சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகராட்சி பாதாளச் சாக்கடை திட்டத்திற்கு ரூ.112.5 கோடி ஒதுக்கப்பட்டது. இந்தத் திட்டப் பணிகள் தொடங்கப்பட்டு பல ஆண்டுகளாகியும் முடிவடையாமல் உள்ளதால் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பல்வேறு சிரமங்களை மக்கள் சந்தித்து வருகின்றனர்.

மேலும், பல இடங்களில் அடிப்படை வசதிகளும் சரி செய்யப்படாமல் இருப்பதால் பல்வேறு சிக்கல்கள் உருவாகி வருகின்றன. இந்நிலையில் அ.தி.மு.க., நகரச் செயலாளர் மெய்யப்பன் தலைமையில் காரைக்குடி நகராட்சி அலுவலகத்தை நூற்றுக்கணக்கான ஆளும் கட்சியினர் முற்றுகையிட்டனர்.
நகராட்சி நிர்வாகத்திற்கு எதிராக ஆளும் கட்சி தரப்பினர் போராட்டத்தை முன்னெடுத்துள்ளது ஆளும் கட்சி தரப்பினர் இடையே ஏதும் சலசலப்பா என்று பேசிக்கொள்ளப்படுகிறது. இதுகுறித்து மெய்யப்பன் கூறுகையில், ``முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முன்னெடுத்த மகத்தான திட்டம் காரைக்குடி பாதாளச் சாக்கடைத் திட்டம்.

இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் நபர்கள் பல இடங்களில் தோண்டிவிட்டு வேலையை முறையாக முடிக்காமல், அடுத்த இடத்திற்குச் செல்கின்றனர். இதனால் மக்களுக்குச் சிரமம் ஏற்படுகிறது. இதுபோக தற்போது எடப்பாடியார் ராசியால் நல்ல மழை பெய்துள்ளது.
இதனால் நீர்நிலைகள் நல்லபடியாக நிறைந்துள்ளது. ஆனால், குடிநீருக்குக் காரைக்குடி மக்கள் சிரமப்படுகின்றனர். இப்படிப் பல பிரச்னைகளை அதிகாரிகள் வேண்டும் என்றே செய்கின்றனர். இது ஆளும் கட்சிக்குத்தான் கெட்ட பெயர். ஆளும் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்றே அதிகாரிகள் செயல்படுகின்றனர்.

அதனால்தான் நாங்களே மக்கள் பிரச்னைக்காகப் போராட்டத்தில் இறங்கியுள்ளோம்" என்றார். காரைக்கு நகராட்சி நிர்வாகத்திற்கு எதிராக அ.தி.மு.க.,வினர் குரல் கொடுப்பது உட்கட்சி பூசலா, இல்லை உண்மையிலேயே இது மக்களுக்கு ஆதரவு போராட்டமா என்று தெரியாமல் காரைக்குடி சமூக ஆர்வலர்கள் புலம்பிவருகின்றனர்.