Published:Updated:

`எங்களை புதைத்துவிட்டு மின்கோபுரங்கள் அமையுங்கள்’- கொதிக்கும் விவசாயிகள்

`எங்களை புதைத்துவிட்டு மின்கோபுரங்கள் அமையுங்கள்’- கொதிக்கும் விவசாயிகள்
`எங்களை புதைத்துவிட்டு மின்கோபுரங்கள் அமையுங்கள்’- கொதிக்கும் விவசாயிகள்

`எங்களை புதைத்துவிட்டு மின்கோபுரங்கள் அமையுங்கள்’- கொதிக்கும் விவசாயிகள்

விவசாய விளை நிலங்களில் மின்கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் இறங்கியிருக்கின்றனர். கோயமுத்தூர், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், திருவண்ணாமலை, வேலூர், தர்மபுரி ஆகிய 8 மாவட்டங்களில் டிசம்பர் 17-ம் தேதி ஆரம்பித்த தொடர் காத்திருப்பு போராட்டம், 3 நாள்களைக் கடந்தும் தீவிர கனலாகக் கொதிக்கிறது.

விவசாய நிலங்களில் மின்கோபுரங்கள் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒருசில சலசலப்புகள் மட்டுமே எழுந்துவந்த நிலையில், 8 மாவட்டங்களில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் விவசாயிகள் இறங்கியிருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 8 மாவட்டங்களிலும் போராட்டம் நடத்துவதற்கு போலீஸார் அனுமதி மறுக்க, உயர்நீதிமன்றத்துக்குச் சென்று, ‘விவசாயிகளுடைய சொந்த நிலத்தில், சட்டம் ஒழுங்கு கெடாமல் அமைதியான முறையில் அறிவழியில் போராட எங்களை அனுமதிக்க வேண்டும்’ என அனுமதி பெற்று போராட்டத்தில் இறங்கியிருக்கின்றனர்.

3 நாள்களைக் கடந்தும் போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வது என்ற தீர்க்கமான முடிவில் விவசாயிகள் இறங்கியிருக்கின்றனர். மேலும், பாடை கட்டுவது, ஒப்பாரி வைப்பது, என பல்வேறு வடிவங்களில் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்தத் தொடர் காத்திருப்பு போராட்டத்துக்கு அரசியல் தலைவர்கள் பலரும் ஆதரவளித்து வருகின்றனர். ஆனால், ஆளும் அரசாங்கமோ அசைந்து கொடுப்பதாகத் தெரியவில்லை.

போராட்டக் களத்தில் இருந்த விவசாயிகள் சிலரிடம் பேசினோம். ``எங்களுடைய கோரிக்கை நிறைவேறும் வரை காத்திருப்பு போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என்கின்ற உறுதியில் இருக்கிறோம். உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்படும் நிலங்களில் ஏற்படும் பயிர் சேதம் மற்றும் மரங்களுடைய சேதங்களுக்குத் தான் இழப்பீடு தருவேன் என்கிறார்கள். மின்கோபுரம் அமைக்கப்பட்டால் அந்த விவசாய நிலத்தின் மதிப்பே போய்விடும். எனவே, விவசாய நிலத்தின் மதிப்பு குறைந்ததற்கான இழப்பீடும், வருடாந்திர வாடகையும் கொடுக்க அரசு முன்வர வேண்டும். நிலத்தோட மதிப்புதான் எங்களோட வாழ்வாதாரமே. நிலத்தை நம்பி தான் நாங்க கடன் வாங்கி எங்க புள்ளைங்களை படிக்க வச்சும், கல்யாணம் செஞ்சும் கொடுத்திட்டு வர்றோம். அப்படியிருக்க, எங்களுடைய எதிர்காலம் எங்க கண்ணு முன்னாடியே அழிஞ்சி போறதை நாங்க எப்படி வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்க முடியும். குழி தோண்டி எங்களை பொதைச்சிட்டு, எங்க மேல வேணும்னா டவர் போடுங்க” என்கின்றனர் விரக்தியுடன்...  

இதுகுறித்து உயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டியக்க ஒருங்கிணைப்பாளரான வழக்கறிஞர் ஈசன் அவர்களிடம் பேசினோம். ``விவசாய நிலங்கள் வழியாக உயர்மின் கோபுரங்கள் அமைக்க 13 மாவட்டங்களில் மொத்தம் 12 திட்டங்களை வகுத்திருக்கிறார்கள். அதில் இன்னும் 6 திட்டங்கள் தொடங்கப்படவே இல்லை. கிட்டத்தட்ட 70 சதவிகித வேலை முடிந்த ஒருசில திட்டங்களையே இப்போது போராட்டத்தின் மூலமாக நிறுத்தி வைத்திருக்கிறோம். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடுகள் கொடுக்கப்பட வேண்டுமெனவும், இனிமேல் செயல்படுத்தப்படும் திட்டங்களைத் தரைவழியாக கேபிள் அமைத்துக் கொண்டு செல்ல வேண்டுமென்றும் போராடி வருகிறோம். ஆனால், அரசு தரப்பில் இருந்து எவ்வித நல்ல முடிவும் சொல்லப்படவில்லை.

‘பேச்சுவார்த்தை நடந்துக்கிட்டு இருக்கு, நீங்க பாட்டுக்கு போராட்டத்துல இறங்கீட்டீங்க’ என சம்பந்தப்பட்ட அமைச்சர் தரப்பிலிருந்து அழுத்தம் தான் கொடுக்கிறார்களே தவிர, பிரச்னையை நல்ல படியாக தீர்க்க முன்வர மறுக்கிறார்கள். கடந்த மூன்று நாள்களாக வெயில், பனி பாராது பாதிக்கப்பட்ட விவசாயிகள் போராடி வருகின்றனர். ஆனால், அரசு தரப்பு எங்களுடைய வலியை புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை. இன்னும் 3 நாள் பொறுத்திருந்து பார்ப்போம். அதுக்கப்புறமும் அரசாங்கத்துல இருந்து எந்த சத்தமும் வரலைன்னா, நாங்க தொடர் உண்ணாவிரதப் போராட்டத்துல இறங்கத் தயாராக இருக்கோம். எங்களுக்கு வேற வழி இல்லை” என்றார் தீர்க்கமான குரலில்...

விவசாயிகளின் குரலுக்கு இப்போதாவது அரசு அசைந்து கொடுக்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 

அடுத்த கட்டுரைக்கு