Published:Updated:

'விலை’ நிலங்களாகும் ’விளை’ நிலங்கள்!

'விலை’ நிலங்களாகும் ’விளை’ நிலங்கள்!

லிப்பை உண்டாக்கும் சித்தாந்தம், பொருளாதாரம், கம்யூனிஸம் பற்றியெல்லாம் விடிய விடிய பேசினாலும் புரிந்துகொள்ளக் கூடிய புத்திசாலி வாக்காளர்கள்தான், வங்காளிகள். 34 ஆண்டுகளாக மேற்கு வங்கத்தைக் கோட்டையாகக் கட்டி ஆண்ட மார்க்சிஸ்ட் சாம்ராஜ்ஜியத்தை 2011-ல் வங்காளிகள் சரிய வைத்ததற்குக் காரணம் சிங்கூர். டாடாவின் கார் தொழிற்சாலைக்காக விவசாயிகளின் வாழ்வாதார பூமியைப் பறித்துக் கொடுக்கும் வேலையை ஆட்சியாளர்கள் செய்தபோது, அதை எதிர்த்து உஷ்ணமாகப் போராடிய மம்தா பானர்ஜியை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தினார்கள் வங்காளிகள்.

கிட்டத்தட்ட மேற்கு வங்கத்தைப் போலத்தான் இப்போது தமிழகமும் இருக்கிறது. மத்திய அரசு கொண்டு வந்த நிலம் கையகப்படுத்துதல் சட்டத் திருத்தத்தை வலியப் போய் ஆதரித்து தனது வாக்கு வங்கிக்கு வேட்டு வைத்துக்கொண்டது அ.தி.மு.க. மேற்கு வங்கத்தைப் போலவே தமிழகமும் இந்தச் சட்டத்தால் உள்ளுக்குள் தகித்துக் கொண்டிருக்கிறது.

'விலை’ நிலங்களாகும் ’விளை’ நிலங்கள்!

மம்தா முதல்வர் ஆனபிறகு சிங்கூர் நிலத்தை அதன் உரிமையாளர்களிடமே திருப்பி அளிக்க உத்தரவு போட்டார். இப்போதும் மம்தாவின் வீரியம் குறையவில்லை. ''நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தை நிறைவேற்றி ஜனநாயகத்தை துவம்சம் செய்கிறது மோடி அரசு, இப்போது உருவாக்கியுள்ள சூழ்நிலை நெருக்கடி நிலையைவிட மிகவும் மோசமானது'' என விளாசுகிறார் மம்தா.

''நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தால் 'விளை’ நிலங்கள் எல்லாம் 'விலை’ நிலங்களாகப் போகின்றன. பன்னாட்டு முதலாளிகள் வளம் கொழிக்கப் போகிறார்கள்'' என இந்தச் சட்டத்தால் ஏற்படப் போகும் அபாயங்களைச் சொல்லி ஒரு பக்கம் விவசாயிகள் எச்சரிக்கை மணி அடிக்க... இந்தச் சட்டத்தைவைத்து கருணாநிதியும் ஜெயலலிதாவும் அறிக்கைப் போர் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

டாடாவின் கார் தொழிற்சாலைக்காக சிங்கூரில் விவசாய நிலங்களைப் பறிக்கக் கூடாது என மம்தா தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை 2007-ல் நடத்தினார். அந்தப் போராட்டத்துக்கு அ.தி.மு.க ஆதரவு தெரிவித்தது. 'உங்களது மூத்த சகோதரியான எனது வேண்டுகோளை ஏற்று உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ளுங்கள்’ என அப்போது மம்தாவுக்கு ஜெயலலிதா கடிதம் எழுதினார். அதோடு நிர்வாகிகளை அனுப்பி ஆதரவும் தெரிவித்தார். ஆனால், இன்றைக்கு நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தை ஆதரித்து அ.தி.மு.க பல்டி அடித்திருக்கிறது. பதவி பறிபோன நாளில் இருந்து எதற்குமே வாய் திறக்காத ஜெயலலிதா இந்தச் சட்டத்துக்காக வாய் திறந்துள்ளார்.

''நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை முதலில் தீவிரமாக எதிர்த்த அ.தி.மு.க., உள்நோக்கத்தோடு திடீரென்று ஆதரவு தெரிவித்து வாக்களித்திருக்கிறது, பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது'' என கருணாநிதி திரி கொளுத்திப் போட்டிருக்கிறார். ''இந்த சட்டத்தில் மாநிலங்களுக்கு உரிமைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. அதனால் ஆதரித்தோம்'' என பதிலடி கொடுத்தார் ஜெயலலிதா.  

