அலசல்
Published:Updated:

கட்ட மறந்த இரண்டு அணைகள்! - கொந்தளிப்பில் கொங்கு மண்டலம்

கட்ட மறந்த இரண்டு அணைகள்! - கொந்தளிப்பில் கொங்கு மண்டலம்
பிரீமியம் ஸ்டோரி
News
கட்ட மறந்த இரண்டு அணைகள்! - கொந்தளிப்பில் கொங்கு மண்டலம்

கட்ட மறந்த இரண்டு அணைகள்! - கொந்தளிப்பில் கொங்கு மண்டலம்

கொங்கு மண்டலமே இப்போது தமிழக அரசாக இருக்கிறது. ஆனாலும், கொங்கு மண்டல விவசாயிகளின் 50 ஆண்டுகளுக்கும் மேலான கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்ற குமுறல் ஒலிக்கிறது. “மூன்று தலைமுறைகளாகக் கோரிக்கை வைத்தாகிவிட்டது. தமிழகத்தை ஆண்ட இரண்டு திராவிடக் கட்சிகளுமே எங்களின் குரலுக்குச் செவிமடுக்கவில்லை” என்று பொங்குகிறார்கள் கொங்கு மண்டலத்தின் பி.ஏ.பி பாசனப் பகுதி விவசாயிகள்.

1961-ம் ஆண்டு தமிழக-கேரள அரசுகள் இணைந்து செயல்படுத்திய பரம்பிக்குளம்-ஆழியாறு (பி.ஏ.பி) பாசனத் திட்டத்தில், தமிழகம் சார்பில் இன்னமும் இரண்டு அணைகள் கட்டப்பட வேண்டும். ஆனால், இத்தனை ஆண்டுகளாக வலியுறுத்தியும்கூட, அணைகளைக் கட்டுவதற்குத் தமிழக அரசு எந்த முயற்சியும் எடுக்காமல் இருப்பதால், பி.ஏ.பி பாசன விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி இருக்கிறது.

கட்ட மறந்த இரண்டு அணைகள்! - கொந்தளிப்பில் கொங்கு மண்டலம்

தமிழகத்தில் காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் அரசும், கேரளத்தில் நம்பூதிரிபாட் தலைமையிலான கம்யூனிஸ்ட் அரசும் ஆட்சி செய்த காலத்தில், பி.ஏ.பி பாசனத் திட்டத்தை உருவாக்கினார்கள். கேரளாவின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உற்பத்தியாகி, மேற்கு நோக்கிச் சென்று வீணாக அரபிக்கடலில் கலந்த நதிகளின் தண்ணீரை, கிழக்கு நோக்கித் தமிழகத்துக்குத் திருப்பிவிட்டால், அன்றைய ஒருங்கிணைந்த கோவை மாவட்டம் பாசன வசதி பெறும் என்று நினைத்த தமிழக அரசு, கேரள அரசாங்கத்துடன் பலகட்டப் பேச்சு வார்த்தைகள் நடத்தி இந்தத் திட்டத்தை உருவாக்கியது. அன்றைய பிரதமர் நேரு இத்திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார்.

பி.ஏ.பி திட்டத்தின் மூலம் மேல்நீராறு, கீழ் நீராறு, சோலையாறு, பெருவாரிப் பள்ளம், தூணக்கடவு, பரம்பிக்குளம், ஆழியாறு, திருமூர்த்தி மற்றும் உப்பாறு ஆகிய ஒன்பது அணைகள் கட்டப்பட்டன. திட்டமிட்டபடி ஆனைமலையாறு, நல்லாறு ஆகிய 2 அணைகள் மட்டும் கட்டப்படவில்லை. காரணம், ‘கேரள அரசு இடமலையாறு பகுதியில் ஓர் அணையைக் கட்டிய பிறகே மேற்கண்ட இரண்டு அணைகளையும் தமிழக அரசு கட்ட வேண்டும்’ என்று ஒப்பந்தம் போடப் பட்டிருக்கிறது. அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் 1985-ம் ஆண்டில் கேரள அரசு இடமலையாற்றில் அணையைக் கட்டி முடித்தது. ஆனால் இங்கே ஆனைமலையாற்றையும் நல்லாற்றையும் தமிழக அரசு மறந்தேபோய்விட்டது.
இடமலையாறு அணை கட்டிமுடிக்கப்பட்ட காலத்திலிருந்தே, ஆனைமலையாறு, நல்லாறு அணைகளுக்காகக் கோரிக்கையை முன்வைத்து பி.ஏ.பி விவசாயிகள் குரலெழுப்பி வருகிறார்கள். ஆனால், தமிழக அரசு காதைப் பொத்திக்கொண்டு வேடிக்கை பார்க்கிறது.

