள்ளையடித்த அ.தி.மு.க வட்டச்செயலாளர்!

இந்தக் கொள்ளைச் சம்பவத்தின் பின்னணி குறித்து நம்மிடம் விவரித்தார் போலீஸ் அதிகாரி ஒருவர்... “இந்த வழக்கை விசாரிக்க உதவி கமிஷனர் கலியன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் குரூஸ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இவர்கள் சிசிடிவி-யில் பதிவான காட்சிகள் மற்றும் செல்போன் சிக்னலை வைத்து ஐந்து பேரைக் கைதுசெய்து மூன்று கோடி ரூபாயைப் பறிமுதல் செய்திருக்கின்றனர். இன்டர்நெட் கேபிள்களை பூமிக்கடியில் புதைக்கும் ஒப்பந்தப் பணியை செய்துவரும் கோபாலிடம், அ.தி.மு.க வட்டச்செயலாளர் சீனு மனைவியின் சகோதரர் சேகர் என்பவர் நீண்டகாலமாக வேலை பார்த்துவந்தார்.

அந்த வகையில், ஆழ்வார் திருநகரிலுள்ள அப்பார்ட்மென்ட்டில் கோடிக்கணக்கில் பணம் வைக்கப்பட்டிருந்த தகவல் சேகருக்குத் தெரிந்திருக்கிறது. இந்தச் சூழலில் விரைவில் வரவிருக்கும் சென்னை மாநகராட்சித் தேர்தலில் கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட சீனு முடிவு செய்திருந்தார். அதற்குக் கோடிக்கணக்கில் பணம் தேவைப்பட்டிருக்கிறது. இதுபற்றி சேகரிடம் சீனு ஆலோசித்தபோது, ‘என் முதலாளியிடம் கோடிக்கணக்கில் பணம் இருக்கிறது; அது எங்கிருக்கிறது என்ற விவரமும் எனக்குத் தெரியும்’ என்று சேகர் கூறியுள்ளார். இதையடுத்து, அந்தப் பணத்தைக் கொள்ளையடித்து கவுன்சிலர் தேர்தல் செலவுக்குப் பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்திருக்கிறார்கள். இதுபற்றித் தன் கூட்டாளிகளான மீசை ஆறுமுகம், அருள்பிரகாஷ் ஆகியோரிடம் ஆலோசித்துள்ளார் சீனு. அப்போது ஆழ்வார் திருநகர் வீட்டுக்கு எப்போதாவதுதான் கோபால் வருவார் என்பதால், டூப்ளிகேட் சாவி மூலம் கதவைத் திறந்து கொள்ளையடிக்கலாம் என்று ஸ்கெட்ச் போட்டுள்ளது இந்தக் கும்பல். அதன்படி கடந்த நவம்பர் மாதம் ஒருநாள், ‘சாவிகள் தொலைந்துவிட்டன’ என்று சொல்லி டூப்ளிகேட் சாவிகளைத் தயார் செய்யும் இருவரை அழைத்துக்கொண்டு ஓனரைப்போலவே அந்த வீட்டுக்குச் சென்ற சீனு, அங்குவைத்தே டூப்ளிகேட் சாவிகளையும் வாங்கியிருக்கிறார்.

ஆபிரகாம் குரூஸ்
ஆபிரகாம் குரூஸ்

பிறகு மற்றொரு நாள் நள்ளிரவு அருள்பிரகாஷ், மீசை ஆறுமுகம், மணிகண்டன், சதீஷ், சுரேஷ் ஆகியோர் மீண்டும் அந்த வீட்டுக்குச் சென்று, டூப்ளிகேட் சாவியால் கதவைத் திறந்து லாக்கர்களில் இருந்த நான்கரைக் கோடி ரூபாய் பணம், 30 சவரன் தங்க நகைகளைப் பையில் அள்ளிப்போட்டுக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். தலைமறைவாக இருக்கும் சீனு மற்றும் அவரின் உறவினர்களைத் தேடிவருகிறோம்” என்றார்.

ஆறுமுகம், மணிகண்டன், சதீஷ், சுரேஷ்
ஆறுமுகம், மணிகண்டன், சதீஷ், சுரேஷ்

நல்லவேளை... தேர்தலில் போட்டியிடும் முன்பே திருடன் மாட்டியிருக்கிறான். ஒருவேளை தேர்தலில் போட்டியிட்டு, வெற்றியும் பெற்றிருந்தால் மக்கள் பணம் அல்லவா கொள்ளை போயிருக்கும்!