'விலை’ நிலங்களாகும் ’விளை’ நிலங்கள்!

இவர்களின் அறிக்கைப் போரில் பூனைக் குட்டியைவிட சிங்கக் குட்டிதான் வெளியே எட்டிப் பார்த்தது. 'மேக் இன் இந்தியா’ திட்டத்தின் லோகோதான் சிங்கம். 'உலகில் உள்ள எந்த நிறுவனமும் இந்தியாவில் பொருளைத் தயாரித்து, விற்கலாம். இதன்மூலம் பல கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கலாம்’ என்பதுதான் 'மேக் இன் இந்தியா’ திட்டத்தின் நோக்கம். ''நாட்டின் வளர்ச்சிக்குப் பெரும் உதவியாக இருக்கும். இது ஒரு வெற்றுக் கோஷம், அல்ல. இது சிங்கத்தின் முதல் காலடி. இந்தியாவின் வளர்ச்சிக்கு முதல்படி'' என 'மேக் இன் இந்தியா’ திட்டத்தை கடந்த ஆண்டு செப்டம்பரில் தொடங்கி வைத்தபோது சொன்னார் மோடி.

தொழில் அதிபர்கள் நிறைந்த அந்த விழாவில் பேசிய மோடி, ''இந்த நாடு உங்களுடையது. நீங்கள் யாரும் நாட்டைவிட்டு வெளியேறக் கூடாது. இந்தியாவில் இருந்து ஒரு நிறுவனம் வெளியேறுவதைக்கூட நான் விரும்பவில்லை. நமது நிறுவனங்கள் பன்னாட்டு நிறுவனங்களாக வளர்ந்து பிரகாசிக்க வேண்டும். இந்த தேசம் உங்களுடையது. உங்கள் நிறுவனங்கள் உலக அளவில் ஜொலிக்க வேண்டும். இது இந்தியாவை பலமடையச் செய்யும். நான் தொழில் நிறுவனங்களுக்கு உறுதி அளிக்கிறேன். நீங்கள் நஷ்டமடைய மாட்டீர்கள். நாட்டின் தேவைக்கேற்ப சிறந்த தொழில்கள் தொடங்க முன் வரவேண்டும்'' என்றார்.

அந்த மோடியின் முகம்தான் இப்போது நில கையகப்படுத்துதல் சட்டமாக உருமாறி கார்ப்ரேட்டுகளுக்கு கம்பளம் விரித்திருக்கிறது. ஜெயலலிதாவோ அதில் மலர்களைத் தூவியிருக்கிறார்.

எஸ்.ஏ.எம். பரக்கத் அலி

நில எடுப்புகளும் ஒதுக்கீடுகளும்

தமிழகம் முழுவதும் தொழில் பூங்காக்களுக்கு ஒதுக்கப்பட்ட மற்றும் எடுக்கப்படும் நிலங்களைப் பற்றிய விவரம் இங்கே..

'விலை’ நிலங்களாகும் ’விளை’ நிலங்கள்!

தமிழக அரசின் நில வங்கி

தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் என்கிற சிப்காட் மூலம்தான் தமிழகத்தில் நிலங்கள் கையகப்படுத்தப்படுகின்றன. பெருந்தொழில் நிறுவனங்களுக்கு ஊக்க நிதியுதவிகளை சிப்காட்தான் வழங்குகிறது. இதுவரை தமிழகத்தின் 12 மாவட்டங்களில் கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் மட்டும் சுமார் 29,500 ஏக்கர். ஆறு சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உட்பட தொழில் வளாகங்களுக்கு ஒதுக்கீட்டுக்குரிய நிலப்பரப்பான 24,055 ஏக்கரில் இதுவரையில் 2,235 தொழில்  நிறுவனங்களுக்கு, 19,471 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

