Published:Updated:

பூட்டி வைக்கப்படும் பூச்சி மருந்துகள்: காவிரி நீர் விவகாரமும் விவசாயிகள் தற்கொலைத் தடுப்புத் திட்டமும்! #VikatanExclusive

பூட்டி வைக்கப்படும் பூச்சி மருந்துகள்: காவிரி நீர் விவகாரமும் விவசாயிகள் தற்கொலைத் தடுப்புத் திட்டமும்! #VikatanExclusive
பூட்டி வைக்கப்படும் பூச்சி மருந்துகள்: காவிரி நீர் விவகாரமும் விவசாயிகள் தற்கொலைத் தடுப்புத் திட்டமும்! #VikatanExclusive

பூட்டி வைக்கப்படும் பூச்சி மருந்துகள்: காவிரி நீர் விவகாரமும் விவசாயிகள் தற்கொலைத் தடுப்புத் திட்டமும்! #VikatanExclusive

காவிரி நதிநீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைச் செயல்படுத்தாமல் மத்திய அரசு இழுத்தடிக்கும்நிலையில், விவசாயிகள் தற்கொலைத் தடுப்புத் திட்டம் குறித்து அரசுத் தரப்பில் திடீரென அமைதி நிலவுகிறது.

பாசனநீர் கிடைக்காமை, உரம், பூச்சிக்கொல்லிகள், இடுபொருள்கள் விலை உயர்வு, கடன் வட்டி ஆகிய பிரச்னைகளால், மாநிலத்தின் பல இடங்களில் விவசாயிகள் தற்கொலைசெய்துகொள்வது சர்வசாதாரணம் ஆகிவிட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் காவிரிப் பாசனப்பகுதியில் மட்டும் இருநூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இயற்கையாகவும் தற்கொலைசெய்துகொண்டும் மரணமடைந்தனர். ஏற்கெனவே, விவசாயிகளின் பிரச்னைகளைத் தீர்க்கமுடியாமல் அரசு திகைத்துக்கொண்டிருக்க, விவசாயிகளின் மரணங்கள் புதிய நெருக்கடியாக மாறியது. கடந்த ஆண்டில் பிரச்னையின் அளவு குறைந்தபோதும் அதன் முகாந்திரம் அப்படியே நீடிக்கத்தான் செய்தது. 

முன்னர் மகாராஷ்டிர மாநிலத்தில் நூற்றுக்கணக்கில் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டது உலக அளவில் கவனத்தைப் பெற்றது. அதையடுத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஆய்வாளர்கள் அதிகமாகப் பாதிக்கப்பட்ட மகாராஷ்டிரப் பகுதிகளில் மாதக்கணக்கில் தங்கியிருந்து, ஏராளமான துயரக் கதைகளை வெளியில் கொண்டுவந்தனர். அதன் பிறகே மகாராஷ்டிர மாநில விவசாயிகளின் சோகமான வாழ்க்கை முழுவதுமாக வெளியில் தெரிந்தது. 

கடந்த ஆண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான 10 மாதங்களில் மட்டும், 2,414 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். ஐந்து மாவட்டங்கள் அடங்கிய விதர்பாவில் அதிகபட்சமாக 907, மராத்வாடா பகுதியில் 789 எனத் தற்கொலைகள் பதிவாகியுள்ளன. மாநிலத்தின் 36 மாவட்டங்களில் இந்த இரண்டு பகுதிகளைச் சேர்ந்த 19 மாவட்டங்களில், விவசாயமானது கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தது. கடந்த 2016-ல் மகாராஷ்டிரத்தில் 3,052 விவசாயிகள் தற்கொலை செய்தனர்; கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை சற்றே குறைந்தது. 

இது ஏதோ அண்மையில் நிகழத் தொடங்கியது அல்ல; இருபது ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடரும் துயரமே! 1995 முதல் 2013வரையில் மகாராஷ்டிரத்தில் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 60, 750 என்பது தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளிவிவரம். 

ஆண்டுக்கு ஆயிரம் பேர் என்றுகூட இருந்தாலும் அத்தனை பேரின் உயிரிழப்பையும் அப்படியே நடக்கட்டும் என விட்டுவிட முடியுமா? எனவே, விவசாயிகளின் தற்கொலையைத் தடுக்கவேண்டும் எனப் பல தரப்புகளிலிருந்தும் அரசுக்கு அழுத்தம் தரப்பட்டது. அரசின்சார்பிலும் ஐநா போன்ற பன்னாட்டு அமைப்புகளில் பணியாற்றிய வல்லுநர்களும்கூட விதர்பா, மராத்வாடா பகுதி விவசாயிகளின் துயரத்துக்கான தீர்வுகள் குறித்து முடிவுகளை முன்வைத்தனர். அதில் முக்கியமானது பூச்சிக்கொல்லி மருந்தைப் பூட்டிவைக்கும் திட்டமாகும்!

தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகளில் பெரும்பாலானவர்கள் பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்தே இறந்துபோகின்றனர் என்றும் அதனால், ஒவ்வொரு வீட்டிலும் பூச்சிக்கொல்லி வைப்பதைத் தவிர்த்து, கிராமத்தில் பல விவசாயிகளும் தங்களின் பூச்சிக்கொல்லி மருந்தை ஒரு பொது இடத்தில் வைத்துக்கொள்வது; பகலில் மட்டுமே அதைத் திறப்பது; வங்கி லாக்கர்களைப் போல ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு சாவியைத் தருவது; தேவைப்படாத சமயத்தில் அவர்கள் பூச்சிக்கொல்லி மருந்தை எடுக்காதபடி செய்வது என்பது திட்டத்தின் நோக்கமாகும். 

கடந்த ஆண்டுக்கு முந்தைய ஆண்டில் விவசாயிகளின் தற்கொலை தமிழகத்திலும் அதிகரித்ததைத் தொடர்ந்து இங்கும் அப்படியான திட்டத்தைக் கொண்டுவரவேண்டும் என உயர் அதிகாரிகள் அரசுக்கு யோசனை கூறினர். இது குறித்து ஓராண்டுக்கும் மேல் ஆலோசனை செய்யப்பட்டுவரும் நிலையில், கடலூர் மாவட்டத்தில் ஒரு தனியார் அரசுசாரா நிறுவனம், ஒரு கிராமத்தில் பூச்சிக்கொல்லி மருந்தைப் பூட்டிவைக்கும் திட்டத்தைச் செயல்படுத்திவருகிறது. இந்த நிறுவனத்தின் ஆலோசனையுடன் அரசின் சார்பிலேயே இத்திட்டத்தைச் செயல்படுத்த முடிவுசெய்யப்பட்டது. 

தேசியச் சுகாதாரத் திட்டத்தின் அங்கமாக தமிழகச் சுகாதாரத் துறையும் இணைந்து இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கான பூர்வாங்கப் பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன. சில வாரங்களுக்கு முன்னரே, விவசாயிகள் தற்கொலை தொடர்பாக மாநில அரசின் துறைகளிடமிருந்து புள்ளிவிவரம் கேட்கப்பட்டது; அது முழுமையாகக் கிடைத்த பின்னர் எந்தெந்த மாவட்டங்களில் பூச்சிக்கொல்லி பூட்டிவைக்கும் திட்டத்தைச் செயல்படுத்துவது என முடிவெடுக்கப்படும் என்று தேசியச் சுகாதாரத் திட்டத்தின் உயர் அதிகாரி ஒருவர் நம்மிடம் தெரிவித்தார். 

இது குறித்து மாநிலச் சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணனை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகத்தில் தகவல் வெளியாகியிருந்தது. அவரிடம் இத்திட்டத்தைப் பற்றிக் கேட்டபோது, ``அரசுக்கு உயர் அதிகாரிகள் பல யோசனைகளைக் கூறுவார்கள். அவை எல்லாமே இறுதிப்படுத்தப்பட்டு திட்டமாக வரும் எனக் கூறமுடியாது. இந்தத் திட்டத்தைப் பற்றி மத்திய அரசின் தேசியச் சுகாதாரத் திட்ட அதிகாரிகள் சரியான பதிலைக் கூறமுடியும்” என்றார். 

விவசாயிகளின் பிரச்னைக்குக் குறிப்பாக அதிக மரணங்கள் நிகழ்ந்த காவிரிப் பாசனப்பகுதியில், கர்நாடகம் தண்ணீரைத் தராமல் அடாவடிசெய்வது முக்கியப் பிரச்னையாக இருக்கிறது. காவிரித் தண்ணீர் நெருக்கடியாகியுள்ள நிலையில், அதைத் தீர்க்காமல் விவசாயிகளின் தற்கொலைக்கு வேறு காரணங்கள் எனப் புதிய திட்டத்தைக் கொண்டுவந்தால் கடும் எதிர்ப்பைச் சந்திக்க நேரிடும். பட்ஜெட் கூட்டத்திலேயே பூச்சிக்கொல்லியைப் பூட்டிவைக்கும் திட்டத்தை அறிவிக்கப்பட்டிருக்க வேண்டிய திட்டம், இதனால்தான் தாமதம் ஆகிறது என்கிறார்கள் தலைமைச்செயலக அதிகாரிகள். 

இன்னொரு புறம், இந்தத் திட்டத்தால் விவசாயிகளின் தற்கொலைகளைத் தடுத்துவிட முடியாது என்கிற குரலும், மனநல மருத்துவ வல்லுநர்கள் மத்தியிலும் ஒலிக்கிறது. 

அடுத்த கட்டுரைக்கு