கட்ட மறந்த இரண்டு அணைகள்! - கொந்தளிப்பில் கொங்கு மண்டலம்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட்டத் தலைவர் மதுசூதனன், “பி.ஏ.பி திட்டத்தில் உள்ள ஆறுகளில் ஆறு ஆறுகள் மலையின்மீதும், மூன்று ஆறுகள் மலையடிவாரச் சமவெளியிலும் உற்பத்தியாகின்றன. இந்த ஆறுகளின் குறுக்கே அணைகளைக் கட்டி, சுரங்கப்பாதைகள் மற்றும் கால்வாய்கள் வழியாக தண்ணீர் எடுத்து வரப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் ஆரம்ப காலத்தில் 32 டி.எம்.சி வரை தண்ணீர் கிடைத்தது. ஆனால், பிற்காலத்தில் மழைப்பொழிவு குறைந்ததால், இப்போது 13 டி.எம்.சி அளவுக்கே தண்ணீர் கிடைக்கிறது. ஆனைமலையாறு அணையை நாம் கட்டினால் இட்டலியாறு வழியாக கேரளாவின் இடமலையாறு பகுதிக்குச் செல்லும் தண்ணீரை நாம் பெறமுடியும். அதன்மூலம் கூடுதலாக 2.5 டி.எம்.சி தண்ணீர் தமிழகத்துக்குக் கிடைக்கும்.

அதேபோல, கடந்த 40 ஆண்டுகளில் மேல்நீராறு பகுதியில் மட்டும் சராசரியாக 9 டி.எம்.சி தண்ணீர் கிடைத்திருக்கிறது. ஆனால், இந்தத் தண்ணீர் சோலையாறு வழியாக பரம்பிக்குளம், தூணக்கடவு, சர்க்கார்பதி மின்நிலையம் ஆகியவற்றைக் கடந்து திருமூர்த்தி அணையை அடைய 3 நாள்களுக்கும் மேலாகிறது. இந்த நீண்ட பயணத்தில் 2.5 டி.எம்.சி வரை தண்ணீர் வீணாகிறது. இன்னொருபக்கம் பரம்பிக்குளத்திலிருந்து திருமூர்த்தி அணைக்குத் தண்ணீரைக் கொண்டுசெல்லும் காண்டூர் கால்வாயின் அளவு 1,150 கனஅடி மட்டுமே இருப்பதால், நீர் வரத்து அதிகமாக உள்ள காலங்களில், அதிகப்படியான நீர் வீணாக அரபிக் கடலில் போய்க் கலக்கிறது. நல்லாறு அணையை நாம் கட்டினால், வீணாகச் செல்லும் தண்ணீர் முழுமையாக நமக்குக் கிடைக்கும். மேல் நீராறு அணையிலிருந்து நேரடியாகவே நல்லாறு அணைக்கு சுரங்கப்பாதை மூலம் 7.25 டி.எம்.சி தண்ணீரைக் கொண்டுவர முடியும். அந்த நீரும் 4 மணி நேரத்தில் திருமூர்த்தி அணையைச் சென்றடையும். இந்த இரண்டு அணைகளையும் கட்டிக்கொள்ள நமக்கு முழு உரிமை இருந்தும், தமிழக அரசு இன்னமும் காலம் தாழ்த்துகிறது’’ என்றார்.

கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த வெற்றி, “பி.ஏ.பி திட்டம் திட்டமிடப்பட்டபோது, நிர்ணயிக்கப்பட்ட பாசனப் பரப்பின் அளவு 2 லட்சத்து 48 ஆயிரம் ஏக்கர்தான். ஆனால், அதன்பின் பல்வேறு அரசியல் காரணங்களால் அதை 4 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கராக விரிவுபடுத்திவிட்டார்கள். கடந்த ஆண்டு ஏற்பட்ட கடும் வறட்சியால் பி.ஏ.பி பாசனப் பகுதிகளில் மட்டும் லட்சக்கணக்கான தென்னை மரங்கள் காய்ந்து கருகிப்போய்விட்டன. பல்வேறு கிராமங்களுக்கான குடிநீர் ஆதாரமும் கேள்விக்குறியாகி இருக்கிறது. இனியும் இந்த அணைகளைக் கட்டாமல் காலம் கடத்தினால், கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட விவசாயம் முற்றிலுமாகச் சிதைந்துபோகும். எனவே இப்பகுதியைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சிகளையும், விவசாய சங்கங்களையும் ஒருங்கிணைத்து, தண்ணீருக்கான ஓர் இயக்கத்தை உருவாக்கியிருக்கிறோம். பி.ஏ.பி பாசனத்துக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களுக்கும் சென்று விழிப்பு உணர்வுக் கூட்டம் நடத்தி தொடர் போராட்டங்களைக் கட்டமைக்கப் போகிறோம்” என்றார்.

கட்ட மறந்த இரண்டு அணைகள்! - கொந்தளிப்பில் கொங்கு மண்டலம்

நமக்கு உரிமையுள்ள அணைகளைக் கட்டுவதில் ஏன் இந்தத் தாமதம் என அதிகாரிகள் வட்டாரத்தில் விசாரித்தோம். “அணைகளைக் கட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய ஐந்து பேர் கொண்ட நிபுணர் குழுவைத் தமிழக அரசு அமைத்திருக்கிறது. இந்தக் குழு அடுத்த ஆறு மாதங்கள்வரை தொடர் ஆய்வுகள் நடத்தி, அறிக்கையை அரசுக்குத் தரும். அதன்பிறகே அணைகள் கட்டுவது தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும். ஆனால், அது அத்தனை சுலபமல்ல. கேரள அரசின் ஒப்புதல் இல்லாமல் நம்மால் அணைகளைக் கட்ட முடியாது. இத்தனை வருடங்கள் கடந்துவிட்டதால் கேரள அரசும் இந்தத் திட்டத்தை முடக்குவதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளது. பி.ஏ.பி திட்டம் நடைமுறைக்கு வந்த காலத்திலேயே இரு மாநில அதிகாரிகளையும் உள்ளடக்கிய கூட்டுநீர் ஒழுங்கு வாரியம் அமைக்கப்பட்டது.

வழக்கமாக மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கூடும் இந்த வாரியத்தைத் தமிழக அதிகாரிகள் ஒரு பொருட்டாகவே மதித்ததில்லை. இப்போது நம் தேவைக்காகக் கேரள அதிகாரிகளைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்தால், அவர்கள் அவ்வளவு எளிதில் பிடிகொடுக்க மாட்டார்கள். எனவே இந்தத் திட்டம் இன்னும் இழுத்தடிக்கப்படுமே தவிர, இப்போதைக்கு அணைகளைக் கட்டுவதற்கான வாய்ப்பே இல்லை” என்று கைவிரிக்கிறார் பெயர் வெளியிட விரும்பாத ஒரு பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்.

பொதுப்பணித் துறையைத் தன் வசம் வைத்திருக்கும் முதல்வர் எடப்பாடி, மெரினாவில் ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் கட்டுவதைச் சாதனையாக மார்தட்டிக்கொள்கிறார். அணைகள் கட்டி, பி.ஏ.பி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அவர் காப்பாற்றுவாரா?

- தி.ஜெயப்பிரகாஷ்
படங்கள்: தி.விஜய்