நிறுவனங்களுக்கு நிலத்தை வாங்கித் தருவதற்காக எங்குமே இல்லாத அளவுக்கு தமிழகத்தில் 'நில வங்கி’ ஒன்றை ஏற்படுத்த முடிவு செய்திருக்கிறார்கள். தொழில் முனைவோர்களுக்குத் தேவைப்படும் நிலத்தை உடனடியாக வழங்கும் வகையில் சிப்காட் நிலவங்கி ஒன்றை உருவாக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, காஞ்சிபுரம், திருவள்ளூர், தூத்துக்குடி, பெரம்பலூர் மாவட்டங்களில் சுமார் 12,000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப் போகிறார்கள். தொழிற்சாலைகளை அமைக்க வருபவர்களுக்கு சிப்காட்டால் 50 சதவிகித மானிய விலையில் நிலம் ஒதுக்கீடு, நிலம் பத்திர பதிவுக்கான முத்திரைத்தாள் கட்டணத்தில் 100 சதவிகித விலக்கு, தொழிற்சாலைகளுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதி என சிறப்பு சலுகைகளை வாரி வழங்குகிறது சிப்காட்.

டெல்லியில் குவியும் விவசாயிகள்!

நிலம் கையகப்படுத்துதல் அவசரச் சட்டத்தை அமல்படுத்தக் கூடாது என்ற கோஷத்துடன் நாடு முழுவதும் இருந்தும் டெல்லியில் குவிந்த லட்சக்கணக்கான விவசாயிகளால் அதிர்ந்து கிடக்கிறது டெல்லி. முதல் நாள் 100-க்கும் மேற்பட்ட எம்.பிக்கள் பேரணியாகச் சென்று ஜனாதிபதியிடம் மனுக் கொடுத்தும் அசைந்து கொடுக்காத மோடி சர்க்காரின் பிடிவாதத்தை அசைத்துப்  பார்த்திருக்கிறது விவசாயிகளின் போராட்டம்.

டிராக்டர்கள், மினி வேன்கள், டெம்போ, லாரிகள், மோட்டார் சைக்கிள்கள் என பலவிதமான  வாகனங்களில் விவசாயிகள் டெல்லிக்குப் படையெடுத்து வருகிறார்கள். முன் எப்போதும் இல்லாத அளவுக்கு, இந்த முறை மிக அதிக அளவில் பெண்கள் பங்கேற்றுள்ளனர். முதல்நாள் அன்று, நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணியாகச் சென்ற விவசாயிகளை போலீஸார் தடுத்து நிறுத்தினர். அதனால், ஜந்தர் மந்தர் சாலையிலேயே அமர்ந்து  சாலையோரங்களில் சமையல் செய்து விவசாயிகள் சாப்பிட்டனர்.

சாலையில் ஒரு பக்கம் தற்காலிக மேடையில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் பேசிக்கொண்டு இருந்தார்கள். இன்னொருபுறம், சாலையின் நடுவில் அமர்ந்து அடுத்தகட்ட போராட்டத்தைப் பற்றி விவசாய சங்கத் தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். இந்தப் போராட்டத்தின் மூலம் தீர்வு கிடைக்காதபட்சத்தில், நாடு முழுவதும் கிராமம்தோறும், போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். இந்தியா, சுதந்திரம் வாங்கிய பிறகு இதுவரை சந்தித்திராத அளவிலான மாபெரும் மக்கள் போராட்டமாக அதை மாற்ற வேண்டும் என முடிவு செய்திருக்கிறார்கள்.

பி.ஜே.பிக்கு அதிக செல்வாக்கு உள்ள உத்தரப் பிரதேசம், பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களில் இருந்துதான் அதிக அளவில் விவசாயிகள் வந்துள்ளனர். ஆண்களும், பெண்களுமாக ஆக்ரோஷத்துடன் கையில் தடிகளை வைத்துக்கொண்டு கோஷங்களை எழுப்புகிறார்கள். முதல் நாள் 80 ஆயிரம் பேர் வந்து சேர்ந்தனர். இரண்டாவது நாள் ஒன்றரை லட்சத்தைத் தாண்டிவிட்டது. நாளுக்கு நாள் கூட்டம் அதிகரிப்பதை விரும்பாத மத்திய அரசு, பேச்சுவார்த்தைக்கு வருமாறு விவசாய சங்கத் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தது.

விவசாயிகளுக்குச் சாதகமான முடிவு கிடைக்கும் வரை போராட்டத்தை வாபஸ் பெறுவதாக இல்லை என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் அறிவித்துள்ளனர்.  விவசாயிகளின் கடும் எதிர்ப்பைச் சந்தித்துவரும் இந்த அவசரச் சட்டத்தை மோடி அரசு கைவிடுமா?

ஆர்.குமரேசன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு