மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் தற்போது 1.5 லட்சம் கன அடி நீர் சென்றுக்கொண்டிருக்கிறது. மேலும் தண்ணீர்வரத்து அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, கொள்ளிடம் ஆற்றின் கரையோரமுள்ள நாதல்படுகை, திட்டுப்படுகை, முதலைமேடு திட்டு, முதலைமேடு,

நாணல்படுகை, குத்தவக்கரை, சரஸ்வதிவிளாகம், கொன்னகாட்டுப்படுகை, கீரங்குடி, பாலூரான்படுகை, மேலவாடி, கீழவாடி உள்ளிட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. தாழ்வான பகுதிகளில் வசித்துவருபவர்கள் கால்நடைகளுடன் மேடான இடங்களுக்குச் செல்ல பொதுப்பணித்துறை அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டிருக்கின்றனர்.
கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் அதிகரித்துக்கொண்டேயிருப்பதால் ஆற்றில் யாரும் இறங்கவோ, துணி துவைக்கவோ கூடாது என்று கரையோர கிராம மக்களுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில், நாதல்படுகை கிராமத்தில் குடியிருப்புகளைத் தண்ணீர் சூழ்ந்து கொண்டிருக்கிறது. இங்குள்ள கால்நடைகளைப் பாதுகாப்பான இடங்களுக்கு ஓட்டிவரும் முயற்சியில் விவசாயிகள் ஈடுபட்டுவருகின்றனர். கடந்த 10 தினங்களுக்கு முன்பு கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் ஆற்றின் திட்டு கிராமங்களான நாதல்படுகை,

முதலைமேடு திட்டு, வெள்ளமணல் ஆகிய கிராமங்களைச் சேர்ந்தவர்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டு அவர்களுக்கு அரசின் சார்பில் அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டுவந்தன. இந்த நிலையில், கிராம மக்கள் மீண்டும் முகாம்களுக்குச் செல்லும் நிலை ஏற்பட்டிருக்கிறது.