காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் ஜோடோ யாத்திரை கடந்த செப்டம்பர் மாதம் 7-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கியது. இந்தியாவில் மிக முக்கியமான அரசியல் பாதயாத்திரையாகக் கருதப்படும் இந்த ஜோடோ யாத்திரை, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி வழியாக சென்று 3,000 கிலோமீட்டரை நிறைவு செய்திருக்கிறது. இந்த நிலையில் தொடர்ந்து, ஒன்பது நாள்கள் இடைவெளி எடுத்துக்கொண்ட யாத்திரை, இன்று மீண்டும் உத்தரப்பிரதேசத்தில் தொடங்குகிறது. காஜியாபாத்தில் இன்று தொடங்கியிருக்கும் இந்த யாத்திரை உத்தரப்பிரதேசத்தில் 120 கிலோமீட்டர் தூரம் செல்கிறது. இந்த யாத்திரையில் பிரியங்கா காந்தியும் கலந்துகொள்கிறார்.

உத்தரப்பிரதேச யாத்திரை முழுக்க பிரியங்கா காந்தி கலந்துகொள்வார் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்திருக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் மூன்று மாவட்டங்களைக் கடந்து ஜோடோ யாத்திரை ஹரியானாவுக்குள் நுழைகிறது. ஏற்கெனவே பிரியங்கா காந்தி உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் பணிகளை கவனித்துவருகிறார்.
ஜோடோ யாத்திரையில் கலந்துகொள்ளும்படி சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவுக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்திருக்கிறது. ஆனால், அகிலேஷ் யாதவ் இதில் கலந்துகொள்வது குறித்து இன்னும் எதுவும் கூறவில்லை. யாத்திரை வரும் 26-ம் தேதி காஷ்மீரின் ஸ்ரீநகரில் முடியும். அங்கு ராகுல் காந்தி தேசியக்கொடியை ஏற்றிவைத்து பேரணியை முடிக்கிறார். இந்த யாத்திரையில் ரிசர்வ் வங்கியின் முன்னாள் தலைவர் ரகுராம் ராஜன், நடிகர் கமல்ஹாசன் உட்பட பலரும் கலந்துகொண்டனர். ராகுல் காந்தியின் யாத்திரை முடிந்த பிறகு இந்த ஜோடோ யாத்திரையின் நோக்கம் குறித்து பெண்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இரண்டு மாத பாதயாத்திரை மேற்கொள்கிறார்.

இது குறித்து கட்சியின் மூத்த தலைவர் வேணுகோபால் கூறுகையில், ``ஜோடோ யாத்திரை வரும் 26-ம் தேதி முடிந்த பிறகு இந்த யாத்திரையின் நோக்கம் குறித்து மக்களிடம் தெரிவிப்பதற்காக `ஹாத் சே ஹாத் ஜோடோ' என்ற யாத்திரையை காங்கிரஸ் கட்சி தொடங்குகிறது. இந்த யாத்திரைக்கு பிரியங்கா காந்தி தலைமை தாங்குவார். இரண்டு மாதங்கள் நடக்கும் இந்த யாத்திரையில் பெண்கள் அதிக அளவில் கலந்துகொள்வார்கள். ஒவ்வொரு மாநிலத்தின் தலைநகரத்திலும் பிரியங்கா காந்தி பாதயாத்திரை மேற்கொள்வார். பணவீக்கம் எந்த அளவுக்கு நடுத்தர மக்களை பாதிக்கிறது என்பதை பெண்கள் மத்தியில் எடுத்துச்செல்லும் பணியை பிரியங்கா காந்தி மேற்கொள்வார்” என்று தெரிவித்தார்.